Pages

புதன், 2 பிப்ரவரி, 2022

அடுக்குமாடி வீட்டிலும் பசுமை



 


அடுக்கு மாடி வீட்டினில் வாழ்பவர்கள் ----   அவை

விடுத்தே  எங்கும் செல்லுதற் காவதில்லார்,

ஒடுங்கி  ஆங்கே உள்கிடப்  பாரெனினும்---- சட்டிச்

செடிகள் வைத்துச் சீர்பெறற்  கானவரே.


சட்டிச் செடிகள் பட்டென வளர்ந்தனவே ----   தம்மில்

கட்டிப் பிடித்து  நிற்புறும் நெருக்கமுடன்,

ஒட்டிப்  பசுமை  உற்றுநிற் கிறபடியால் --- காண்மனம்

எட்டிப் பிடிக்கும் எல்லையை மகிழ்வினிலே. 


பொருள்:

விடுத்து -  விட்டு நீங்கி 

செல்லுதற்காவது இல்லார் --  செல்ல முடியும் நிலைமை இல்லாதவர்.

ஒடுங்கி உள்கிடப்பார் ---  அந்த வீடுகளுக்குள் நடமாட்டமின்றி இருப்பவர்கள்

பட்டென -  பட்டுத் துணி போல

நிற்பு - நிற்கும் நிலை

உறும் -  அடைகின்ற 

மகிழ்வினிலே -  களிப்பின்மூலமாக.

இது ஆசிரியத்தளை கொண்டு எழுதப்பட்டுள்ளது. தனிச்சொற்கள்

வந்துள்ளன.  வெண்டளை விலக்கப்படவில்லை.









காலை எழுந்தவுடன் உள்ளக் கனிவுடனே

சோலைப்  பசுமைதனைச் சொந்த  அகத்ததன்முன்

வேலை  அழுத்தமெனும் வேண்டாத் துயரமில்லா

மாலைச் சரமகிழ்வை மாந்தத்  தருவனமே. 


பொருள்:

அகத்ததன்முன் ----  வீட்டின் முன்பக்கத்தில்

வேலை அழுத்தம்  - -- நீங்கள் செய்துமுடிக்கும்வரை உங்களை வருத்தும்

சோலிகளின் சுமை.

மாலைச் சர மகிழ்வை --- பூமாலை  அடுத்தடுத்துத் தொடுக்கப்பட்டுக்

காட்சிதரும் களிப்பைப் குறிக்கும் தொடர்.

தரு -  தருகின்ற

வனமே -  பசுந்தோட்டம் ஆகும்.


இது செப்பலோசை  தழுவி வெண்டளையில் பாடப்பெற்றுள்ளது.

மாந்தத் தருவனமே என்பதை   மாந்து என்று நிறுத்தினால் ,  இது இன்னிசை

வெண்பா போல் சென்று முடியும்.  ஆனால் துள்ளலோசை பிறக்க 

முடிந்துள்ளது. இது  சீர்கள் நிரலால் எழுகிறது.






செடிச்சட்டிகளின் படம்.

அறிவீர் மகிழ்வீர்.

மீள்பார்வை பின்னர்.

1 கருத்து:

  1. பாடலாக்கக் குறிப்புகளும் இன்று 04022022 சேர்க்கப்பட்டுள்ளன. நீங்கள் உங்கள் கருத்துரையை இடலாம். நன்றி.

    பதிலளிநீக்கு

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.