Pages

திங்கள், 8 ஆகஸ்ட், 2022

சா, ஜா - இறத்தலும் பிறத்தலும் தொடர்பு.

 இந்து மதத்தின் கொள்கைப்படி,  இறந்தவன் மீண்டும் பிறக்கிறான்,  பிறந்தவனே மீண்டும் இறக்கிறான். இதன் தன்மை அறிந்த இறைக்கொள்கை அறிஞர்  சிலர், இரண்டும் அணுக்கத் தொடர்பு உடையவை என்றனர். கண்ணால் கண்டது மட்டுமே நம்புதற்குரியது என்பவர் இவ்விரண்டிற்கும் தொடர்பு இல்லை என்று சொல்வதைத் தவிர, வேறொன்றும் கூறுதற்கில்லை.  ஏனெனில் அவருக்குக் காட்சியே மாட்சியாகிவிடுகிறது. அதனின் மிக்கதொன்றில்லை.

ஐம்புலன் கடந்த ஆய்வில் வெளிப்படுவனவாக உணரப்படுபவை பலவாகும்.அவற்றுள்  ஒன்றை விடுத்து  இன்னொன்றை நம்புதலானது, தெரிவுசெய்தலாகிவிடும்.  மனிதர்கள் அதையும் செய்கிறார்கள்.

இதிலிருந்து, சாதலும் பிறத்தலும் தொடர்பு உடையன என்ற கருத்து பலவிடங்களில் வேரூன்றி நின்றதால், பிறத்தல் என்று பொருள்படும் "ஜா" என்ற சங்கதச்சொல்,  சா  என்பதனுடன் தாயும் பிள்ளையும் போன்ற தொடர்பினது என்று உணர்க.  சா என்பதிலிருந்து ஜா அமைந்தது.  இரண்டிற்கும் இக்கொள்கை அளவில் ஆனதொரு வேற்றுமை இல்லை.

மட்டை எந்தக் குட்டையில் கிடக்கிறதோ,  அந்தக் குட்டையில் உள்ளவற்றைத் தன் தோய்வில் அந்த மட்டை கொண்டிலங்கவே வேண்டுமென்பது விதியாகும்.  மீறல் என்பது அந்த மட்டைக்குக் கிட்டும் வசதி அன்று. (இல்லை).

இறந்தவனே பிறக்கிறான்.  பிறந்தவனே இறக்கிறான்.  உண்மையாயின், துயரம் கொள்ளற்குக் காரணம் யாதுமில்லை. இரண்டும் ஒன்றுதான். "உறங்குதல் போலும் சாக்காடு, உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பு"  என்றார் தெய்வப்புலவரென்ற தேவர். இதற்கு இருபொருள் உள. ஒன்று மேற்பரப்பிலும் இன்னொன்று ஆழ்புதைவிலும் கிடைக்கின்றன. அறிந்து மகிழற்பாலதிதுவாம்.

ஜாதி என்ற சொல்லுக்கு  முன்னோடி சாதி  ஆகும்.  இது சார்தி >  சாதி ஆகும். சார்பினது என்று பொருள். சார்ந்தது என்று கூறுவதும் பொருத்தமே.  "நீர்வாழ் சாதி" என்ற தொல்காப்பியத் தொடர் காண்க. சாதி என்ற நீர்வாழ்வன குறிக்கும் சொல்லானது, பின்னர் அல்லாதனவாகிய மனித இனத்துக்கும் பயன்பட்டது.  அதற்கேற்ப,  சா என்ற இன்னொரு சொல்லின் இறப்புக் கருத்தினின்று பிறத்தற் கருத்து உருவெடுத்து, மொழியானது வளர்ச்சிகண்டது என்பதறிக. சார்(தல்), சாய்(தல்), சா(தல்)  என்பவற்றுள் சொற்கருத்துகள் வளர்ச்சி கண்டன என்பதை அறிந்துகொள்ளுதல் கடினமன்று.  ர் என்ற மெய்யெழுத்து மறைந்திடும் சொல்லைத் தேடி அலையவேண்டியதில்லை.  வாரான், வருவான் என்ற சொற்களில் உள்ள ர்,  ஏன்  வா என்ற வினைப்பகுதியில் இல்லை என்று தன்னைத்தான் அறிஞனொருவன் கேட்டுக்கொள்வது அறிவுடைமை ஆகும்.  பழைய இடுகைகளில் இவற்றை விளக்கியுள்ளேம். எம் பழைய இடுகைகளைப் பலர் வைத்துள்ளனர். எப்படித் தெரியுமென்றால், யாம் வேறுவிதமாக விளக்கும்போது, அவர்கள் எமக்கு எழுதி,  நீர் இது கூறினீர், விளக்குக என்பதனால் எமக்கு மிக்க மகிழ்ச்சி ஆகிவிடுகிறது. அவர்கள் காட்டும் சில இப்போது இணையத்தில் மறைந்துவிட்டமையும் உண்டு. அவர்களுக்கு நன்றி.

தொடர்ந்து கவனிக்கவும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.