Pages

சனி, 28 ஆகஸ்ட், 2021

பாரதி என்ற சொல் எங்கு எழுந்தது

 பழந்தமிழ் நாட்டிலும் பொதுவாக இந்திய மாநிலங்களிலும் சிற்றூர்களில் வாழ்ந்தோரும் பாட்டுக் கட்டினர்.  பாட்டைக் கட்டுவது என்றுதான் பெரும்பாலும் சொல்வது வழக்கு.  ஒரு நூறாண்டுக்கு முன்னர், பாட்டை எழுதுவது என்று சொல்லமாட்டார்கள். பாட்டைப் பாடுவது அல்லது கட்டுவது என்று சொல்வது இயல்பான உரையாடல்களின் வந்த சொற்றொடர் ஆகும்.  தமிழ் நாட்டில் கொஞ்ச காலம் வரை, பல பாடல்கள் வாய்மொழியாக வழங்கிவந்தன. பாடியும் வந்தனர். ஏற்றம் இரைக்கும்போது பாடுவதும் நாற்று நடும்போதும் பாடுவதும் பாரம் தூக்கும்போது பாடுவதும் பெருவரவு ஆகும்.  வாத்தியார்களும் பாட்டைப் பாடியே மாணவர்களுக்குக் கற்பிப்பர். இப்போது அந்த வழக்கம் ஒழிந்துவிட்டது போலும்.  வாத்தியார்கள் பாட வெட்கப் படுகின்றனர்.  பாடுவதே எமக்குப் பிடித்த பாணி.  பணத்துக்குப் பாடுவதில்லை. சொந்த மகிழ்ச்சிக்கும் பாடவேண்டும்.  நாமே கேட்டு நோய்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். மன அழுத்தத்தை ஒழிக்கவேண்டும்.

ஆலத்தி எடுக்கும்போது பாடுவர்.  லகர ரகரப் பரிமாற்றம் காரணமாக,  ஆலத்தி என்பது ஆரத்தி என்றும் திரியும்.  பின்னர் ஆரத்தி என்பதில் தகர ஒற்று (த்) குன்றி, சொல் ஆரதி என்றும் வரும்.   ஆர்  அர் என்பன ஒலி குறிப்பவை.  அர்ச்சனை என்ற அர் தொடக்கத்தில் அர் = ஒலி.   ஆரத்தி என்பதிலும் ஆர் - ஒலி ஆகும்.  அலைகடல் ஆர்த்து ஆர்த்து ஓங்குவதாக மாணிக்கவாசகர் கூறுகிறார். ஆர்த்தல் என்'ற சொல்பற்றி  வேறு சில குறிப்புகளையும் முன் இடுகைகளில் அளித்துள்ளோம்.  கண்டு மகிழ்க.

பா என்பது பாடலைக் குறிப்பது.

இந்த ஆரதிக்காக சொந்தப் பாடல்களைப் பெண்களும் பிள்ளைகளும் புனைந்துகொண்டனர்.  சிலர் நல்ல பாக்கள் எழுதினர்.  அவர்கள் அடிக்கடி எழுதி   பா ஆரதி ஆயினர்.  பாக்களை ஆர்த்து எழச் செய்தனர். பெண்கள் சொந்தமாகக் கட்டிக்கொண்ட பாடல்கள் ஒருபுற மிருக்க, பாக்கள் கட்டிக் கொடுத்தவர் பா ஆரதி ஆனார்.  இவர்கள் பின்னர் செல்வர்கள் முன்னும் அரசர்கள் முன்னும் பாக்கள் கட்டி அவற்றை ஒலித்தனர்.  இப்படிச் செய்தால் பணமோ பொன்னோ கிடைத்தது.  பெண்களிடம் அந்தக் குடும்ப நிகழ்வுக்குச் சுட்ட வடையும் பாலும்தான் கிடைத்திருக்கும், பாவம்.  மனித முயற்சியானது அவைகளுக்குள் கொண்டுபோய் நிறுத்தி இவர்களைப் பாடவைத்தது.

பா  ஆரதிக்குப் பாடியவர்கள்   நாளடைவில் பாரதி ஆயினர்.  பாரதி மிக்க அழகுடன் அமைந்த தமிழ்ச்சொல். பா ஆரதி என்பது  பா கட்டியவரைக் குறித்தது.

இவ்வாறு குடும்ப நிகழ்வுகளிலிருந்து அரசவைக்குச் சென்ற பா ஆரதிக் காரர்கள்   ,  பாரதி ஆகிப் பாரதக் கதைகளோடும் தொடர்பு கிட்டி  மகிழ்ந்தனர்.

பா ஆரதிக் (காரர்)   -   பாட்டுக்கட்டும் ஆரதிக் காரர். என்பது பொருள்.

பாரதி.

பாரதியார்.

ஆரதிக்குரிய பாவைக் குறிக்காமல் அதை எழுதியவரைக் குறித்தல்.

----------------------------------------------------------------

ஆசிரியர் குறிப்புகள்.

திருவாசகம் :   3.151

லாலி பாடுதல்:  :மணமாலை குலாவிடும் மாப்பிள்ளை பொண்ணுக்கு லாலி லாலி லாலி லாலி  -  உடுமலை நாராயணக்கவி.

அறிக மகிழ்க


மெய்ப்பு பின்னர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.