ஊரடங்கிப் போன உலகத்தொற் றாலே,
திருவணக் கஞ்செய்யும் கோயில் --- கூடத்
திரளான கூட்டம்வந் தருளாண்மை மேவ,
ஒருவாமல் மூடினர் வாசல் ---- பூசைக்கு
ஒருசிலர் தாம்வந்தே குறுகினர் கண்டு!
திருவே நிலன்காக்க என்றே ---- மனம்
தேம்பியே நின்றவண் உருகிய துண்டு.
அந்த நெருக்கடிக் காலம் --- எனினும்
அயராது பூசைகள் அளித்தலும் உற்றோம்.
இந்தப் படமந்தப் போதில் ---- எடுத்தே
எங்கள் விழிகளில் ஒற்றிக்க ளித்தோம்.
விந்தை அருளம்மை நெஞ்சும் ---- இரங்கி
வேண்டுதல் ஏற்றனள் ஆற்றினள் எம்மை.
முந்தையின் றைவினை எல்லாம் --- அவள்
முற்றவும் தீர்த்தனள் உற்றனம் நன்மை.
பொருள்:
1)
திருவணக்கம் செய்யும் - பற்றர்கள் வந்து வணங்கும்( கோயில்)
ஊரடங்கிப் போன - தொற்றினால் நடவடிக்கைகள் பலவும் குன்றிப் போய்விட்ட.
அருளாண்மை மேவ - இறைவனின் காக்கும் மனத்தை அடையும் நெறிகளை மேற்கொள்ள,
ஒருவாமல் - முடியாமல்
கண்டு -- நிகழ்ச்சிகளை அணுகிப் பங்கு கொண்டு
குறுகினர் -- வருவோர் தொகையில் குறைந்தனர்
திருவே - கடவுளே
நிலன் - இந்தப் பூமியின் மக்களை
நின்றவண் - செய்வதறியாமல் ஓய்ந்து அங்கே
உருகியது -- மனம் கரைந்தது
2)
உற்றோம் - செய்தோம்
இந்தப் படம் - இங்கு பதிவு செய்த படம்
விழிகளில் ஒற்றி -- மகிழ்வுடன் கொண்டாடி
விந்தை - பல அதிசயங்களைச் செய்யும்
அருளம்மை - துர்க்கையம்மன்
ஆற்றினள் -- தேற்றினாள்
முந்தை இன்றை வினை -- நாம் செய்த பிழைகள்
முற்ற - முழுமையாக
உற்றனம் நன்மை -- நலமே அடைந்தோம்
மகிழ்வீர்.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.