Pages

செவ்வாய், 7 டிசம்பர், 2021

பரிகாரி -- பன்முகத் தொழிலாளி / நாவிதன் ஆவான்.

பண்டைநாட்களில்,  "பரிகாரிகள் " என்று சொல்லப்பட்டோரும்  வைத்தியர்களாக இருந்துள்ளனர் என்று தெரிகிறது.  ஏதேனும் ஓர் ஏற்பட்ட தீமையை மாற்றுதற்குச் செய்யப்படுவதே " பரிகாரம்"  என்று உணரப்படுகிறது. தலைமுடி வெட்டுவது மாத்திரம் ஒரு பரிகாரம்  என்று முடித்துவிடலாகாது. வளரும் முடியைத் தாமே வெட்டிக்கொள்வோரும் உளர்.

பரிகாரம் என்பதில் இரு உள்ளுறைவுகள் உள்ளன.  பரிதல்  -  அன்புடன் செயல்படுதல்;  கு -  இவ்வுருபு சேர்விடம் குறிப்பது.  மதுரைக்கு என்பதில் கு என்பது வேற்றுமை உருபாக வருகிறது.  ஆர்தல் ( ஆர்+ அம்) என்பது பல்பொருட் சொல். இங்கு நிறைவு என்ற பொருளை மட்டும் குறிப்போம்.

பரிகு+ ஆர் + அம்.  இது சொல்லாக்கம்.  வேற்றுமைப் புணர்ச்சி அன்று. ஆதலின் வலி மிகாது.  இவற்றை இணைக்க, பரிகாரம் என்ற அழகிய சொல் கிடைக்கிறது.  அன்புகொண்டு நிறைவு செய்வித்தல் என்பது தான் தமிழ் மொழியின் மூலம் நமக்குக் கிட்டும் பொருள். பரிவு கலந்த நிறைவு அடைதல் என்பதுதான் என்பதை உணரவேண்டும்.  நோய்வாய்ப் பட்டவனைக் காப்பாற்றுவது,  அல்லது ஒரு பேய்பிடித்தவனை அமைதியாக்குதல் என்றே வைத்துக்கொள்வோமே,  அதைப் பேருதவி என்றே கூறவேண்டும்.  பரிகாரம் செய்து உதவுகிறவர் பரியாரி அல்லது பரிகாரி என்றால், அது ஏன் ஏற்புடைய சொல்லாகவில்லை என்று தெரியவில்லை.  இதேபோல, பல தொழிலாளரும் இந்திய நாட்டில் ஏன் குறைத்து மதிப்பிடப் பட்டனர் என்பது புரியாத புதிராகவே உள்ளது.  இன்றைய உலகில் தொழிலாளியே உயர்ந்தவன் என்று முடிவு செய்யவேண்டும்.  இப்போதுள்ள சட்டங்களின்படி,  ஆபிரகாம் லிங்கனின் சீர்திருத்தத்தின் பின்பு,  அடிமை என்று யாருமில்லை. இதையேதான்: "ஏழை என்றும் எளியர் என்று எவருமில்லை" என்று பாரதி வாய்மொழிந்தார்.

குப்பையை அகற்றத் தொழிலாளி வரவில்லை என்றால், சென்னை தண்ணீரில் மிதக்கவேண்டி வரும்.  "சாக்கடை கழுவுதல் செய்தாலும், உலகுக்கு அதனால் உபகாரம், ஒன்றும் அறியார் பெரும்பாரம் " என்றார் நாமக்கல்லார் இராமலிங்கக் கவி. ( பாட்டு: கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் ).

வெள்ளையர்கள் வரும்வரை எத்தொழிலரேனும் அவர்கள் உரிமை காக்கப்பட்டு அவர்கள் மதிக்கப்பட்டனர்.   தொழில்கள் பல இருந்தாலும், யாவரும் ஒப்பவே நடத்தப்பட்டனர்.  வெள்ளையர்கள் செய்த சட்டங்களினால், உயர்வு தாழ்வு புகுத்தப்பட்டது என்று இக்கால ஆராய்ச்சி புலப்படுத்துகிறது.

இந்து மதத்தில் உயர்வு தாழ்வு இருந்தது என்பதையும் ஆரியர் என்போர் வந்தனர் என்பதையும் ஒப்புக்கொள்ள இயலவில்லை.  வரலாற்றுப் பேராசிரியர் ரோமிலா, இவ்வாறே கூறினார்.

நேயர்கள் அறிந்துகொள்ள இவற்றைப் படிக்கவும்:

https://www.myindiamyglory.com/2018/03/09/caste-primary-weapon-british-used-divide-and-rule-india/

மணமகனைத்  திருமணத்திற்கு முன் "பரிசோதனை" செய்து  மணவினைக்கு ஏற்புடைமை அறிவித்தலும்   இவர்களிடம்  (நாவிதர்)  விடப்பெற்றது  என்று சொல்வர்.

கிரகங்களால் தீமைகள் வருதலுண்டென்பர்.  அவற்றை மாற்றுதற்குச் செய்யப்படும் சடங்குகளும் பரிகாரமே. இவைபோலும் சடங்குகளிலும் இவர்கள் தங்கள் திறமைகளைக் காட்டியிருக்கக் கூடும் என்று தெரிகிறது சில மந்திரங்களையும் இவர்கள் ஓதியிருக்கக்கூடும்.

பரிகாரங்கள் செய்வதற்கு இவர்கள் சோதிடம்   ( கணியம்) தெரிந்திருந் திருக்கவும் வேண்டும்.

இவர்கள் மேற்கண்ட தொழில்களையும் செய்துகொண்டு,   முடிவினைஞராகவும் நடவடிக்கைகளைத் தொடர்ந்த படியால்,  நாவிதர் என்று சொல்லப்பட்டனர்.

நால்விதத் தொழிலும் இயற்றியபடியால்  " நால்விதர்" என்று குறிக்கப்பட்டுப் பின் இச்சொல் இடைக்குறைந்து " நாவிதர்" என்றும் அவர்கள் குறிக்கப்பட்டனர்.

நால்விதர் எனற்பாலது பயன்பாட்டில் இல்லை. நாவிதர் என்ற திரிசொல்லே இன்றுண்மை உணர்க.

இதுபோலும் இன்னொரு திரிசொல் கூறுதுமெனின்,  விழுபுலம் என்பது விபுலமாயது  காண்மின்.  லகரமும் ழகரமும் ஓரினத்தன.

நாவிதர் என்ற சொல்லை அறிந்தோம்.  நாவினால் சிறப்பெய்தியோர் என்று கூறலாம் எனினும், அதற்குச் சிறிது ஆதாரம் தேவை.

நாவிதரை இரவில் பெயர் சொல்லக்கூடாது என்று ஒரு நெறி இருந்ததாகத் தெரிகிறது.  அதனால் இவர்கள் "பெயர்சொல்லார்" என்றும் குறிக்கப்பட்டனர். போர்மறவர் என்போர் இரவிலும் அழைக்கப்பட்டு வேலைக்குச் செல்லவேண்டிவரும்.  ஆனால் நாவிதற்குப் பகலில் மட்டுமே வேலை.  அதனால் அவர்கள் பகல்வினையாளர் என்றும் குறிக்கப்படுவதுண்டு. மின்  ஆற்றலற்ற பழங்காலத்தில், இரவில் கத்தி எடுத்து முடிவெட்டினால் காயம் ஏற்படக்கூடும் என்பதனால் இந்நெறி ஏற்பட்டதென்று தெரிகிறது. இங்குள்ள சீன முடிவினைஞரும் இரவில் கடையை மூடிவிடுகின்றனர்.

இற்றைக் கருத்தோட்டத்தில் இத்தகு ஒரு மெய்ப் பொருளுரைப்பதானால்,  நாவிதன், பரிகாரி என்ற சொற்கள் உண்மையில் "பன்முகத் தொழிலாளி"   அல்லது "பலதுறை உதவியாளன்"  என்றுதான் பொருள்படும் என்பதில் ஐயமில்லை.  

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

மெய்ப்பு 08122021  1808

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.