Pages

சனி, 31 ஜூலை, 2021

காக்கைபாடினி பெயர் எப்படி வந்தது?

 காக்கைபாடினி என்ற பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட புலவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் சிலர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.  இருவர் என்றே வைத்துக்கொள்வோம். இதுபோலும் கருத்துக்களை மறுதலிப்பது தேவையில்லை. இவ்வாறே வைத்துக்கொண்டு யாம் சொல்லவந்ததைச் சொல்லி முடிப்போம்.

காக்கை என்பது ஒரு பறவையின் பெயர். ஆனால் காத்தல் என்ற வினைப்பகுதியை எடுத்து,   அதில் கை என்ற தொழிற்பெயர் விகுதியைச் சேர்ப்போம்.  கா+ கை = காக்கை என்றே அதுவும் வரும்,  வரவே, அதற்குக் காத்தல் என்பதே பொருளாகும். ஆதலின், எதையோ ஒன்றைக் காப்பதற்காகவே பாடினவர் என்ற பொருள் இப்பெயரிலிருந்து வெளிப்படுகின்றது.

இந்தக் காக்கைபாடினியார் ஓர் இலக்கணநூலைப் பாடிச் சென்றிருக்கிறார். அதுவும் தொல்காப்பியம் போன்ற ஒரு நூலாயினும் தொல்காப்பியத்துக்குப் பிற்பட்டதென்பதே ஆய்வாளர் கருத்து. யாமும் அப்படியே எண்ணுகிறோம்.  மொழியின் இலக்கணம் மாறும் தகைமை உடையதாதலின்,  அஃது அடைந்த மாற்றங்களை உள்ளடக்கிய  இலக்கணநூல்  ஒன்று பின்வந்த தமிழ்ப் புலவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கும்.  காக்கைபாடினியார் பெருந்தமிழ்ப் புலவர் ஆதலின்,  இலக்கணத்தை அவரெடுத்துக் கூற அதை அரசரும்  புலவர்கள்  பிறரும்  போற்றிப் பின்பற்றவே, கடினநிலை எளிமைபெறும். இலக்கணம் அறிய விழைவார் மகிழ்வர்.  இதனால் அவர் காலத்திய மொழிநிலை காக்கப்பட்டது என்பதே உண்மை.

தொல்காப்பியம் என்பது தொன்மை மொழிமரபுகளைக் காக்க எழுந்த நூலே.  இம்முனிவரும் காக்கும் பொறுப்புடைய குடியில் தோன்றிவர்  ஆதலின் அப்பெயரே  அவரும் பெற்றார். இதுபோலும் "சாத்திரங்களை"க் காப்போர் இன்று சாத்திரிகள் என்று குறிப்பிடப்படுவது போலவே  அவர் அன்று காப்பியர் எனப்பட்டார்.  இதை முன் ஓர் இடுகையில் யாம் கூறியுள்ளோம்.  கடல்கோளுக்குப் பின் மொழிமரபுகளைக் காக்கவேண்டிய பொறுப்பு தொல்காப்பியரிடமும் அதங்கோடு ஆசானிடமும் வந்துசேர்ந்தது;  அதை அவர்கள் செவ்வேனே செய்து முடித்தனர்.   பேராசிரியர் / ஆய்வாளர்  கா.சு. பிள்ளை அவர்களும் இதனை முன்னர்க் கூறியுள்ளார். 

காக்கைபாடினியார் வாழ்ந்த காலத்தும் முன்னரும் தோன்றி இறுகிவிட்ட மொழிமரபுகட்கு ஏற்ப, காக்கைபாடினியார் இலக்கணம் இயற்றினார்.  அதுவும் காக்கும் நோக்குடன் எழுந்த நூலே.  மொழியைக் காத்தல் அன்று  பொறுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

இவரும் காக்கைகளைப் பாடினாரோ இல்லையோ,  அதுபற்றிய குறிப்புகள் எம்மிடம் இல்லை.  அப்படிப் பறவையைப் பாடியவர் சங்ககாலப் புலவர் காக்கைபாடினியார் நெச்செள்ளையார் என்பதற்கு அவர்தம் பாடல் ஆதாரமாகிறது.  அல்லது காக்கையைப் பாடியது ஒரு வெறும் உடனிகழ்வாய் இருந்து,  அதுவே , அதனால்தான் அப்பெயர் அவருக்கு வந்தது எனப் பிறரை எண்ணத் தூண்டியது என்றும் எண்ணலாம்.  இவையெல்லாம் கற்றோர் கருத்துக்களே.  பின்வந்த  காக்கைபாடினியார் காக்கையைப் பாடினாரா என்று தெரியவில்லை. அவர் அவ்வாறு பாடியது எதுவும் நம்மை வந்து எட்டவில்லை.  காக்கை எங்கும் காணப்படும் பறவை ஆதலின், அதனைப் பலரும் பாடியிருப்பர். அவன் பாடவில்லை என்றும் கூறவியலாது. ஆனால் அவர் பெயர் அதனால் வந்ததா என்பதற்கு ஆதாரம் இன்மையினால்,  அவர் தமிழைக் காக்க இலக்கணம் எழுதினார் என்று முடிப்பதே பொருந்துவதாகத் தெரிகிறது.  அவர் பெயரில் உள்ள காக்கை, தமிழ்க் காவலைக் குறிக்கிறது என்று கொள்ளலாம்.

இரண்டாம் காக்கைபாடினியார் ,  தொன்மை உரையாசிரியர்கள்  பலரால் மேற்கோளாகக் காட்டப்பெற்ற  பெருங்கல்வியாளர். பெண்பாற் புலவர்.  இவர் இலக்கணம் முழுமையாய்க் கிட்டாதது தமிழ்த்தாய்க்கு வருத்தமளிக்கும் ஒன்றே ஆகும். பண்டை யாசிரியருடன் இவர் ஒட்டிச்செல்லாமல் வேறுபட்டு இலக்கணம் மேற்கொண்டவிடங்கள் சில உரையாசிரியர்கள் தரவுகளால அறியக்கிடப்பன ஆகும். இரு மலைகள் வேறுபட்டால் நாம் அது அறிதலும் வேண்டும். பின்னர் வந்த இலக்கணியர், காக்கைபாடினியார் இயலை எளிமைசெய்து பாடித் தந்துசென்றனர். இது கூர்ந்துணரத் தக்க தாக்கத்தைத் தமிழில் உண்டாக்கியது எனலாம்.

 காக்கைபாடினியார்கள் ஒருவர் அல்லர் இருவர்  இருந்தனர் என்பதை ஒப்புக்கொள்வதற்காக இது எழுதப்பட்டதன்று.  பெயர்க்காரணம் விளக்கமே எம் நோக்கமாகும். அதை யாம் தாண்டிச்செல்லவில்லை.

இதுவே யாம் தெரிவிக்க விழைந்த செய்தியாகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

ஓரிரு தட்டச்சுப் பிறழ்வுகள் சரிசெய்யப்பட்டன. 2152  01082021


 குறிப்பு: 

காக்கை -  காப்பு

பாடினி -(  இலக்கணம் ) பாடியவர்

பாண் > பாண்+இன்+இ > பாணினி. ( சங்கத இலக்கணம் தந்தவர்)  இவர் பாணர் வகுப்பைச் சேர்ந்தவர்.  இவர்கள் இசைப்புலவர்கள். காப்பியக் குடியவர் தொல்காப்பியர்,  அதுபோல் பாணினி பாணர்குடியினர்.  ஆரியர் என்போர் மரியாதைக் குரியவர்கள்,  எப்போதும் தமிழில் ஆர் விகுதிச் சொற்களால் சுட்டப்பட்ட படிப்பாளிகள்  ஆரியர்.   ஆரியரென்பது இனப்பெயர் அன்று.  வெளிநாட்டினர் பலர் இந்தியாவுக்குள் வந்துள்ளனர். மங்கோலியர், ஆப்கானியரின் பண்டை மூதாதைகள் எனப்பலர். இவர்களில் சிலர் வந்த பிற்காலத்தில் கற்றுப் புலமை அடைந்த பின் ஆர் விகுதியால் குறிக்கப்பட்டனர்..கல்வியால் உள்நாட்டினரும் அங்கனம் பணிவுடன் குறிக்கப்பட்டனர்.  . பெயருடன் ஆர் விகுதியைப் பெற்றுத் தருவது புலமையும் கல்வியும்.  கல்வி என்பது கற்றாலே வருவது கொரனா போல்வது  கற்காமலே வரும்.  என்ன செய்வது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.