தொடங்குரை:
ஏடெழுத்து ஏதேனும் எழுதவேண்டும் என்று எண்ணுங்கால், எண்ணிறந்தன எம்மனத்துள் இயல்கின்றன. என்செய்வேம் யாம்! ( செய்வோம் என்பது இன்னொரு வடிவம்). அவற்றுள் ஒன்று: பாதுகாப்பு என்ற சொல். இச்சொல் நாம் அடிக்கடி செய்திகளில் மற்றும் நண்பர்களிடைப் பேச்சுகளிலும் கூடச் செவிமடுப்பது ஆகும்.
நேயர்கள் இச்சொல்லில் இரு பகுப்புகள் இருப்பதைக் காணலாம். ஒன்று பாது என்பது. இன்னொன்று: காப்பு என்பது. இரண்டையும் நல்லபடியாக உங்களுடன் இணைந்தே அலசுவோம்.
இணைப்பொருட் சொற்கள்
பாதுகாத்தல் என்ற பொருளுடைய பிறசொற்களைக் காண்போம்.
ஓம்புதல். இது பலவகைகளில் ஒரு சிறந்த சொல். தொடக்கத்திலே "ஓம்" இருக்கின்றதன்றோ. தன்னை இறைவன் பாதுகாக்க வேண்டுமிடத்துப் பற்றன் பயனுறுத்தும் பண்புமிக்கச் சொல். ஆனால் இன்று இலக்கியச் சொல்லாக மட்டுமே உள்ளது. இறைப்பற்றுப் பாடல்களாயின் பழம்பாட்டுக்களாய் இருத்தல் கூடும். இச்சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், யாம் மேலும் ஆய்வு மேற்கொள்ளவில்லை. ஆயின் தமிழிலக்கியத்தில் ஆங்காங்கு வந்துழிக் காண்க
ஓம்படை, ஓம்படுத்தல்; ஓம்படுத்தும் ~ அல்லது பாதுகாவலுறவேண்டிப் ~ பெரியோர் சொல்வது.
புறங்காத்தல் - இதுவும் இப்பொருள் உடையதாயினும், இது இலக்கிய வழக்கினது ஆகும். குடியைப் புறங்காத்தல் நம் ஒவ்வொருவருடைய கடமையும் ஆகும். தான் பிறந்த குடியை வெளித்தாக்குதல்களிலிருந்து காத்தல் என்பது குடிபுறங்காத்தல்.
காத்தல் என்றாலே பாதுகாப்பை(யும்) குறிக்கும் என்கிறது திவாகர நிகண்டு.
காப்பு பாதுகாத்தல், பாதுகாவல் எனினுமது. விகுதி வேறுபாடுதான். காக்கை என்ற சொல் ஒரு பறவையைக் குறித்தல் மட்டுமின்றி இப்பொருளும் உடையது.
கா - இது பிறசொற்களைப் பின்னொட்டி வரும். எ-டு: பூங்கா. கடிமரக் கா . புறநானூற்றில் "கடிமரந் துளங்கிய கா" என்று வருகிறது. புறம் 23.
ஆதரித்தல் என்பதும் பாதுகாப்பு என்ற பொருளில் ஆளப்பட்டுள்ள சொல். "இப்புலவர் குறுநில மன்னரால் ஆதரிக்கப்பட்டவர்" என்பதில் அப்பொருளும் வாழ்வாதாரம் அளித்தவர் என்ற பொருளும் உள்ளன.
இரட்சித்தல் என்ற சொல்லிலும் இப்பொருள் தொக்கு. இரக்கம் >இரக்கி > இரட்சி > இரட்சித்தல். ஒ.நோ: பக்கி > பட்சி. அட்சரம் > அக்கரம். தக்க இணை> தக்கிணை> தட்சிணை. ( குரு, பூசாரிக்குகட்குச் சம்பளமாகத் தரப்படுவது).
அகரம் தொடங்கிச் சரமாக (வரிசையாக ) வருவது அச்சரம். அடுத்தடுத்து வருவது அடு + சரம் ; அச்சரம் ( டு இடைக்குறை) என்பது இருபிறப்பி. சரம் : சரி+ அம் = சரம், இகரம் கெட்டுப் புணர்தல். ஒன்றன்பின் ஒன்றாய்ச் சரியாக வைக்கப்பட்டது.
அக்கரம் -{ பல்பொருளொரு சொல்.}
அனுபாலனம் ( அணுகிப் பாலித்தல் ). அணுகு - அணு - அனு. பாலித்தலாவது தம் பாதுகாவலுக்குள் ஒரு பாலாக அல்லது பகுதியாக மேற்கொள்ளுதல். பால் - பகுதி. எ-டு: அறத்துப்பால். அறத்தைக் கூறும் பகுதி. பால் - பாலி - பாலித்தல்: பகுதியாய்க் கொள்ளல். (அமைப்புப் பொருள்). பால்> பாலி + அன் + அம் = பாலனம். அன் - சொல்லாக்க இடைநிலை. அம் என்பது இறுதிநிலை அல்லது விகுதி, இச்சொல் பரிபாலனம் என்பது போல்வது. பரிதல் - பல்பொருட்சொல். இவற்றுள் வெளிப்படுதலுமாம். இச்சொல் பர > பரி என்ற பரவற் கருத்தும் உடைத்து.
பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப்
பாலித்திட வேண்டும் ( பாரதி)
பத்திரம் - "பத்திரமாகப் போய்வருக".
பரித்திராணம் - பரி + திரு + அண(வு) + அம்> பரித்திரு + அணம் > பரித்திராணம். பரிந்து மேலான முறையில் அணவி அமைதல்.
பாலனம் - மேலே பரிபாலனம் காண்க
புரத்தல் -- "இரவலர் புரவலர் நீயும் அல்லை " (புறநானூறு).
புரவு - " பயிர்களுக்கு நீர்ப்புரவு இல்லை"
அரக்கம் - "ஒவ்வொரு நாடும் அணுகுண்டு வைத்திருந்தால் பாருக்கு ஓர்
அரக்கம் இல்லை". அரிய நிலை என்பது பாதுகாப்பு உடைய நிலையே.[ அரு+ அ+(கு+அம்) ]
பெட்பு - பாதுகாப்பு. பெண்+பு = பெட்பு. பெண் பாதுகாக்கப்படுபவள், விரும்பப் படுபவள் ஆதலால் இச்சொல்லிலிருந்து பெட்பு என்ற சொல்லமைந்து இப்பொருள்களைக் குறித்தது.
என்றிவ்வாறு பாதுகாப்பைக் குறிக்கத் தமிழில் சொற்கள் பலவாகும்.
பாதுகாப்பு:
பதுங்கு: பது > பாது + காப்பு.
பதுங்கியிருந்து ( படைத்தலைவன் போன்றோரைக்) காப்பது. அல்லது எதிரியை வீழ்த்தி இடரற்ற நிலையை உய்ப்பது.
பார்த்தல் : பார்த்து > பாது. இடைக்குறை இரு மெய்கள். பாது + காப்பு.
பகுத்துக் காப்பு > பகுத்து > பாது. பாது+ காப்பு. பகுதி என்ற சொல் பாதி என்று திரிந்தது போலுமே பகுத்து என்பதும் பாது என்று திரியும். அரசுத் தலைவர்கள் வருகையில் அவர்கள் குழாம் பகுத்துக் காக்கப்படுகிறது. மக்கள் கூட்டத்தை வேறாகக் காப்பர்.
மேலே பாது என்பது விளக்கப்பட்டது. இம்மூன்று வழிகளிலும் இச்சொல் அமைவுறும். ஆதலின் இது பல்பிறப்பிச் சொல்.
காப்பு
கணவன் தன்னை வாழ்வில் காக்க என்று மணமகள் காப்புக் கட்டிக்கொள்கிறாள். இது நூல், பொன்வளையல் என்று எதுவாகவும் இருக்கலாம். இறைவனிடமும் வேண்டிக் கட்டிக் கொள்ளலாம். இதனால் கையில் அணிவதற்குக் காப்பு என்ற பெயர் ஏற்படலாயிற்று.
நிதிக்காப்பகம் , பணக்காப்பகம் - வங்கி. பணவகம் எனினுமாம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.