திடீர் என்ற சொல் மிக்க அழகாக அமைந்த சொல்போல் தோற்றமளிக்கின்றது. பல்வகை உணவுகளில் இந்தத் திடீர் என்ற சொல் வந்து இணைந்துகொண்டு, திடீர் சாம்பார், திடீர் இட்டிலி, திடீர்த் தோசை என்று ஒரு கவர்ச்சியையும் உண்டாக்குகிறது. திடீர் நடவடிக்கையும் உள்ளது. இப்போது "அதிரடி" என்ற சொல் அதிகமாகப் புழக்கம் காண்கிறது. பலகாலம் ஆலோசனையிலிருந்து எடுக்கப்பட்ட முடிவுகூட, ஊடகவியலாளர்களுக்கு "அதிரடி" யாகத் தோன்றலாம்! படிப்போரையும் கேட்போரையும் கவர்வதற்காக இந்தச் சொல் பயன்படுத்தப் படுவதாகவும் இருக்கலாம்.
ஒரு பொருளின் விலையை " அதிரடியாய் இருக்கிறது" என்று சொல்லலாம் என்பது சென்னைப் பல்கலைக் கழகக் கல்வியாளர்களின் கருத்து என்று தெரிகிறது. பொய்யையும் அதிரடி என்னலாமாம். அச்சந் திகிலு மதிரடியுஞ் சொற்பனமும் என்று இணைத்துச் சொல்லப்படுவதுண்டு. சொப்பனம் தான் சொற்பனம். ( உளறும் உறக்கம்). அதிர்ச்சிதரும்படி பேசுபவன் அதிரடிக்காரன்.
அதிர்வு, அடித்தல் என்ற இரு கருத்துக்களும் அதிரடியில் உள்ளன. திடீர் என்பது உள்ளறுத்து விளக்கச் சற்றுக் கடினமுடையதாய் இருக்கலாம்.
நீர் திடுதிடு என்று கொட்டியது என்பதில் வேகமும் மிகையும் தெளிவாகத் தெரிகிறது. திடீர் என்பதில் இந்தக் கருத்து இன்னும் இருக்கின்றது. ஈர் என்ற இறுதி, இவ்வேகத்தையும் மிகுதியையும் ஈர்க்கத் தக்க ( இழுக்க அல்லது உண்டாக்கத் தக்க ) தன்மையைக் காட்டுகிறது. எதிர்பாராமையும் விரைவும் திடீர்த்தன்மையில் முதன்மை பெறுகின்றன. எ-டு: பெண்ணுக்குத் திடீர்க் கல்யாணம் என்ற வாக்கியத்தைக் காண்க. குப்பென்று, திடுதிப்பென்று, திடுமென்று என்றெல்லாம் செயலடைகள் பேச்சிலும் எழுத்திலும் வருவன.
சட்டென்று என்பதும் விரைவுக்குறிப்பு. ஆங்கிலத்தில் sudden என்பது இதுபோல் அமைந்த சொல். இத்தகைய விரைவுணர்ச்சி, அவ்வம்மொழியிலும் தோன்றியிருக்கலாம். டபார் என்ற வெடிப்பு. "daab! There was an explosion" என்பன நீங்கள் செவிமடுத்திருக்கலாம். இயல்பாகவே இதுபோலும் கதைசொல்பவர்களிடம் இவற்றைக் கேட்கவேண்டும். சடார் படார் என்பவும் அவ்வாறே.
சட், சடு, சடுதி என்பனவும் உள. சடுதி - ஜல்தி அணுக்கமுடையவை.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.