Pages

வியாழன், 25 நவம்பர், 2021

முதல், இலாபம், வட்டி, பொலிசை

 முதல் வட்டி என்ற சொற்கள்,  தமிழில் பொருத்தமாக அமைந்து, தம் உட்கருத்தை நன்கு தெரிவிக்கும் சொற்கள் என்று யாம் வகைப்படுத்துவோம். இவை அவ்வாறு ஒன்றையும் தெரிவிக்கவில்லை என்று நீங்கள் எண்ணினால் அதற்காகவும் யாம் மகிழ்வெய்துவோம். காரணம், எமக்குக் கிடைக்கும் எந்த வருமானத்திலும் அதனால் எந்தக் குறைவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பதுடன்,  அது உங்கள் கருத்துவன்மையையும் காட்டவல்லதாய் இருக்கிறது. சிந்திக்காமல் பின்பற்றுத லென்ப  தொரு மடமையாதலின்.

வட்டி என்பது வட்டம் என்ற சொல்லுடன் தொடர்பு உடையது.  முதலென்பதை வட்டியானது வட்டமாகச் சூழ்ந்து நிற்கின்றது,  நிலவு "கோட்டை" கட்டி வானத்துக் காய்தல் போலுமாம்.   வட்டி என்பது  முதலின் சூழ்வு என்பதானது ஓர் அணியியல் முறையில்  ---  முற்றாகவோ பகுதிப் பற்றாகவோ - -  நிற்பதுதான். These terms initially arise in a metaphoric sense. and are of figurative usage. Some of their such inclinations might have been lost over time.

தமிழ்க் கணக்காய்வாளர்,  பற்று,  பற்றுவரவு என்ற பதங்களையும் பயன்படுத்துவர்.  பற்றி நிற்கும் தொகை, பற்று ஆகும்.  அதில் வரவு கிட்டுமானால் அது பற்று வரவு எனப்படும். இதைச் செட்டியார்களின் கணக்கப் பிள்ளைகளிடன் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். ஆங்கிலத்தில் சிறப்பான பொருளியல் பட்டங்கள் பெற்ற  உறவினரும் நட்பினரும் உள்ளனரெனினும், அவர்கள் இப்பெயர்களின் விளக்கங்கள் (தமிழில்)  அவர்களுக்குப் பெரிதும் புரிதல் இல்லாதவை என்று கழறுகின்றனர்.

பொல் என்பதும்,  பொல்லுதல் என்ற வினையும் தொடர்புடையவை.  விரித்துரைத்தாலன்றி அவற்றின் தொடர்பு சற்று வெளிப்படையாக உணரப்படுத  லற்றவை.  ஒரு சிறு இடுகையில் ஒளிவிலிருந்து தெளிவு தோன்றாமற் போகலாம் எனினும், சிறிது முயல்வோம். பொல்லுதல் என்பது துளைத்தல் என்னும் பொருளும் ( உம் வருதலால் பிற உறைவுகளும் உளவென் றறிக).  உடைத்து.   இதிற் பிறந்த பொலிசை என்னும் சொல்லும் வட்டி என்ற பொருளில் வரும்.  முதலினின்று பகுதிபட்டு நிற்கும் இலாபம் என்றும் பொருள்படுவது.   வட்டி என்பது இலாபம் தான்.   ஆனால் அது முதலுக்குக் கிட்டும் இலாபம்.   பொருள் விலைபடுத்தப்பட்டுக் கிட்டும்  தொகை, இலாபம் என்று சொல்லப்படுகிறது.  முதல் என்பதன் பாங்கில் இல்லாத பயம் ( பயன்) இலாபம்.   இலா+ பயம் >  இலாபயம்> இலாபம்.  வலிமிகுதல் வேண்டுமென்பது வாக்கியச் சொற்புணர்ச்சியில்.  சொல்லாக்கத்தில் வலி மிகுதலால் பயன் ஒன்றும் இல்லாததுடன்,  நாத்தடை ஏற்படுத்துதலால் அது இடைக்குறையும் அல்லது தொகுப்புறும். 

சொல்லாக்கத்தில் இரு அல்லது மேற்பட்ட பாகங்கள்,  பாகப்படாமல் இணைதல் முதன்மையாகும்.  பாகங்கள் இணைகையில் பாகங்களாகவே இருத்தல் சொல்லமைப்புக்குச் சரிவருவதில்லை.  ஒருசொன்னீர்மை இன்றியமையாதது.  துரோணாச்சாரியார் வில்வித்தையில் உணர்வித்ததுபோல்  குருவியின் தலைமட்டுமே தெரியவேண்டும். இருபாகங்களில் இருபொருளும் தோன்றுமாயின் அதன் புதுப்பொருள் பெறப்படுவதில் ஊறு விளையும் என்பதறிக. 

பொலிசை என்னில், அது முதலை ஊடுருவிச் செல்வதாகிய வட்டி என்று வரையறை  செய்யலாம்.   பொலி + சை > பொலிசை.  வலிமிகாது. பொலிச்சை என்பதன்று,  பொலிசை என்பதே.  அது முதலைத் துளைத்து வருகிறது. அதாவது முதலின் எல்லாப் பாகங்களுக்கும்ம் வட்டி பெறப்படும் என்பது கருத்து. எனவே துளைத்தல், ஊடுருவுதல் யாவும் இங்குப் பொருள்தருபவை என்பது காண்க.

இதைப்  பொல்லுதல் அடியாக,  பொல்லி + இசைத்தல் என்று இட்டு,   பொல்லி இசை > பொல்லிசை > ( இடைக்குறைந்து அல்லது தொகுத்து) பொலிசை எனினும் அது.  பொலிதல்,  அழகுறுத்தல் என்று விவரித்து,  பொலிசை - முதலென்பதை அழகுபடுத்துவது என்று கூறினும் அதனால் நட்டமொன்றுமில்லை. வைத்துக்கொள்ளுங்கள்.

பாகம் என்பது பகம் என்றும் குறுகி அமையும்.   இலா + பகம் >  (முதலில் ) இல்லாத பாகம் எனினுமது. இலாபகம் > இலாபம்  ( இடைக்குறை). பயன் என்பது இதன் இரண்டாம் சொல் எனில்,  இலா பயன் =  முதலின் பகுதியல்லாத பயன்,  பயன் = பயம்,  ஆகையால்: இலா + பயம் > இலாப(ய)ம் > இலாபம். (  இடைக்குறை).   இவ்வாறு அமைதல் கண்டுகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர். 

குறிப்பு:

இலவசம்   ( ஒப்பீட்டு  ஆய்வுக்கு)

https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_30.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.