தொடங்குரை:
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் ஒரு சொல்லை அறிந்தின்புற்றால் அன்றைத் தினம் ஓர் இன்பநாளாக முடியும் என்பதால் அதைக் கடைப்பிடிக்க எண்ணினாலும் சில வேளைகளில் அது முடிவதில்லை. சில நாட்கள் சென்றுவிடினும் மனமும் தினமும் இணைதல் இல்லாதொழிந்துவிடுதலும் உண்டு. போயொழிந்தன மறந்து உள்ளன கண்டு மெள்ள முன்செல்வோம்.
இப்போது "திவால்" என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.
ஆய்வின் தோற்றுவாய்
இதை dhee vaal என்று எடுத்தொலித்தால் அது தமிழில் இல்லாத ஒலிபோலும் உணர்வை உண்டாக்கிவிடும். ஆகையால் எளிமையாகத் திவால் என்றே தமிழ்ச்சொல்போல் ஒலிக்க. இது உருது என்று முன்னையத் தமிழாசிரியர் கருதினர். அவர்கள் பிறந்து பள்ளிக்குப் படிக்கச் சென்ற காலை இச்சொல் வழங்கிக் கொண்டிருந்தது. இதே சொல் உருது மொழியிலும் வழங்கிற்று. ஆகவே அவர்கள் சொல்லாயிருக்கும் என்று எண்ணினர். பழந்தமிழ் நூல்களில் இல்லை. இதுவே அவர்கள் முடிவுக்குக் காரணம்.
உருதுவின் இயல்பு - தமிழ் வழக்கின் விரிவு.
உருது என்பது பிற்காலத்தில் வழக்குக்கு வந்த மொழி. பல சொற்களை அது உருவாக்கிக் கொண்டு இருக்கமுடியும். அரபியிலிருந்து எடுத்திருக்கவும் முடியும். சுற்றுவட்டங்களில் வழங்கிய மொழிகளிலிருந்தும் வரப்பெற்றிருக்கவும் கூடும்.
"பிறமொழியினின்று எடுத்த " என்று மேலே குறித்தோமே யன்றி, கடன் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. திருப்பிக்கொடுக்காவிட்டால் வழக்கு ஏதும் போடமுடிவதில்லை. வாயால் உளறிக்கொண்டிருக்கலாம். வேறு ஒன்றும் செய்ய முடியாது. கடன் என்பது சொல்லியலில் பெறும் பொருள் சற்றே வேறுபடுவது என்றாலும் அச்சொல்லை ஈண்டு விலக்குவதே சாலச் சிறந்த செயல்பாடு ஆகும்.
நண்ணிலக் கிழக்கு வழக்கு மொழிகளில் தமிழ்ச் சொற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தோகை என்ற சொல்லை எபிரேயத்தில் கண்டு கால்டுவெல் கண்காணியார் வியந்துள்ளார்.
திவால்
திவால் என்பது திவள்வால் என்ற தமிழ்ச் சொற்சேர்க்கையிலிருந்து வந்துள்ளது. திவளுதல்: கெடுதல், வாடுதல் என்னும் பொருளது. ஒரு குழும்பு (கம்பெனி) திவாலாயிற்று என்றால் அது வாடிய பயிர்போல் வாடிவிட்டது என அறிக. உடல் இல்லாதொழிந்து வால் மட்டுமே மிஞ்சி அதுவும் வாடிப்போயிற்று என்பதையே இது உணர்த்துகிறது. வல் என்பது வால் என்று நீண்டு பெயராயும் வந்ததென விளக்கம் உரைக்க, அது இருபிறப்பி ஆகிவிடுகிறது. வல் என்பதே அடியாகி , வாலிபன் (வாலி [ வலிமை பொருந்தியோன் ], வாலை , வாலிபம் ( வாலிவம் , பேச்சுவழக்கில் ) என்று வந்தன போலவே இதுவும். விலங்குகட்கு வால் வலிமையான இயங்காற்றல் தருவது. ஓடுகையில் ஒத்தியைவது ஆகும். அதாவது வால் என்பதில் வாடுதல் ஓரளவை மிஞ்சி, தொடர்ந்து செயல்பட இயலாமை உண்டாகிவிட்டது என்பதே அதன் பெறுபொருளாக நாம் உணர்தல் வேண்டும்.
வேறு சொற்களுடன் ஒப்பீடு
உருது என்று கருதின சில் சொற்களில் சூல், வால் முதலிய சினைத் தொடர்புகள் (உறுப்பின் பெயர்கள்) வருதலைக் காணலாம். மக + சூல். வரு + சூல் ( வசூல் ). மக என்பது பிறத்தல் என்ற அடிப்படைப் பொருள் உடையதாதலின், மகசூல் என்பது பொருத்தமே. வசூல் என்பதில் வரு என்பது குறைந்து வ~ என்றானது, இது வரு> வந்தான் என்பதிற்போலவே. [ சூல் என்பது சிலகாலமே உடலில் இருந்தாலும், அதுவும் உறுப்பு எனவே இலக்கணம் சொல்லும். கால அளவு கணக்கில் வாராது ]
முடிவு:
திவால் என்பது தமிழ் மூலம் உடையது. முகிற்கூட்டத்துள் மறைந்து வேறாகத் தோன்றுகிறதென்று நாம் அறிதல் சரியாகும்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
Edits were lost. Now has been restored.
21092021 1220
Some errors found and rectified.
Will review.
இதில் மென்பொருள் தொடர்பான பிறழ்வுகள் ஏற்பட்டுச், சில மாற்றங்கள் புகுந்துவிட்டன. அவை இப்போது திருத்தப்பட்டுச் செப்பம் செய்யப்பட்டுள்ளது. நேயர்கட்கு நன்றி.
பதிலளிநீக்கு