Pages

வியாழன், 16 டிசம்பர், 2021

தெரிந்துகொள்ளவேண்டிய சொல்: ஆசு, இர, ~இ-த்தல் வினையாக்கம்

 ஆசிரயித்தல் என்ற சொல் இப்போது வழங்குவதில்லை.  தாளிகைகளையும்  வார மாத இதழ்களையும் யாம் வாசித்தவரையில் இச்சொல்லை அண்மையில் பயன்படுத்தி எதையும் எழுதிய எழுத்தாளர்களையும் யாம் எதிர்கொண்டதில்லை,  எமக்குத் தெரிந்தவரை இச்சொல் வழக்கில் இல்லை.

ஆசு என்ற சொல், பலவேறு சொற்புனைவுகளில் பாகங்கொண்டிருத்தலை நோக்குங்கால்,  அது ஈண்டும் வந்திருப்பது எமக்கு வியப்பை விளைவிக்கவில்லை என்றாலும், அதை நன்கு நந்தமிழர் அறிந்து  கொள்ள வேண்டுமென்ற  அவாவை மீக்கொள்விக்கின்றது.

ஆசு என்பது பற்றிக்கொள்வு.  இங்கு ஓர் எடுத்துக்காட்டு வேண்டுமெனில், ஆற்றுவெள்ளத்தில் தவிக்கும்போது,  ஒரு மரத்துண்டைப் பற்றி நீந்துதல் போலும் பற்றிக்கொள்ளுதல்.  பற்றுக்கொள்வு அன்று.  பற்று என்ற பாசமாகாது இது.

இர என்பது வேண்டுதல்.  இர இத்தல் > இரயித்தல் என்பது வேண்டிக்கொள்ளுதல்,    ஒருவாறு வலியுறுத்திக் கொண்டு தாழ்ந்து நின்று கேட்பது  போன்றது.

இவை எல்லாம் ஒன்றாகக் கோவைப்பட்டு நின்று "ஆசிரயித்தல்" ஆயிற்று.  இரு வினைச்சொற்களும் ஒரு வினை யாக்க விகுதியும் கலந்து வினைச்சொல் அமைந்துள்ளது.

ஆசு என்பது பல் சொற்களில் வரக்காண்கின்றோம்.  இராசி -   இரு ஆசு இ > ~  என்று ஆனது ஆகும்.   ஆசுகொண்டு இருக்குமிடம்.  பற்றிக்கொண்டு வாழுமிடம்.  இவ்வாறு இருக்கை கொள்வதால் விளையும் பலாபலன்கள். கணியம் மிகச்சிறந்து விளங்கியது தமிழரிடையிலாகும்.  கணியர் பலர் தமிழ் நாட்டில் முன்னர் வாழ்ந்தனர். அதனால் அக்கலை வளர்ந்தது.  கணியன் பூங்குன்றன் அவர்களில் ஒருவர். சங்கத்துச் சான்றோர்.

ஆசீவகம் என்ற சொல்லும் ஈண்டு நினைவுகூர்தல் பாலது. இது ஆசு ஈ  அகம், அதாவது பற்றிக்கொள்ள இடம் ஈயும் நிலையம் அல்லது கொள்கையமைப்பு என்பது பொருள். இதற்கப்பால், அதை யார் பயன்படுத்தி எந்தக் கொள்கையைச் சொல்லியிருந்தாலும்,  அதை அதன்பால் அக்கறை உடையோரிடம் விட்டுவிட்டு, நாம் சொல் எவ்வாறு அமைந்தது என்பதை மட்டும் காட்டுவோம்.  ஓர் ஆய்வாளன் Christ  என்ற சொல்லை ஆய்கிறான். anointed person என்பதை அதன் சொல்லமைப்புப் பொருளாகத் தருகிறான். அவ்வளவு தான் சொல்லாக்கப் பொருளின் எல்லை.  அதற்கப்பால் உள்ள கதைகளும் வரலாறும் சொல்லாக்கத்துக்கு அப்பால் சென்று நம் கவனத்திலிருந்து நீங்குவதே நலம் ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.