Pages

சனி, 30 அக்டோபர், 2021

கோ - அரசன்; கோ - மாடு, எப்படி?

 இன்று கோவன், கோன் என்ற சொற்களைக் கவனிப்போம்.

கொடுத்தல் என்பது வினைச்சொல். இது முதனிலை நீண்டு பெயராகும் போது கோடு என்று வரும்.  இப்போது இச்சொல்லில் அன் என்ற விகுதியை இணைக்குங்கால் :-

கோடு + அன் = ( கோடன்.) 

கோடு + வ் + அன் =( கோடுவன்), இது டுகரம் இடைக்குறைந்து, கோவன் ஆகும்.

கோடு + அன்  =( கோடன்), இது டகரம் இடைக்குறைந்து:  கோன் என்றாகும்.

கொடுத்தல் என்ற பொருளேயன்றி,  கோடு என்பதற்கு மலையுச்சி என்ற பொருளும் இருந்தது.  எடுத்துக்காட்டு:  திருச்செங்கோடு.   இது ஓர் ஊரின் பெயராகவும் உள்ளது.  திரு என்ற அடைமொழி இன்றி, செங்கோடு என்பதனோடு அன் விகுதி இணைக்க,  செங்கோடன் என்று வரும்.  இது செம்மையான மலையுச்சியை உடையவன் என்று பொருள்பட்டு, அவ்விடத்து ஆட்சியாளன் என்ற பொருளைத் தரும்.

கடின ஒலிகளை விலக்கி,  மெல்லோசை தழுவச் சொல்லை அமைத்தலை இடைக்காலத்தில் கடைப்பிடித்தனர்.  மனிதன் போகப்போகத்தான் பல தந்திரங்களை அறிந்து  அவற்றைத் பயன்படுத்திக்  கொள்கிறான். இதை ஒரு முன்னேற்றம் என்றாலும்,  பிற்போக்கு என்றாலும் அதற்கு ஒரு முத்திரையிடுதலானது ஒரு பிற்கருத்தே ஆகும்.  அதாவது அபிப்பிராயம்.  அபி என்பதில் அ-  அடுத்து,  பி -பின்னர் அல்லது பின்னால்,  பிராயம்:  பிர - பிறப்பிக்கப்பட்டு,  ஆயம்  -  ஆயதாக  மேற்கொள்ளப்பட்டது.  பிறக்க ஆயது - பிராயம் ஆனது. அபிப்பிராயம் - அதன்பின் கருத்து என்பதன்றி வேறில்லை பிராயம் - வயது என்பது வேறு. homonym.  ஒத்தொலிச் சொல் அல்லது ஒத்தொலிக் கிளவி. இப்படிப் புனைந்து ஆக்கம் செய்கையில் பல மனிதர்கள் அதை எட்ட இயலாமல் சிந்தனைச் சுழலில் சூழிருளில் வீழ்தலுறுவர்.  இங்குக் கண்டு தெளிக.

பல கடின ஒலிச்சொற்கள் மெலிப்பொலி மேற்கொண்டன:  எ-டு:  பீடுமன் > பீமன்.  கடின ஒலியான டு விலக்குண்டது. இதுபோல்வன தந்திரச்சொற்புனைவு.  இலக்கணம் "கிலக்கிணங்களில்" இல்லை.  இவற்றுள் பலவற்றை எடுத்துக்காட்டியுள்ளோம்.

இப்போது கோட்டைக்குத் திரும்புவோம்.

பெரும்பாலான அரண்கள், மலையுச்சிகளில் அமைக்கப்பட்டன.  ஆகவே, கோடு + ஐ = கோட்டை ஆகி அரண் ஆகிய அமைப்பைக் குறித்தது. பின்னாளில் மலை இல்லாத இடத்தில் அமைந்த அரணையும் கோட்டை என்றே கூற, அது தன் அமைப்புப் பொருளை இழந்தது.

கொடு, கோடு என்பன வளைவு என்று பொருள்படும்.  ஒருவன் ஒன்றைப் பிறனுக்குத் தருகையில், பண்டை வழக்கப்படி வளைந்து கொடுத்தான். அதனால் வளைவு என்று பொருள்தரும் சொல், கொடுத்தல் ( தருதல் ) என்னும் பொருளை அடைந்தது.  வாங்குதல் என்பதும் வளைவு.  வாங்கறுவாள் - வளைந்த அறுவாள்.  வாங்கு -  வளைந்த இருக்கை. இது மலாய் மொழிக்குச் சென்று "பங்கூ" என்று, இருக்கையைக் குறித்தது.  " வாங்குவில்"  என்றால் வளைந்த வில். " வாங்குவில் தடக்கை வானவர் மருமான் "  என்ற தொடரில் வாங்குவில் என்றது காண்க.

குன்றுதோறும் ஆடுதல் என்பது பல குன்றுகளில் ஆட்சிபுரிதல் என்ற பொருளை உடைய தொடர்.  ஆள்> ஆடு என்று திரியும்.  (ஆட்சி).

போரில் மலைகளைப் பிடிப்பது சிறப்பு.  அங்கிருந்து எதிரியின் படை நடமாட்டங்களை எளிதிற் கவனிக்கலாம்.  மலையை உடைய குறுநில மன்னர் இருந்தனர்.  பாரி வள்ளல் பறம்புமலைக்குச் சொந்தக்காரன்.  மலையமான்- இவனும் மலையை உடையவன்.  மலைய -  மலையை உடைய.  மலையன் என்பது மலைக்காரன் என்று பொருள்தரும். குன்றத்திலுள்ளவன் குன்றன். இனிக் குன்று > இடைக்குறைந்து குறு >  குறு + அன் = குறவன்.

மாடு என்றால் அது ஒரு செல்வம்.  அது பல வரவுகளைத் தருவது.  பால், தயிர் இன்னும் உள.  அதுவும் கோடு என்ற கொடுத்தல் சொல் கடைக்குறைந்து கோ என்றாகி,  மாட்டினைக் குறிக்கும்.  மாடல்ல மற்றையவை என்ற தொடரில், மாடு என்ற சொல் ( குறளில் ) செல்வத்தைக் குறித்தது அறிந்துகொள்க.

இன்னும் உள. அவை பின்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு:  பின்னர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.