Pages

வியாழன், 28 ஜூலை, 2022

உடம்படு மெய் என்றால் என்ன?

 உடம்படு மெய் என்பதென்ன என்றும் முன்னம் கேள்விப்படவும் இல்லையென்றால் நீங்கள் இதைப் படித்து அறிந்துகொள்ளுங்கள். தெரிந்திருந்தால் இதைப் படித்து நேரத்தை வீணாக்குதல் வேண்டா.

தமிழ்மொழியின் இயல்பு என்னவென்றால் முன்வந்த சொல்லும் அடுத்து வந்த சொல்லும் ஒட்டிக்கொண்டு நடைபெறுதாகும்.  சிலமொழிகளில் இவ்வாறு சொற்கள் ஒட்டிக்கொண்டு இயல்வதில்லை.  ஒட்டிக்கொள்வதை அம்மொழிகளின் இலக்கணம் வெறுத்து ஒதுக்கும் மரபுடையன என்னலாம்.

தமிழில் சொற்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் ஒட்டிக்கொண்டு வழங்கும். ஒட்டிக்கொள்வதில் என்ன நன்மை என்றால்,  சொல்லை  வாயினின்று வெளிப்படுத்துதல் எளிதாக்கம் பெறுவதும் சொல்லில் இனிமை தோன்றுதலும் ஆகும்.  சில மொழிகளில் ஒட்டிக்கொள்ளுதலால்  பொருளில் கெடுதல் அல்லது புரிந்துகொள்ளுதலில் மாறுபாடு உண்டாகலாம்.  இனியும் சொல்வதானால் ஒட்டுதலால் சொற்களில் நீட்சி ( நீளமாகுதல் ) ஏற்பட்டு,  சொற்கள் தனித்தனியாய் இல்லாமல் ஒரு மருட்சியை விளைவிக்கலாம்.  எடுத்துக்காட்டாக,  லிம் சிம் என்பவற்றை ஒட்டினால்  அது லிங்சிம் என்று   வந்து லிம் என்ற சொல் லிங் என்ற சொல்லுடன் பொருள்மாறுபாட்டினை உண்டாக்கலாம். இரண்டனுக்கும் ஒருபொருளாயின் சரிதான், வெவ்வேறு பொருளானால்  மாறுபாடு ஊர்ந்துவிடும் என்பதை அறிக.  ஆனால் சிலவேளைகளில் லிம் என்பது இன்னொரு கிளைமொழிக்குச் சென்றேறும் காலை லிங் என்றாயினும் அதே பொருண்மை உடையதாய் இலங்குவதும் உண்டு.  இன்னொரு கிளைமொழி ஆவதால் அஃது எந்தப் பொருள் மாறுபாட்டையும் ஏற்படுத்துவதில்லை.

கோ இல் எனின் தமிழில் அரசனின் கட்டடம் அல்லது இடம் என்னும் பொருளுடையது. ஆனால் ஒட்டு இன்றி அவ்வாறே விட்டுவிட்டால், அரசனின் இடம் என்று மட்டும் பொருள்தராமல்,  அரசனைத் தனியாகவும் இடத்தைத் தனியாகவும் குறித்தலையும் கொண்டு இருபொருளாய் முன்வரவைக்கும்.  இஃது சரியன்று. கோயில் என்று ஓரிடத்தையே குறிக்கின்றோம். ஆகையால் ஒட்டிச் சொல்வதே சரியாகும்.  ஆனால் கோ இல் இரண்டினையும் ஒட்டுப்படுத்துகையில் கோயில், கோவில் என்று இரண்டு வகையிலும் சொல்ல இயல்கின்றது.  கோயில் என்பதில் ய் என்ற யகர மெய் ஒட்டெழுத்தாக வருகிறது; கோவில் என்னும்போது வகரமெய் ஒட்டெழுத்தாக வருகிறது.   சிலசொற்கள் இவ்வாறு வருமாயின் பொருள் மாறுபட்டு விடுகிறது.   ஆகவே இருவேறு ஒட்டுக்களிலும் பொருண்மை மாறுபாடுதலும் அஃது இன்மையும் காணலாகும்.

இத்தைய மெய் எழுத்தையே நாம் உடம்படு மெய் என்று சொல்கிறோம். இவ்வாறு வருபவை சொல்லொட்டிகள். இது மொழிமரபாகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.