Pages

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

கேதாரம் - மலைப்பகுதி. சிவன் கேதாரநாதன்.

 இமைய மலைப்பகுதியில் மலைச்சாரலை ஒட்டிய வயல் பகுதிக்குக் கேதாரம் என்று பெயர். மலையில் உயரத்திலிருந்து நோக்க இப்பகுதி கீழே உள்ளது. ஆகவே:

கீழ்,   தாரம் என்ற சொற்கள்

கீழ் என்பது மலைச்சரிவின் கீழுள்ள நிலப்பகுதியைக் குறிக்கிறது.

தாரம் என்பது தரையைக் குறிக்கும் இணைப்பு.

கீழ் > கேழ்(தாரம்) > கேதாரம்  ஆகிவிடுகிறது.

இங்கு வந்த தாரமென்ற துண்டுச்சொல்,  தாரம் என்ற இன்னொரு தனிச்சொல்லுடன் தொடர்பற்றது.  அடிச்சொல் தொடர்பு இருக்கலாம்.  அது ஆயிரக் கணக்கான சொற்களில் அவ்வாறு இருக்கலாம். அஃது அகழ்ந்துரைக்க வேண்டாதது ஆகும்.

தரு > தரு+ ஐ > தரை.  ( நிற்க இடம் தருவது,  விளைச்சல் தருவது, நீர் தருவது என்பனவால் தரு என்பதிலிருந்து தரை என்னும் சொல் அமைந்தது ).

தரு > தரு+அம் > தாரம்  ( தரை என்ற சொல்லே இவ்வடிவம் பெறுகிறது.). தரு என்ற அடிச்சொல்லே இவ்விரு சொற்களுக்கும் தோற்றுவாய் ஆகும்.

கீழ்தரு > கீழ்தரு+அம் > கீழ்தாரம் > கேதாரம் என்றும் இதைக் காட்டலாம். இது புரிந்துகொள்ளக் காட்டப்படுகிறது. இலக்கணத்துக்கு இதில் வேலை குறைவு அல்லது இல்லை.

திரிபின் திறம் உணர்தல்

நெடிலை ஒட்டி வரும் ழகர ஒற்றுகள் நாளடைவில் மறையும்.  கே என்பது நெடில். ழகர ஒற்று என்பது  "ழ்"  இதற்கு ஓர் உதாரணம்:

வாழ்த்து இயம் >  வாழ்த்தியம் >  வாத்தியம்.  (வாழ்த்திசை வழஙகும் கருவிகள் இசைப்போர்)

சூழ் திறன் > சூ  திரன் >  சூத்திரம் என்பதும் அவ்வாறே ழகர ஒற்று மறைவுச் சொல். ( ஆலோசிததுத் தம் மூளையால் வேலை செய்வோர்)

கேழ்வரகு என்ற சொல்லும்  கேவர் என்று திரியும்.  ழகரம் தொலைந்ததுடன், வரகு என்பது வர் ஆகிவிடும்.

இவைபோலும் திரிபுகள் தமிழ்ச் சந்தி இலக்கணத்திற்கு அப்பாற் பட்டவை. இலக்கணம் என்பது மொழியைத் திருத்தமாகப் பேசவும் எழுதவும் உதவ அமைந்ததே யன்றி,  சொந்தச்சொற்களை நீங்கள் படைத்துக்கொள்வதற்கு உதவும் நூலன்று. சொற்கள் மக்களால் பயன்பாட்டில் உருவாகுபவை. சில புலவர்களால் குறியீடுகளாக கலைச்சொல் முறையில் உருவாக்கப்படுபவை.
  • கேதாரம் என்பதில் நிலைமொழி வருமொழி இல்லை. பகுதி, விகுதிகள் உள்ளன. சிலவேளைகளில் இணையான சொற்களும் ஒருசொன்னீர்மை அடைந்து சொல்லாகும்.  எடுத்துக்காட்டு:  முதலமைச்சர்.  முதல் அமைச்சர் இரண்டும் இரு தனிச்சொற்கள். எனவே இச்சொல் இருதனிக் கூட்டமைப்புச் சொல்.

மக்கள் நாவின் திறம் என்னே!

அமைப்பு நோக்கிச் சொற்களை இருவகைப் படுத்தலாம்.  அவை:

மக்கள் படைப்புச் சொல்

 உதாரணம்:

சிற்றம்பலம் > சித்தம்பரம் > ( இடைக்குறைந்து) :  சிதம்பரம்.

பல் து >  பத்து > பது. ( இரு-பது,  முப்பது).

பத்து என்பதன் அமைப்புப் பொருள்:   ஒன்பதுக்கு மேல் பல ஆனது.  பல் = பல. து என்பது சொல்லமைப்பு விகுதி. இதைப் புலவர்பாணியில்

பல்து > பற்று > பத்து > பது.

பல் கடைக்குறையானால் ப. அப்புறம்  +து > பத்து,  பது.  

இதை இலக்கணத்தில்போல பத்து > இடைக்குறை பது என்னாமல்:  ப து என்பது பத்து என்றும் பது என்றும் இருவகையாகவும் உருவாகும் என்பது பாசாங்குகள் இல்லாத உண்மைத் தெளிவிளக்கம்  ஆகும்.  சிறிதுசிறிதாக அதை நோக்கி நாம் பயணிக்கிறோம்.

மக்கள் பேச்சிலிருந்துதான் எழுத்துமொழி தோன்றி  வரையறவுகள் செய்விக்கப்பட்டன.  தலைகீழ் உணர்வு தவறு ஆகும்.

ப + து > பத்து, பது என இருவகையாகவும் புணரும், என்று சொன்னாலும் ஒன்றும் முழுகிவிடாது. இலக்கணத்தோன் சொன்னதுபோல் அது இல்லை, ஆனால் உண்மை அப்படியும் வரும் என்பது அறிக.

புலவர் படைப்புச் சொல்:

உதாரணம்

ஒழி >  ஒழிபு > ஒழிபியல். ( இலக்கணத்தில் விடுபாடு உள்ளவற்றைக் கூறும் பகுதி ).

இது மக்கள் உருவாக்கிய சொல் அன்று:  " ஒழிபியல்".

இவ்வாறு புலவர் படைத்த சொல்லையும் மக்கள் படைத்த சொல்லையும் இனமறிந்துகொள்ளலாம்.

முடிவுரை:

இமையமும் தமிழரும்.

இமயம் பற்றிய குறிப்புகள் தமிழிலக்கியத்தில் கிடைக்கின்றன. மேரு மலையும் குறிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் இவ்விடங்களில் வாழ்ந்துபயின்ற காலை இச்சொற்கள்( கேதாரம் போலும் சொற்கள் )  அமைவுற்றன.  தமிழ்ப்பேரகராதிக்கு மானியம் பகுதி வழங்கும் அமெரிக்க கல்வித்துறைக்கும் அரசுக்கும் நாம் நன்றி செலுத்தவேண்டும்.  கடமை.  சிவன் கேதாரநாதன்  (கெடார்நாத்)   ஆவார்.  நாவினால் துதி பெறுவோன் நாதன்.

இத்துடன் நிறுத்திக்கொள்வோம்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.