Pages

ஞாயிறு, 2 ஜனவரி, 2022

நிறுத்தம் ஆக்கி அருகில் நிகழ்த்தல் - நிராகரித்தல்.

 அருகுதல் என்பதன் பொருளைக் காண்போம்.    அருக்குதல் - Show disinclination.  ( This meaning is close to rejecting).

 

எதுவுமொன்று அரிதாகிவிட்டால்,  அதை அருகுதல் என்போம். அதாவது ஏறத்தாழக் கிட்டாத நிலைக்கு வந்துவிட்டது என்று சொல்லி விளக்கலாம். இன்னும் திறமையாக விளக்க முற்படுங்கள்.  பின்னூட்டம் இடுங்கள்.  எடுத்துக்காட்டாக, வளி என்ற சொல் வழக்கில் அருகிவிட்டது என்று சொன்னால், அந்தச் சொல் ஏறத்தாழப் பயன்பாட்டில் இல்லாததாகிவிட்டது என்பதே பொருள். சிற்றூரார் இதை அரிசாகிவிட்டது என்பர்.  இன்னும் வழங்குகிறது, இங்கொன்றும் அங்கொன்றுமாகச் செவியை எட்டுகிறது என்பதே இங்கு வரும் கருத்தாகும்.

ஆங்கிலத்தில்  diminish, reduced, reaching scarcity என்று விளக்கினால் சரியாக இருக்கும்.

அருகில் என்ற சொல், பக்கத்தில் என்று பொருள்படுவதும்,  தொட்டும் தொடாமல் இருக்கும் நிலையைக் காட்டுவதும் கருத்தில் கொள்க.  அரித்தல் என்ற இகரம் இணைந்த சொல், அரு என்ற மூலத்திலிருந்தே வருகிறது.  இதற்கு ஒப்புமையாக ஒன்றைச் சொல்லவேண்டுமென்றால்,  அடு என்பதினின்று அடி என்ற சொல் வந்ததனைக் கூறலாம்.  அடுத்துச் செல்ல இயலாமல் அடித்தல் இயலாதது காண்க. அதேபோல, அருகிற் செல்லாமல் அரித்தல் இயலாததே.  அருகிற் சென்றதன்பால் சேர்ந்துவிடுதலும் அதைத் தன் பால் கொணர்தலும் ஆன செயல்களில் ஒன்று  நிகழ்வதையே அரித்தல் என்ற துணைவினை குறிக்கும்.  சொறி சிறங்கு வந்து அரித்தல் வேறு.

அரு -  பக்கம் செல்லுதல்.

இ  -  இங்கு. அதாவது உம்பால் வரச் செய்தல்.

அரு + இ > அரித்தல்.  (  Operating at a position where there is O gap between you and the thing or person approached).   இ என்றால் இங்கு என்ற சுட்டடிச் சொல்.  அரு என்பது அங்கு என்ற சுட்டடிச் சொல்லில் விளைந்தது.  ஆகவே அரு இ என்பதில் அங்கும் இங்கும் ஆகிய இரண்டும் இணைந்துவிடுகிறது.

          அடி என்பதும் அன்னது.  அடு+ இ > அடி. 

நிறு என்பது நிறுத்தம் செய்தல்.

ஆகுதல் குறிக்க வரும் ஆகு என்பது  "happen" என்பதை உணர்த்துகிறது.

நிறு + ஆகு + அரு + இ

நிறாகரி  என்று உருக்கொள்ளும் சொல்.   (  நிறுத்தும் நிலைக்கு நெருங்கிச் செல் என்னில் பொருள் விளக்கமாகும் )

இதுதான் நிராகரி என்ற சொல்லாகிவிட்டது.

இந்தச் சொல்லமைப்பில் எல்லாப் பாகங்களும் ஒழுங்காக உள்ளன, பொருளும் இயைபாக வருகிறது.  இங்கு என்ன நிகழ்ந்தது என்றால், றா என்பதற்குப் பதிலாக ரா என்பது வந்துள்ளது.  இது உச்சரிப்பு மென்மையானதைக் குறிப்பதாகக் கொள்ளலாம். அல்லது,  சொல்லின் ஆக்கம் அறியாமல் வேறு எழுத்தை இணையொலிப்பாகப்  பயன்படுத்திய செயலாகவும் இருத்தல் கூடும்.

          தமிழில் சில சொற்கள் ரகர றகர வேறுபாடின்றி வரும்.  அவற்றின்                          பட்டியலை இலக்கண நூல்களிலோ அகரவரிசைகளிலோ காண்க. 

இவ்வாறாக விளக்கம் கிட்டுதலால், இச்சொல்லைச் சரியாக   இடைக்கால புலவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்றே    இவ்வாய்வில்  நன்கு வெளிப்படுகிறது.

           இது ஒரு "பல்லுருப்புணர்வு"ச்  சொல் என்க. ஒரு பகுதியும் ஒரு விகுதியும்               உளவாய்ப் புனைவுறுவனவே அடிப்படைச் சொற்கள். ( எ-டு: கண்+ அம் -               கணம்.  (கண்ணிமைப் பொழுது).

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.