விய் > விரி என்பன அடிச்சொற்கள். அடிச்சொற்கள் என்பவற்றுக்கு அடிப்படைப் பொருள் ஒன்றோ பலவோ இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட உறைவுகள் உடைய அடிச்சொற்கள் எவ்வாறு அந்நிலையை அடைந்தன என்று சிந்திக்கலாம். மனிதர்கள் சற்றுப் பெற்றுப் பெருகியபின், சிலவேளைகளில் பெரிதும் தொடர்பற்ற நிலையில் தங்கி வாழவும் நேர்ந்ததுண்டு. எப்போதாவது கண்டுபேசித் தொடர்பு கொண்டோரும் எப்போதும் தொடர்பு கொண்டோரென்றும் இருவாறு இவர்களைக் கூறுபடுத்தலாம். எப்போதாவது அல்லது அருகியே தொடர்பு கொண்டவர்கள் ஒரே ஒலி உடைய சொல்லை இருவேறு உள்ளுறைவில் பயன்படுத்திய நிலையில் ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டாகிவிடும். அதனால்தான் ஒவ்வொரு பண்டை மொழியிலும் ஒரே பொருளுடைய சொற்கள் ஒன்றுக்கு மேற்பட்டனவாகவும் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளனவாகவும் உருக்கொள்ள நேர்ந்தமை அரிதினுணரப் பாலனவாய் உள. ஒரே சொல் பலவேறு வடிவங்களையும் மேற்கொண்டன. இவ்வாறு வந்த சொற்களில் tsai என்ற சீனமொழிச் சொல்லும் உள்ளது. பல்வேறு திரிபுகள் பெற்று, அது chua என்று திரிந்துவிட்டது என்றும் ஆய்வாளர்கள் கூறுவர். பாட என்ற தமிழ் எச்சவினை, பஜ என்று வரும் இன்னொரு திரிபுடன் தொடர்புறுத்தக் கூடியது. ஆய்வினாலான்றி இதனை உணர்தல் குதிரைக்கொம்புதான் என்று உணர்க.
மரங்கள் வளர்ந்து மேலுயர்ந்து கொம்புகளும் கிளைகளுமாய் இலைகளைப் பரப்பி விரிந்து நிற்பனவாகும். இவை கீழே வேர்களை விரித்தும் மேலே இலைகளை விரித்தும் இடம்கொள்பவை. அதனால் அவற்றைப் பெரிதும் "ஊறு"டைய, உணரத்தக்க நிலையின்றி மரத்துப் போனவை என்பதால் " மரம் " என்று பெயரிட்டு வழங்கிய அதே வேளையில் வேர்களையும் இலைகளையும் விரிச்ச நிலையில் ( விரித்த நிலையில் த - ச போலி ) அவை விரிச்சம் எனப்படுதலும் மிகமிகப் பொருந்துதல் உடையதே ஆம்.
விரிச்சம் என்ற சொல் திருத்தம்பெற்று விருட்சம் ஆயிற்று. பழங்காலத்தில் "ஊரிய" (கிராமத்து) நாப்பாட்டினை அவ்வாறே ஏற்றல் இழிவென்ற கருத்து மேலிட்ட நிலையில் அதைத் திருத்தி விருட்சம் என்றாக்கி ஏற்றுக்கொண்டமை, அன்றை நிலையைச் சமாளித்த உத்தியே ஆகும். பேரன் வளர்ந்த பின் தாத்தா இறத்தல் போல, விரிச்சம் என்பது எங்கும் வழங்கவில்லை. என்றாலும் முயலை மோப்பமிட்ட உதவியுடன் வேடன் கண்டுபிடித்தமை போல, அதனை நாமும் மீட்டுருவாக்கம் செய்யத் தடையொன்று இலாமை உணர்க.
இதன்மூலம் மரமென்பதன் காரணமும் விருட்சமென்பதன் காரணமும் வெளிப்படுகின்றன.
வில் என்பது விரிவு குறிக்கும் மூலம். வில்> விர்> விய் என்பன அடித்திரிபுகள். விர்> விரி; விர்> விரு என்பன அவ்வடித் திரிபுகளின் மாற்றுகள். ஆகவே விரிச்சம், விருச்சம் எல்லாம் அடிப்படையில் வேறுபாடற்றவை. அக்கா தங்கைகள். நீங்கள் பயன்படுத்தும் விலை என்ற சொல்லும் விருட்சம் என்ற சொல்லும் உறவினர்கள்.
மொழிப்பெயர்களும்கூட வழக்கெல்லையும் பயன்பாடும் கருதிய கற்பனைப் பெயர்களே ஆகும். அவை உணர்வூட்டப் பயன்படுபவை; ஆய்வுக்கு அத்துணைப் பயன் உடையவை ஆகமாட்டா. பயன்பாட்டு எல்லையும் தன்முனைப்பாக ஏற்பட்ட கற்பனை ஆகவும் வாய்ப்பு உள்ளது.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.