Pages

செவ்வாய், 5 அக்டோபர், 2021

அஷ்டமி-த்தல் - அட்டமிழ்தல் - அற்றமிழ்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும் என் நெஞ்சு என்கின்றார் குறளில் நாயனார்.  மாலும் என்றால் இதுவோ அதுவோ என்று மனம் மயங்கும் நிலை.  இங்கு மாலும் என்ற சொல்லை 100% பொருந்தப் பாடியிருக்கிறார் தெய்வப்புலவர். (ஏனையவிடத்திற் பொருந்திற்றில என்பது இதன் பொருளன்று. ).  இந்தச் சொல்லாட்சி காண்கின்ற காலை எம் நெஞ்சு மால்கின்றிலது., சரியான சொல்லாட்சியாதலின்.   பகலோ இரவோ என்று மனமயக்கம் தரும் நிலைதான் மாலை நேரம் என்பதும்.     மால் > மாலுதல் என்பது வினைச்சொல்லும் அதனடித் தொழ்ற்பெயருமாகும். 

மாலையில் மேற்றிசைக் கதிரவன் கீழிறங்குந்  தோற்றமே  அவன் ஒளியற்றுக் கடலில் அமிழ்வதுபோலும் மயக்கினை நமக்குத் தருவதாகும்.  அற்று அமிழ்கிறான்!   அதுவும் கடலுக்குள்!   கரையோரம் நின்று காணுங்கள்.  இரைக்குப் பறந்து திரிந்த  பறவைகள் கூடுசெல்லும் நேரமன்றோ!  கொஞ்சம் இலயித்திருங்கள் இக்காட்சியில்.

அற்றமிழ்தல் -  ஒளி குன்றி அமிழ்தல்.  குன்றி என்பதும் அற்று என்பதும்  நுண்பொருளில் வேறுபாடு உடையவை எனினும் அவை கதிரவன் கீழிறங்குங்கால் அடையும் இறுதிக்குச் சற்று முந்திய நிலையும் மற்று இறுதி நிலையுமாம்.  ஆகலின் இரண்டையும் ஒருசேர வைத்து நோக்குவோமாக.

அற்றமிழ் >  அற்றமி >  அஷ்டமி >  அஷ்டமித்தல்

இவ்வாறு சொல் (  அஷ்டமித்தல் ) பிறந்தது.

பகல்முழுதும் கதிரவன் உலக ஓட்டின் மேற்புறத்தினைக் காய்ந்தது ---- அட்டது:   அடுதல் என்றால் சூடேற்றுதல்,  சுடுதல்  என்று வெப்பநிலைகளைப் பலவாறு சிந்திக்கலாம்.  அற்று என்பதற்குப் பதில் அட்டு எனினும் ஒக்கும் காண்க.

அட்டமிழ் >  அட்டமி >  அஷ்டமி(த்தல்).

உலகை அட்டுவிட்டு க் கடலில் அமிழ்ந்துவிடுதல்..

சொல்லிலும் பொருளிலும் திரிபிலும் உள்ள நெருக்கத்தை உணரவேண்டும். இச்சொல் இருபிறப்பியாகும்.   இரண்டையும்  ஒன்றுக்குப் பிறிதொன்று மாற்றாகக் காணினும் முரண் எதுவுமில்லை.  முன் இடுகைகளில் மொழிக்கு மொழி சொல் தாவுகையில் திரிபுறு சுந்தரியாகச் சொல் மாறிவிடுகிறதென்பதை  விளக்கிக் கூறினோம். அதையும் மறுகாட்சி கொள்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.