Pages

திங்கள், 13 டிசம்பர், 2021

சாசனம் அமைந்த விதம்

 இங்கு சாசனம் அமைந்த விதம் என்றால்,  நாம் சொல்வது சாசனம் என்ற சொல்லைத்தான்.   ஒவ்வொரு சாசனமும் எவ்வாறு வரைவு பெற்றதென்பதைப் பற்றி நாம் இங்கு கவலைப்படுவதில்லை.  அதனைப்  பிற அறிஞர் தம் எழுத்துக்கள் மூலம் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

மனிதன் எழுத்துக்களைக் கண்டுபிடித்து மொழியின் பயனை விரிவு படுத்தியதே  மரணத்தினால் ஏற்படும் தொடர்பற்ற நிலையைச் சரிப்படுத்துவதற்காகத்  தான்.  வாயால் மட்டும் பேசுகிற அனைத்தும் பேசுகிறவன் போய்விட்டபின் இல்லாமல் போய்விடும்.  அல்லது பலவாறு திரிபு அடைந்து, நம்பத் தகுந்ததும் தாகததும் கற்பனை கலந்ததும் கலவாததுமாக நீரோடையில் பலவும் மிதந்துவருவனபோல்   ஆகிவிடும்.  மனிதன் என்னதான் தன்னைப் பெரியவன் அறிவாளி என்று பீத்திக்கொண்டு வாழ்ந்தாலும், அவனுக்கும் புழுவுக்கும் சில ஒற்றுமைகள் இணையுற்று ஓடி ஒன்றுபட்டு வரும்படியாகவே கடவுள் படைத்துள்ளார் என்பதில் உங்களுக்கு ஐயமிருந்தால் பின்னூட்டம் இட்டு நாம் சொல்வன திருத்துங்கள்.

எழுத்துக்களுக்கே அவ்வாறு என்றால் எழுதப்படும் ஆவணங்கட்கு எதுவும் வேறுபட வழியில்லை.  இறந்தபின் ஏற்புறும் ஆவணங்களும் அதன்முன் ஏற்புறும் ஆவணங்களும் எல்லாம் இல்லாமல் ஒழிதலை ஓரளவு சரிப்படுத்துதற்காகவே உண்டானவைதாம்.  பிற்பாடு அவை வேறுபடுத்தி அறியப்பட்டது நடைமுறை வசதிகளுக்காகவே  ஆகும்.

சாகப் போகும் மனிதன் சாகுமுன் சிலவற்றைத் தனியாக எடுத்து வைத்துக் கவனித்து,  தானிறந்த பின் இருப்போர் அறிந்துகொள்ளுமாறு  வரைந்து வைக்கவேண்டும்.  தொடக்கத்தில் ஏடுகள் இல்லாமையால் ஓலை, ஓடு, கல் என்று கிடைத்தவற்றில் எல்லாம் எழுதினான் மனிதன்.  இப்போது உள்ள நல்லனவும் வல்லனவும் எல்லாம் ஒரே அடியாகக் கடவுள் உருவாக்கித் தந்துவிடவில்லை.

சா -   சாவின் காரணமாக  அல்லது சாகுமுன்;

தன் -   தனியாக.

அ  -   அங்கு வைத்து,

அம்  -  அமைப்பது.

தகர முதலாகத் தோன்றிய சொல், சகர முதலாக வரும்.

இதற்கு எடுத்துக்காட்டு:  தங்கு >  சங்கு.   ( ஓர் உயிர் தங்கி வாழ்வது சங்கு).


ஆகவே,  சா+ சன் + அ + அம்,  இது சா-சன- அம் >  சாசனம்.

இதில் பின் ஓர் அகரம் கெட்டது.  ஆகவே சா சன ம்  > சாசனம் ஆனது.  அல்லது சா சன் அம் எனினுமாம்.

நாளடைவில் சாவு பற்றிய பயம் நீங்கிய கற்பனையில் நாம் சா என்பதன் பொருளை மறந்துவிட்டோம்.

சாவைச் ஸா எனினும் அதே.

பின்னாளில் ஆளுமை உடையோன் எழுதிவைக்கும் ஆவணங்கள் அனைத்தும் சாசனம் என்று பொருள்விரியலாயிற்று,  அல்லது அதுபோலும் நிலை உணரப்பட்டது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

தட்டச்சுப் பிறழ்வுகள் கண்டால் பின்னூட்டம் செய்து தெரிவிக்கவும்.  இன்றேல் அவை கண்ட பின் திருத்தம் பெறும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.