Pages

ஞாயிறு, 18 ஜூலை, 2021

அம்மை தமிழென்பது அமைப்பில் தெரியும்.

 மகர ஒற்று  0னகர ஒற்றாக மாறும். இது தமிழ்ப் பண்டிதன்மார் அறிந்த திரிபுதான்.  இதைப்போய்ப் புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டியதில்லை.

எடுத்துக்காட்டுகள் சில:

திறம்  -   திறன்.

அறம் -   அறன்.

இது கவி எழுதுவோனுக்கு அல்லது பாடுவோனுக்குத் தமிழில் ஒரு நல்ல வசதி. இதைப் பாருங்கள்_

"அறன் எனப்  பட்டதே இல்வாழ்க்கை; அதுவும்

பிறன் பழிப்......."  (குறள் )

எதுகைகள் அழகாய் அமைகின்றன.  பிறன் என்பதற்குத் தக,  அறம் என்னாமல் அறன் என்றே வந்தது. 

திறம் என்பது திறல் என்றும் திரியும். இவ்வாறு  இது  அறல் என்பதற்கு எதுகையானது.

மகர ஒற்று லகர ஒற்றாகவும் திரியும் என்றோம் அன்றோ?   

அப்படியானால் வேறு சில சொற்களிலும் இது இருக்கும்.  எல்லாச் சொற்களிலும் இது நிகழ்வதில்லை.

அம்மை என்பது அன்னை என்றாகும்   மகர  0னகரமானது.

அம் என்ற அடிச்சொல், தமிழில் தோற்றம் என்னும் பொருளை உடையது. இந்தப் பாட்டைப் பாருங்கள்.

"அமைவாம் உலகின் மக்களை எல்லாம்

அடிநாள் ஈன்ற அன்னை தந்தை

தமிழர்கள் கண்டாய் அறிவையும் ஊட்டிச்

சாகாத் தலைமுறை ஆக்கிய நாடு.   ---   தமிழ்நாடு.

இது கவி பாரதிதாசனார் பாட்டு.

உலகம் அமைந்த [தோன்றிய] ( போதே) அனைத்து  மக்களை(யும்)  தமிழ் அன்னையும் தந்தையும்  [ அடிநாளில் ]  ஈன்றனர். 

( உலகம் அமைந்த அடிநாளிலே அனைத்து மக்களையும் தமிழ் அன்னையும் தந்தையுமே ஈன்றனர் ). இவ்வாறு வாக்கியமாய் அமையும்.

அம் >  அமைவு  ( தோற்றமுற்ற காலம்).

அம்  - அழகு என்றும் பொருள்.

உலகின் மிக்க அழகான பெண் யார்?  உங்கள் அம்மாதான்.  சிறு பிள்ளையாய் நீங்கள் பார்த்துப் புன்னகை பூக்கவில்லை?  இதை  எந்த நாளும் மாறாதீர்.  உலக அழகிகளெல்லாம் பின்னர்தான்.

"ஊரெல்லாம் நீயே சென்றாலும் தானே

அம்மா போலே அழகும்

எங்கேயேனும் காணவும் ஆகுமோ சாமி?"   என்றார் இன்னொரு கவி.

கணேசன் என்னும் விநாயகன்,  எனக்கு அம்மாவைப் போலவே அழகான பெண் வேண்டுமென்று குளக்கரையில் காத்துக்கிடந்தும் அத்துணை அழகி யாருமே காணப்படவில்லை.  அம்மாவை எப்போதும் பாதுகாத்துக் கர்மவினை அண்டாமல் காத்துக்கொள்ளுங்கள்.  முற்றத் துறந்த முனிவரான பட்டினத்தடிகளும் 

முன்னை இட்ட தீ முப்புறத்திலே

பின்னை இட்டதீ தென்னிலங்கையில்

அன்னை இட்டதீ அடிவயிற்றிலே

யானு  மிட்ட தீ  மூள்க மூள்கவே

என்று கதறியுள்ளார்.   எவ்வாறு மறப்பீர்  அன்னையை.   " அம்மைய்ப்பா உங்கள்  அன்பை மறந்தேன், அறிவிலாமலே நன்றி மறந்தேன்"  என்பது பாட்டு.

தாயினும் ஒண்பொருள் ஏது?  ஈன்ற தந்தை சொல் மிக்கதோர் மந்திரம் ஏது.

அம்மா அழகு. 

அம்மை,  அன்னை என்ற திரிபுகள் உண்டு.  ஆனால் அல்லை என்ற திரிபு இல்லையோ? திறம், திறன், திறல் என்பதுபோல்,  அம்மை, அன்னை, அல்லை என்றுமாகி,  தாயைக் குறிக்கும்.

அமைப்பு என்ற சொல் தமிழாதலின், அம்மை தமிழாகும்.  இரண்டுக்கும் அம் என்பதே அடிச்சொல்.

இதை அம் என்ற அடிச்சொல் நமக்குத் தெரிவிக்கிறது.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

மெய்ப்பு 2300 17072021


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.