மேலை மொழிகளில் ஒரு னகரமே உள்ளது. ஆனால் தமிழுக்கு ணகரம், 0னகரம் மற்றும் நகரமும் உள. இவற்றுள் நகரம் சொல்லின் தொடக்கத்தில் மட்டுமே வரும். ணகரத்துக்கும் 0னகரத்திற்கும் உள்ள வேறுபாடு போற்றப்படும் ஒன்றாகும், அதாவது கடைப்பிடிக்கப்படுகிறது. பேச்சில்கூட இது ஒதுக்கப்படுவதில்லை. ஒப்பீடாக, ழகரம் பெரிதும் கடைப்பிடிக்கப்படாமல் பெரும்பாலும் ளகரமே அதற்குப் பதிலாகத் தலைகாட்டுகிறது.
ழகரம் மலையாளத்திலும் வழங்குகிறது. ஆனால் மழை என்பதை மளை என்று ஒலித்தலாகாது என்பதில் மலையாளிகள் மிக்க கவனமாய் உள்ளனர். அவர்கள் தமிள் என்று சொல்வதில்லை. சரியாகத் தமிழ் என்றே ஒலிக்கின்றனர். நீங்கள் மலையாளியா 'தமிழா' என்று அழகாகக் கேட்கின்றனர்.
ணகர 0னகர வேறுபாடு சில சொற்களில் சற்று மெலிவு கண்டுள்ளமை தெரிகிறது. இவற்றுள் ஒன்றை இங்குக் காண்போம்.
முனகுதல் என்பது முன் என்ற சொல்லினடிப் பிறப்பதாகும். முனகுதல் எனின் மூக்கினால் ஒலித்துப் பேசுதல். பேச்சு தொண்டையிலிருந்து மேலெழுந்து வெளிவராமல் நுனி மூக்கிலிருந்து வருமாயின் அதை முனகுதல் என்பர்.
முணுமுணுத்தல் என்பதும் முன் என்ற சொல்லிலிருந்தே பிறந்ததாகும். இது முனுமுனுத்தல் என்று அமையாமல் முணுமுணுத்தல் என்று வந்திருத்தல் காணலாம். இங்கு னகரமாய் வரற்பாலது ணகரமாய் வந்தது முணுமுணுப்புக்கு அழுத்தம்தர வேண்டியே, எனினும் சொல்லமைப்பின் காரணமாக வேறுபாடு மங்கியுள்ளது காணலாம்.
வேறு இவ்வாறு கலவைப்பட்டன உளவா என்பதை நேயர்கள் கண்டுபிடித்துச் சொல்வார்களாக. நாம் காத்திருப்போம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.