திரிபுறு சொந்தரிகள்
( திரிபுற்ற, சொம் - சொத்து; தரி - தரித்தோர்!)
தனக்கு ஓர் இடர் விளையக்கூடும் என்னும் அச்சம் சட்டென்று உணரப்படுவதால் அதன் உடன்செயலாக வேகமெடுத்துப் பாய்ந்து அப்பால் சென்று தப்பித்து விடுகிறது பாம்பு ( இங்கு யாம் ஓடுதல் என்ற சொல்லை வாக்கியத்தில் பயன்படுத்தவில்லை ). சில சொற்களைத் தமிழறிஞர் மு. வரதராசனார் ஆராய்ந்தபோது, பாய்ந்து சென்று தப்புவதாலே அதற்கு அப்பெயர் வந்தது என்று முடிவு செய்தார்.
பாய்+ பு > பாம்பு என்பது அவர் முடிவு.
பருப்பை வேவிக்கும் போது, அது சில நிலைகளைத் தாண்டித்தான் இறுதியிற் குழைவு நிலையை அடைகிறது. பருப்பு வெந்துவிட்டதா, வெந்துவிட்டதா என்று இரண்டு மூன்று முறை மூடியைத் திறந்து பார்க்கும் அம்மையார் எவருக்கும் அது அடையும் பல்வேறு நிலைகள் சொல்லவேண்டாதவை ஆகும். அதுபோல் சொல்லும் உருமாறி மிகுங்காலோ சுருங்குங்காலோ பல்வேறு இடைவடிவங்களை அடையும். பாய்ப்பு என்று வராமல் பாம்பு என்றன்றோ வந்துள்ளது. இந்த இடைவடிவங்கள் எந்த அகராதியிலும் கிடைப்பதில்லை, சில சொல்லாக்க வல்லுநர்கள் இவற்றையும் அறிந்து தங்கள் நூலில் கூறியிருப்பார்கள். சிலர் இடைவடிவங்களைப் பிறைக்கோடுகளுக்குள் இட்டு விளக்குவர். இந்த இடைவடிவங்களைச் சொல்லாவிட்டால் புதிதாக இந்த ஆய்வைச் சந்திக்கும் ஒருவனுக்குப் புரியாமற் போய்விடும் என்பதற்காகவே இடைவடிவங்கள் தரப்படுகின்றன.
ஐரோப்பியச் சொன்னூலில் ( சொல் நூலில் ) சொல், தொடங்கிய மொழியிலிருந்து வெவ்வேறு ஐரோப்பிய மொழிக்கும் எந்த எந்த வடிவத்துடன் பயணித்து இறுதியில் இன்று காணப்படும் நிலையை அடைந்தது என்பதைக் காட்டியிருப்பர். இந்த மாற்றங்கள் மக்கள் சொல்லை ஒலிக்கும் நாவின் கொள்திறம் காரணமாகவே ஏற்படுகின்றன. மற்ற மொழிக்காரர்களிடம் நாம் வாழ்ந்து பழகியிருந்தால் சொற்கள் இவ்வாறு தோன்றல், திரிதல், கெடுதல், குறைதல், மிகுதல் என்ற விகாரங்களை அடைந்து இறுதிநிலையை அடைகின்றன என்பதை செவிப்புலன் மூலம் கண்டு அறிவறிந்து கொண்டிருப்போம். எடுத்துக்காட்டாக, சீனமொழி மட்டுமே கற்ற ஒருவரிடம் " மாரிசாமி" என்ற பெயர் சென்று சேர்ந்திருந்தால், அவர் அதை " மாலிஸமே" என்று உளைத்திருப்பார். யாம் இந்தக் கதையை உங்களிடம் கூறாமல், எடுத்த எடுப்பில் " மாலிஸமே" என்ற சொல்லைக் கொடுத்து இது என்ன என்று கேட்டிருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புக் குறைவே ஆகும். எமக்கும் அவ்வாறே. Sauce for the goose is sauce for the gander!! அதாவது இந்நிலை பலருக்கும் பொருந்துவதே.
சொல் பொருள் இரு திரிபுக்கும் ஆங்கிலச்சொல் எடுத்துக்காட்டு:-
மேடம் என்ற ஆங்கிலச் சொல் சில திரிபுகளினுடனேதாம் நம்மிடம் வந்து சேர்ந்துள்ளது. இலத்தீனில் அது "மியா டொமினா" என்றிருந்தது. இச்சொல் பழைய பிரஞ்சு மொழிக்குச் சென்றபோது, மா டாம் (என் பெருமாட்டியே) என்று மாறிற்று. இந்நிலையில் இவர் திருமணமானவராயிருப்பார். அல்லது மூப்பு அடைந்தவராய் இருப்பார். அல்லது தம் மேல்நிலையைப் பாசாங்கு செய்துகொண்டிருப்பவராய் இருப்பார். இந்தப் பயன்பாடு 1590களில் ஆகும். ஆனால் 1719 வாக்கில் அது ஒழுக்கத்தில் மயக்கடைந்த ஒரு பெண்ணைக்கூடக் குறித்தது, இது ஏறத்தாழ 1871 வரை தொடர்ந்ததாகத் தெரிகிறது. மா என்பது மய் (my ) என்றும் டோனா ( லேடி) என்றும் அப்போது பொருள்கொள்ளப்பட்டது
இன்று அதற்குள்ள பொருள் மீண்டும் மேனிலையில்தான் உள்ளது. மேடம் என்பது பணிவுக்குரிய சொல்லாய் இப்போது உள்ளது.
இச்சொல்லில் பொருள் திரிபும் உள்ளது; சொல்வடிவத் திரிபும் உள்ளது. அது இருசொற்களாய் இருந்து இப்போது ஒருசொல்லாய் மாறியும் உள்ளது.
நடராசன் என்பதை மடராசன் என்று ஒரு வேறுமொழிக்காரர் அடையாள அட்டையில் பதிவுசெய்திருந்தார். அவருக்கு ந - ம வேறுபாட்டில் திணறல். ஒரு வேற்றுமொழிக்காரர் தமிழனை "ஓய்லாமா" என்று அழைத்தார். அது ஓ, ராமா என்று பின்னர் தெரியவந்தது. இவற்றையும் இதுபோன்ற சறுக்கல் திரிபுகளையும் அறிந்ததிலும் மகிழ்ச்சியே. துரை என்பது Do Ray ஆனாலும் மகிழ்ச்சிதான்.
ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு ----- அல்லது ஓரிடத்திலிருந்து ஒரு மாதிரி பேசிப் பழகியவர்களிடமிருந்து இன்னொரு மாதிரி பேசுகிறவர்களிடம் ஒரு சொல் சென்று சேர்ந்தால், அது மாற்றம் அடையும், அடையவேண்டும், ---- அடைந்தே தீரும் என்றுகூடச் சொல்லலாம்.
எம் தமிழ் நண்பருடன் வழக்கறிஞரின் அலுவலகம் சென்றிருந்தோம். அன்று அவருடன் உணவகம் செல்லவேண்டும், ஆனால் அவருக்கு வழக்கு விசாரணை இருந்தது. வழக்குமன்றத்துக்குப் போய்விட்டிருந்தார். . அப்போது இந்தி மட்டும் பேசும் ஒரு குடும்பம் வந்துவிட்டது. அலுவலகத்துச் சீனருக்கும் மலாய்க்காரருக்கும் இந்தி தெரியவில்லை. எம் நண்பர் இந்தி தெரியும் என்று அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளரானார். கொஞ்ச நேரத்தில் அவர்களுடன் பேசி அவர்களில் ஒருவராகவே ஆகி, மொழிபெயர்ப்பும் செய்து வழக்கை முடித்துவிட்டார் என்றே சொல்லவேண்டும். அந்தக் குடும்பத்துக்கே பெருமகிழ்ச்சி. அப்புறம் மின்தூக்கி வரை அவர்களைக் கொண்டு போய் விட்டு வந்தார். எல்லோரும் ஆனந்தமாயினர்.
பலமொழிகளையும் அறிந்திருப்பது மிகவும் உதவியாவதே ஆகும். திரிபுகளையும் உணர வழிவகுக்கும். நாம் சடுதி என்பதை அவர்கள் ஜல்தி என்பார்கள் என்றாவது தெரியுமே! இந்தியச் சிற்றூரிலே வாழ்வதாயின் தேவை ஏற்படாது. கற்று வெளியுலகில் மேம்பாடு அடைவதா வேண்டாமா என்பது அவர்களே முடிவுசெய்யவேண்டும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
Edited 30092021 1334 1412
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.