Pages

வெள்ளி, 25 மார்ச், 2022

மனோன்மணி - சொல் வந்த விதம்.

 மனோன்மணி என்ற ஒரு திரைப்படம் சென்ற நூற்றாண்டில் வெளிவந்து வெற்றிப்படமாய் அமைந்தது.  இந்தப் படத்தின் கதை, மனோன்மணீயம் என்ற நாடகக் காப்பியத்தினை ஒட்டி வரையப்பட்டது. அக்காப்பியத்தினை  சுந்தரம் பிள்ளை என்ற பெரும்புலவர் எழுதி வெளியிட்டார்.   தமிழ்மொழியில்  ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்தில் ஆக்கியவைபோன்று நாடகங்கள் இல்லாத குறையைப் போக்க,  இப்புலவர் இதனை யாத்தளித்துள்ளார்.

மனோன்மணீயம், மனோன்மணி என்ற பதங்கள் எவ்வாறு அமைந்தவை என்பதைத் தமிழாசிரியர் விளக்கியுள்ளனர்.  அவர்கள் அளித்துள்ள விளக்கங்களை ஆங்குக் காண்க.  இங்கு தரப்படும் விளக்கம்,  தமிழ்மொழியின் மூலமாக அறியப்பட்டவை.  ஆதலின் அவற்றினின்று இவ்விளக்கம் வேறுபடும் என்பதை உணர்ந்துகொள்க.

மனோன்மணி என்ற சொல்லில்,  மனம் என்பது உள்ளது.  இதைத் தமிழ்ச்சொல் என்றே கொண்டு,  அதற்குத் தனி விளக்கம் எதுவும் தரப்படவில்லை. இச்சொல்லுக்குப் பாவாணர் தந்த அமைப்புவிளக்கம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

மனம் என்பதில் மன் என்பது பகுதி.  அம் என்பது விகுதி.

1.மன்.

2.  ஒன் என்பது அடுத்த உள்ளுறைவு ஆகும்.   இதன் முழு வினைச்சொல் ஒன்னுதல் என்பது.  இதன் பொருள் பொருந்துதல்.   ஒன்னு என்பதில் ஒன் என்பது பகுதி.  இது முதனிலை திரிந்து ஓன் என்று  ஆகும்.   ஒன்> ஓன் என்று நெடிலாயிற்று.    ஓன் என்ற தனிச்சொல் காணப்படவில்லை என்றாலும்,  இலக்கணத்தின்படி,  நீட்சிபெற்றுத்  தொழிற்பெயர் அமையும்.   எ-டு:  இவ்வாறு நீண்டு அமைந்த தொழிற்பெயர் சுடு(தல்) > சூடு.

மின்னுதல் கருத்தில் வந்த மீன் என்ற சொல்லையும் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.   மின் > மீன்.

ஓன் என்ற தனிச்சொல் காணப்படாவிட்டால்,  அவ்வாறு ஒரு சொல்லமைந்து அது மற்றொரு சொல்லின் உள்ளுறைவாக இருக்கக்கூடாது என்று எந்த விதியும் இல்லை.  இவ்வாறு தனிச்சொல்லாக இல்லாத அமைப்பு உள்ளுறைவினை வேறு சொல்லாக்கத்தில் ஆங்காங்கு காட்டியுள்ளோம்.  அங்குக் கண்டு தெளிக.

3. மணி என்பது தமிழில் உள்ள சொல். இதற்கு இங்கு தனி விளக்கம் தரப்படவில்லை.   எம் பழைய இடுகைகளைப் படித்து இதனைக் காணலாம்.

மனம் + ஓன் + மணி >  மன ஓன் மணி >  மனோன்மணி  என்றாகும்.  மனம் பொருந்திய மணி என்பது பொருளாகிறது.   மனோன்மணி என்பதில் வகர அல்லது  யகர உடம்படு மெய்கள் தேவையற்றவை.  நிலைமொழி வருமொழிப் புணர்ச்சி ஆயின் தேவைப்பட்டிருக்கலாம்.  மனவோன்மணி, மனயோன்மணி என்பவை இன்னாவோசை பயப்பன.

பாணினி  (என்ற பாணப்புலவர் வரைந்த )  இலக்கணத்தை இங்குக் கைக்கொள்ளவில்லை என்பதறிக.

யாம் விவரித்தபடி விளக்க, இது தனித்தமிழாகிறது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

இடுகைகளைச் சுருக்கமாக வைத்துக்கொள்ள, முன்னரே கூறியவற்றை குறைத்து வெளியிடுதல் இன்றியமையாதது ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.