தீபத்தை ஏற்றியே திவ்விய நல்லொளியால்
ஆபத் தெனப்படும் அத்தனையும் --- தீர்பெறவே,
வாவாநீ தீப ஒளித்திரு வோங்குநாள்
மேவாநின் றாயெல்லாம் மேல்.
மேவாநின்றாய் - மேவுகின்றாய். ( ஆநின்று என்னும் இடைநிலை).
தீர்பெற - முடிவுற.
திருவோங்கு நாள் மேவாநின்றாய் - உயர்வு மிகுந்த நாளாய் மேவுகின்றாய்.\
எல்லாம் மேல் - எல்லாம் உயர்வு.
"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்" என்றார் தெய்வப்புலவர் நாயனார்.
அதன்படியே " எல்லாம் மேல்" என்று வெண்பா இற்றது.
திவ்விய:
திரு + இய ( இது "ரு" இடைக்குறைந்து ) > திவ்விய.
இன்னொரு வழியில்:
தீ + இய >. திவ்விய. இங்கு முதனிலைக் குறுக்கம், தீ என்பது தி என்று குறிலாயிற்று. வகர உடம்படுமெய் தோன்ற "வ்விய" என இரட்டித்தது.
இறைவணக்கத்தில் தீயின் பெருமையை இது காட்டுகிறது.
இச்சொல் இருபிறப்பி.
வட்டமாய்ப் பூமி வடிவுடனே சுற்றிவர,
நட்டமாய்ப் பல்துயர் நாடுவதை --- விட்டகல,
வாழ்கவே மன்பதை வாழ்கவே பத்திநெறி
வாழ்கமொழித் தீபத் தொளி.
நட்டமாய் - இழப்பாக.
பல் துயர் - பற்பல துன்பங்கள். தீங்குகள்.
நாடுவதை - மக்களை நோக்கி வருதலை
விட்டகல - வரும் துன்பங்களின் இடத்தை விடுத்து நீங்க.
மன்பதை - சமுதாயம் குமுகாயம்.
பத்தி -பக்தி
வாழ்க மொழி - தாய்மொழி வாழ்க.
தீபத்து ஒளி - மொழி சார்ந்து, தீபத்தின் ஒளி வாழ்க என்பது.
பூமியோ ஒரு வட்டத்ததில்தான் சுற்றி ஓடிக்கொண் டிருக்கிறது. மனிதனுக்கும் ஒரு வட்டம், ஓர் அறம், ஓர் ஓட்ட நெறி உண்டே. பூமி போலன்றி இவன் வட்டத்தை விட்டு ஓரங்களுக்கு ஓடித் துயரங்களை உருவாக்கித் தானும் பிறரும் துன்புறச் செய்கிறான்.
இந்நிலை மாறி இத் தீபாவளியில் பல துறைகளிலும்
இன்ப முண் டா கட்டும்.
வீட்டினை விட்டு வெளியுலகு செல்லாமல்
கூட்டில் குருவியாய்க் குன்றினுமே --- பாட்டினில்
பண்பாட்டில் பல்பல கார அடிசிலிடை
விண்போல் வியன்கொள்வோம் நாம்.
வீட்டினை - வாழ்விடத்தை. விட்டு - நீங்கி.
வெளியுலகு - பிற இடங்களுக்கு.
கூட்டில் குருவியாய் -- பல இருப்புக் கட்டுப்பாடுகளுடன்.
குன்றினுமே -- சிறப்பு குறைந்துவிட்டபோதும்
பாட்டினில் - வீட்டில் இசை நுகர்வதில்.
பண்பாட்டில் - கலாச்சார ச் செயல்பாடுகளில்.
பலகாரம் - சிற்றுண்டிகள்.
அடிசில் - உணவு.
விண்போல் - ஆகாயம் போல
வியன் - விரிவு.
இரட்டுறல்: பல் -பலகார - அடிசில்
பற்பல - கார - அடிசில்
என்று இரட்டுற லாகும்.
தீபா வளிதன்னில் தேங்கா முன்னேற்றம்
நாபா டியபாங்கில் நாட்டினது ---- சீர்பாடி,
ஆடிடுவோம் நன்மைத்தேன் ஊறவே கூடிடுவோம்
பாடெலாம் பக்கம் களைந்து.
தேங்கா - நின்றுவிடாத.
முன்னேற்றம் - குமுக வளர்ச்சி
நா பாடிய பாங்க்கில் - நாவால் மகிழ்ந்து புகழ்ந்த வாறே
நாட்டினது சீர் பாடி - வாழும் நாட்டின்னற்புகழைப் பலரும் அறிய இசைத்து
நன்மைத் தேன் ஊறவே - நலங்கள் யாவும் தேன்போல் பெருகிட.
பாடெல்லாம் பக்கம் களைந்து -- துன்பத்தையெல்லாம் பக்கத்தில் வீசிவிட்டு.
கொண்டாடும் யாவர்க்கும் கூடுக வாழ்வெளியே
ஒண்டிய வாழ்வினர்க்கும் ஊணுடை ---- வெண்டிங்கள்
தண்ணன்பு தந்துமகிழ் தாய்போல் தகைநல்கி
விண்ணுயர்வை எட்டுக வென்று.
வாழ்வெளி - வாழ்வின் சிறப்பு.
ஒண்டிய வாழ்வினர் - ஏழை மக்கள்
வெண்டிங்கள் - வெண்ணிலவு
~ தண்ணன்பு - நிலவுபோல் குளிர்ந்த அன்பு.
ஊணுடை - உண்ணவும்உடுத்தவும் கொடை.
தகை - தகுதியான.
நல்கி - வழங்கி
விண்ணுயர்வு - மிகுந்த உயர்வு
வென்று - வெற்றியடைந்து.
யாவர்க்கும் யாழிசைத் தீபா வளிவாழ்த்து
யாவரும் வெல்கஅன் பால்.
யாழிசைத் தீபாவளி - இசைகருவிகள் மீட்டியபடி
கொண்டாடும் தீபாவளி. பாட்டுக் கச்சரி வீட்டில் வைத்து.
தமிழனுக்கே உரிய யாழிசையும் பாரதத்துக்கே உரிய பாவளியும் இணைந்தபடி காண்க இப்பாடலில்.
இங்கு யாழ் ஏனை இசைக்கருவிகட்கும் பதில்நிலை ( பிரதிநிதி) யாய் நிற்கின்றது .
பா - பாட்டு. பா + அளி = பாவளி. பாவின் ஈர்ப்பில் தோன்றும் அளி: அன்பு, கருணை.
இவ்வாண்டில் தீபாவளிக்கு இப்பாடலில் நாம் காணும் மகிழ்பொருள் இது:
தீ - தீபம்
பா - பண்
அளி - அன்பு.
சேர்த்தால் " தீபாவளி". வகர உடம்படு மெய் சந்தி.
மூன்றும் உண்டு. அனைவரும் வாழ்க. அன்னை அருள் பொழிக.
மெய்ப்பு பின்பு
பிறழ்வுகள் காணின் பின்னூட்டம் செய்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.