இப்புவியில் உள்ள பொருள்களில் தன் நிலையான இருத்தலுக்குப் பிறபொருளைச் சாராமைகொண்டு இயல்வதே உண்மைப் பொருளாம். அப்பொருளை மெய்ப்பிக்க இன்னொரு பொருள் தேவையில்லை. அப்பொருளை உளதாய் ஆக்குதற்கு இன்னொன்று தேவையில்லை. அது தானே இயல்வது. காலத்தால் அழிவது எப்பொருட்கும் இயல்பு ஆயினும் பன்னெடுங்காலம் அது இயல்வதாயின், காலத்தால் அழியாமையை நெருங்கி நிற்கும் தன்மை அஃது உடையது என்று நாம் கொள்ளலாம். ஒரு மண் பாண்டத்தில் ஒன்றை எழுதிக்கொடுத்தால் அஃது விரைவில் அழிதல் தன்மை உடையதாகிவிடும் . ஒரு பொற்பட்டையிலோ செப்புப்பட்டையிலோ எழுதித்தரின், அது நெடுநாள் உலகி லுள்ளோருக்குக் காணக்கிடைக்கும் என்று அறிக.
நெடுநாள் அழியாதிருத்தலுக்கு. ஒருபொருள் தன்னைத் தான் சார்ந்திருத்தல் வேண்டும்.
சாசனம் என்பது நீண்டநாள் நிலைத்திருக்கும் தன்மையை உடைய ஓர் ஆக்கம் ஆகும். இச்சொல்லில் இரண்டு உறைவுச்சொற்களும் ஒரு விகுதியும் உள்ளன. அவை: சார்(பு); தன்; அம் (இது விகுதி).
சார்பு என்பதில் "சார்" என்பது வினைச்சொல். இது கடை எழுத்தாகிய ரகர மெய் மறைந்து "சா" என்று நின்றது.
தன் என்பது சன் என்று திரிந்தது. இது எவ்வாறு எனின், தங்கு என்ற சொல் சங்கு என்று திரிந்ததுபோலுமே ஆகும். ஓட்டினுள் தங்கி இருக்கும் உயிரியே சங்கு ஆகும். தன் > சன்; தங்கு> சங்கு. அரசன் தரும் விருந்தோம்பலுக்குத் தங்கி உண்டுமகிழ்ந்து, பின் அவன்முன் பரிசில் பெறும் இடம் சங்கம் ஆனது காண்க. தங்கு> சங்கு> சங்கம் என்று திரிந்தது போலாம். அமைதல் காட்டும் விகுதியே அம் ஆகும்.
ஒரு சான்று வேண்டின் தன்னைத் தான் மெய்ப்பித்துக்கொள்வது: சார்+ தன் + அம் > சா+ சன் + அம் > சாசனம் ஆனது. "தன்னையே சார்ந்தியல்வது". ஒரு சாசனத்துக்கு வேறு சான்று வேண்டாமையே அதன் பொருண்மை.
இதன் மூலச்சொல் சார்தனம் எனற்பாலது அவ்வடிவில் கிட்டாமைக்கு, அச்சொல் வெகுநாள் பண்டை அரசுகளில் புழக்கத்திலிருந்து திரிந்து பின்னர் எழுத்தில் அதனைப் பதிந்தோரால் அறியப்பட்டமையே காரணமாம் என்பது தெளிவாகும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
edited on 23092022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.