Pages

வெள்ளி, 18 ஜூன், 2021

நண்டுக்குள் ஒரு குன்று .....

 நண்டு என்பது  நீர்,  நிலம் என ஈரிடவாழ் உயிரி ஆகும்.  நண்டு என்பது ஞண்டு என்றும் எழுதவும் பேசவும் பட்ட சொல்.  இத்திரிபு  ( ந > ஞ) நயம் -  ஞயம் என்பது போலவே யாம்.  "ஞயம்பட உரை"  என்ற ஓளவையின் அமுதம்  நீங்கள் அறியாததன்று.

நண்டுக்குள் கை, கால், சதை, ஓடு இவையெல்லாம் உள்ளது.  ஆனால் அதற்குள் குன்று ஒன்று மறைவாக இருப்பதை நீங்கள் அறியீர்  என்பது எம் துணிபு  ஆகும்.

இதை அறிந்துகொள்ள, எகுன்று என்ற சொல்லை  ஆய்ந்திடுவோம்.  இச்சொல்லில் இறுதியில் நிற்கும் பகுதி  "குன்று" என்பது.  குன்று என்பது ஒரு சிறுமலையைக் குறிக்கும்.  குன்று என்பது அம் விகுதி பெற்று, குன்றம் என்றும் வருதற்பாலது.  எடுத்துக்காட்டு:  திருப்பரங்குன்றம்.

எகுன்று என்பதற்கு  "நண்டுக்கண்"  என்று பொருள்.  நண்டு என்றவுடன் தொலைவில் நிற்கும் நமக்கு இச்சொல் பழக்கமில்லாமல் இருக்கலாம். நம் வட்டாரத்திலும் புழக்கமும் இல்லாமல் இருக்கலாம். நண்டுகளை அடிக்கடி பிடித்துப் பழகியவர்களுக்கு இது நன்கு தெரிந்திருக்கும்.

எகுன்று என்ற நண்டுக்கண்ணுக்கு இன்னொரு பெயரும் உண்டு.   அதுதான் " குன்றி"   என்பது.   இச்சொல்லுக்குப் பிற அருத்தங்களும் (அர்த்தம்)  உள்ளன.

நண்டுக்கண் நண்டுக்கு வேண்டும்போது வெளியில் சற்று நீட்டி  எதையும் பார்ப்பதற்கும் வேண்டாதபெழுது உள்ளிழுத்துக் கொள்ளவும் ஆன திறம் பெற்றது .  வெளிநீட்சியிலிருந்து குன்றுவித்து  ( குறுக்கி) உள்ளே பதிந்து கொள்ளும் அதன் வல்லமையினால் அதற்குக்  குன்றி என்ற பெயர் வந்தது.

குன்றுதலை உடைய எதுவும் விரிந்துதான் பின் குன்றும்.  இல்லையேல் குன்றுதல் என்ற சொல் அந்த நிலைக்கு பாவிக்கப்படாது..1.  ஆகவே விரிவும் சொல்லமலே அதிலடங்கிவிடுகிறது.

ஆனால் சிலர் இந்தக் குன்றுதல் எழுதலின்பின் நடக்கிறது என்று தெளிவுபடுத்த இன்னொரு சொல்லைக் கையாண்டனர்.  அது எழுகுன்று.  நண்டுக்கண் எழுவதும் குன்றுவதுமாக உள்ள உறுப்பு -  எனவே  எழு குன்று ஆகிறது.  இது இருவினையொட்டுப் பெயர்  அல்லது இரு முதனிலையொட்டு.

எழுகுன்று என்பது ழுகரம் இடைக்குறைந்து,  எகுன்று ஆயிற்று.  

இடை வரும் ழுகரம் குன்றிய இடைக்குறைச்சொற்கள் பல தமிழில் கிட்டும்.  சுருக்க விளக்கமாக, ஒன்று காட்டுவோம்:

விழு + புலம் >  விழுபுலம் >  விபுலம்.

இங்கு விழு என்பது சிறப்பு என்னும் பொருளது.

வேறு எழுத்துகளும் குறைவதுண்டு.  எ-டு:

தப்புதல்  தாரம் (  தாரம் தப்புதல் )  >  தப்பு+ தாரம் > தபுதாரம் .

இச்சொல் தொல்காப்பியத்தில் உளது. கண்டுகொள்க.

ஆகவே எழுவதும் குன்றுவதுமாகிய நண்டுக்கண் எகுன்று என்று பெயர் பெற்றது இனிதே ஆயிற்று.

எழுங்கால் அக்கண்  ஒரு குன்றுபோன்றது என்று நீங்கள் விளக்க நினைத்தாலும் அதுவும் சற்றுப்பொருத்த முடைத்தே யாகி, நண்டுக்குள் ஒரு குன்று என்ற தலைப்புக்கு ஒரு வன்மை சேர்க்கவே செய்யும் என்பதும் அறிவீர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்பு.

குறிப்பு

1. பரவு > பாவு > பாவி(த்தல்).  காட்சிக்கு மட்டுமுள்ள ஒரு பொருள் பயன்படுத்தப் படுமானால்,  அதனை மனிதன் கையாளுதல் நிகழ்ந்து  செயல்பாடு பாவுதல் - பரவுதல் . பாவித்தல் நிகழ்கிறது.  அதனால் பாவித்தல் என்பது பயன்படுத்தல் என்ற பொருளை உறழ்கிறது. 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.