Pages

ஞாயிறு, 3 அக்டோபர், 2021

தமிழ் ஆங்கில நெருக்கங்கள்

 தமிழிலும் ஆங்கில மொழியிலும் உள்ள சொற்களில் பல  பொருளிலும் ஒலிப்பிலும் நெருக்கமுடையவையாய் உள்ளன.  இவற்றைச் சில அறிஞர்கள் முன்னர் எடுத்துக்காட்டியதுண்டு.  இணையத்திலும்  ஒரு பட்டியலாவது  வலம் வந்துகொண்டிருந்தது.  அது இப்போது கிடைக்கவில்லை.

எழுதிய,  வெளியிடப் பட்ட ஒன்றை இணையத்தில் வைத்திருக்கப் பணம் செலவு ஆகின்றது.  அதனால் முன்னிருந்த பல வெளியீடுகள் பின்னர் ஒழிந்தன.  விளைவு என்னவென்றால் இப்போது அவை பார்வைக்குக் கிட்டவில்லை.  அந்தப் பட்டியலில் என்னென்ன சொற்கள் இடம்பெற்றிருந்தன என்று இப்போது நினைவில் இல்லை.  ஆகவே, புதியவாகச் சிந்தித்து நாம் ஒரு பட்டியலை உண்டாக்கிக்கொள்ள வேண்டும்.   நேரமும் வசதியும் உள்ள அன்பர்கள் முனைந்து ஒரு பட்டியலைத்  தயாரித்துக்கொள்வார்களாக.  கொண்டபின்னர் அதை வெளியிடுமாறு கேட்டுக்கொள்வோம்.

துருவுதல் என்பது தமிழில் உள்ள வினைச்சொல்.  ஒரு மலையில் ஒரு பக்கம் புகுந்து  அதன் எதிர்ப்பக்கத்தில் வெளிவந்துவிட்டால் அந்த மலையைத் துருவிச் சென்றுவிட்டோம் என்று பொருள்.  ஓர் இருப்புத் துண்டில் ஒருபுறம் ஏற்பட்ட துரு. இரும்பினைத் தின்றுகொண்டு அடுத்தபுறத்து வெளிப்படுமாயின்  அவ்விருப்புத் துண்டு, துருவப்பட்டுவிட்டது என்போம். இவ்வாறு துருவும் ஆற்றலுடைய பொருளைத்தான் நாம் "துரு" என்றும் சொல்கிறோம்.  இதே பொருள் ஆங்கிலச் சொல்லான "துரு"  என்பதிலும் உள்ளதைக் காணலாம்.[ through, ( as in went through, or through the ward doctor to the consultant surgeon )]

ஓட்டத்திலும் இவ்வாறு துருவிச் சென்றுவிட இயலும்.  அதனால்தால்தான் துரு என்பதிலிருந்து  துர > துரத்தல் என்ற வினைச்சொல் உண்டானது.  ஒரு வினையிலிருந்து இன்னொரு வினைச்சொல் உருவாகும்.   அடுத்தல் என்பதிலிருந்து அடர்தல் என்று,  அர் வினையாக்க விகுதி பெற்று இன்னொரு சொல் உருவானதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.  இதை முன்னும் நாம் இவண் கூறியுள்ளோம்.  அள் > அண்;  அள் > அடு  என்பன தொடர்புற்ற திரிபுகள்.  இந்த இவண் என்ற சொல்லிலும்  இ + அண்,  அவண் என்பதிலும்  அ+ அண் என்பவை இருத்தல் காணலாம்.  வகரம் உடம்படுத்துவது. ( உடன்+படுத்துவது,  உடம்பு + அடுத்துவது!)

ஒரு மனிதன் ஓர் இடத்திருந்து இன்னோர் இடத்துக்குத் துரத்தப்படுகையில் அவன் ஓடிமுடித்த இடைவெளித் தொலைவே  தூரம் எனப்படுகிறது.  அன்றியும் தொல் என்ற தொலைவு , பழமை குறிக்கும் அடிச்சொல்லும்,  தொல் > தொர் > துர் > துர்+ அம் > தூரம் என்று வருதலால் இதை இருவகையிலும் விளக்கலாம்.  ஆகலின் தூரம் என்பது தொடர்புடைய சொல்லே என்பதை எளிதாக உணரலாம். இவை எல்லாம் சோறும் கஞ்சியும் போல் உறவுள்ளவை.

அண்டு  (and)  என்ற ஆங்கிலப் பொருத்துக்கிளவிக்கும்  (conjunction)   அண்டுதல் என்ற தமிழ் வினைச்சொற்கும் உள்ள நெருக்கத்தை உணர வன்மூளை தேவைப்படுவதில்லை.  மெல்லுணர்வு போதுமானதாகும். 

அண் என்பதும் அன் என்பதும் இடம், காலம் ஆகிய அண்மைநிலைகளை உணர்த்தும்  தொடர்புறு சொற்கள். முழுமையாகக் கடைந்து கூழாக்கிவிடாமல் அதற்கு அண்மையாக முன்னுள்ள நிலையை வேவித்த சோறு அடையுமானால்,  அது கடை+அன் + சு + இ > கடைஞ்சி ஆகி,  டை இடைக்குறைந்து கஞ்சி ஆகிவிடுகிறது.  சோறு கடைவுண்ட நிலைபோலவே அச்சொல்லும் பட்டு உருமாறுகிறது:

கடை+ அன் + சி >  க+ அன்+சி >  கஞ்சி. [ கடைஞ்சி> கஞ்சி , டை இடைக்குறை.]

சி விகுதி  சு+ இ என்று உருவானது. 

அள் என்பது 'அரு'வாகிடுதல் முன்னர் விளக்கப்பட்டுள்ளது.  அது 'அடு' வாதலும் கூறப்பட்டுள்ளது.   அள் > அடு> அரு என்றாதலில் இறுதி இரண்டும் மடி > மரி என்ற திரிபாக்கத்துக்கு  ஒன்றிப்பினைக் கொண்டிலங்குதல் அறிந்துகொள்க.

ஆங்கிலத்தில் இர் என்ற முன்னொட்டு இன்மை, அன்மை ( அல்லாமை) குறிப்பதையும் எளிதினுணரலாம்.  இர்ரெகுலர்( irregular ) என்பதில் இர் என்பது இல் என்பதன் பொருளையே கொண்டுள்ளது.  இல்லீகல்  ( illegal) என்பதிலும் இல் என்பதன் பொருளையே கொண்டுள்ளது.  ஆகவே இல் - இர் எனபவற்றின் தொடர்புணர்க. இதை வேண்டுமானால் எதிர்த்து எழுதிப் பின்னூட்டம் செய்தால் மேலும் கொஞ்சம் விளக்கலாம். இப்படியே சென்றுகொண்டிருக்க உங்களை இவ்வாய்வில் ஈடுபடுத்திய ஊக்கவெண்ணமும் எமக்கு  உண்டாகலாம்.

விறு > விர் என்ற அடிச்சொற்கள் இலத்தீனிலும் சென்றுள்ளன. இதை விளக்குதலைப் பின்னொரு நாளில் செய்யலாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

இவ்விடுகையில் இருந்த தட்டச்சுப் பிறழ்வுகள்

சரிசெய்யப்பட்டன.  0359  04102021


குறிப்புகள்:-

அரு

இல்  -  இர்  

விறு   .  விர்  விரை  virulent  virus.  விர் > விரி(தல்).  400 நெருக்கச்சொற்களேனும் இருப்பின், மொழிகட்கிடையில் தொடர்பு கற்பிக்கலாம் என்பர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.