Pages

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

பிரபலம் - சொல் பிரபலமானது

[IF you are a visitor and by an error get into an  edit or compose page,   please leave the page without intentionally or accidentally (on touch screen devices)  making any changes to the text.  Thank you] 


பிரபலம் என்ற சொல்லைப்பற்றிச் சிறிது சிந்தனை செய்வோம். 

ஒருவன் தான் வாழும் வீட்டுக்குள் என்னதான் அதிகாரம் அல்லது மேலாண்மை செலுத்தினாலும் அவன் பிரபலம் அடைந்துவிட்டான் என்று யாரும் சொல்வதில்லை. ஒரு வீட்டுக்குள் ஐந்து பேர் இருக்கிறார்கள் என்றால், அந்த ஐந்துபேருக்கும் அவன் தெரியாதவனாக இருக்கமுடியாது.   வதியும் அனைவருக்கும் அவன்  தெரிந்தவனானாலும் அவனை யாரும் பிரபலம் என்று கூறும் தகுதியை அவன் அடைந்துவிடமாட்டான்.

பிரபலமாவது வீட்டுக்கு வெளியில்தான்.  வீட்டுக்கு வெளியில்  அவனைப் பலரும் அறிந்து வைத்திருந்தனர் என்றால் அவன் சற்று பிரபலமானவன் எனலாம்.

புறத்தே பலரும் அறிந்தவன் அவன்.

இதே வாக்கியத்தைச் செயப்பாட்டு வினைகொண்டு முடிப்பதானால் -  புறத்தே பலராலும் அறியப்பட்டவன் அவன்.

எப்படிச் சொன்னாலும் அதுவே ஆகும்.

புற  -   புறத்தே -   வெளியில்;

பல  -   பலராலும்;  அல்லது பலரும்;

அம்  - இது அமைவு அல்லது அமைப்பு என்பதைக் காட்டும் ஒரு சொல்லீறு அல்லது விகுதி.

விகுதி என்பது சொல்லின் மிகுதி.   விகுதி <>மிகுதி.  வகர மகரப் போலி. இதற்கு மற்றோர் உதாரணம்:  விஞ்சு  -மிஞ்சு. இதுபற்றிய மேலும் சில தெரிப்புகட்கு  முன்வந்த இடுகைகளைப்   பார்க்கலாம்.

[ தெரிப்பு -  explanation ]

அமையும் சொல்லை   நீட்டி  அமைப்பது  விகுதி. ( suffix)

பிரபலம் என்பது  "புறப்பலம்"தான்   என்பது பொருளமைப்பால் தெளிவாகுகிறது. புற என்பதைப் பிர என மாற்றி,  வல்லெழுத்து  "(ப்)"  மிக்கு நிற்றலைக் களைந்து,  இச்சொல்  அமைந்துள்ளது.

இதேபோலும்  "பிறர் அறிமுகம்" என்பதைப்   பொருளாகக் கொண்ட வேறு சில சொற்களும் உள்ளன.   புகழ் என்பதொன்றாம். பலராலும் பாராட்டப்  பெறுவதே  புகழ்.   இசை என்ற சொல்லுக்குப்  பாட்டு,  வாத்தியம், இவற்றின் கலப்பு என்ற பொருளினும் மேம்பட்ட உள்ளுறைவு  உள்ளது.  அது யாதெனின்,  கவிகளால்  பாட்டில்  புகழப்படும் தன்மை.  அதுவும் வெறுமனே யன்றி,   ஈதலால் (  பொருள் வழங்கும்  தன்மையால்,  தரும காரியங்களால் )  வருவது ஆகும். இதை நாயனார்:

"ஈதல் இசைபட வாழ்தல்,  அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு"

என்று வரையறவு செய்தார்.  இசை என்பது தகுந்த   பிறர்க்கு வழங்கி அதனால் கவிகளால் பாடப்பெற்றுப்  பலராலும் போற்றப்பட்ட நிலை. 

பிறவிப்  பயன்  என்று  வேறொன்றும் தேடவேண்டாம்.   அறச்செயல்களில் ஈடுபட்டுப்   பாட்டுப் பெற்றுப்   பிறரால்  அறியப்படுதல்  என்பதே  ஒருவற்கு  அடையத் தக்கது  ஆகும்.

பிரபலம் என்ற சொற்கோவையில் இவ்வளவு நுட்பம் இல்லை என்றாலும் அது  ஏதோ ஒரு காரணத்துக்காக "வீட்டுக்கு வெளியில் பலராலும் அறியப்படுதல்" என்ற இயல்பான பொருளைத் தருகிறது.  இக்காரணம் பெரிதும் நன்மை சார்ந்ததே என்பது சொல்லாமலே தெள்கும்  என்பது திண்ணிதாம்.

தெள்கும் -  தெளிவாகும்.

புற என்பது பிற என்றானதில் வியப்பில்லை.  புறக்கட்டு என்பதை பிறக்கட்டு என்பது பேச்சுமொழி.  " வீட்டுக்குப் பிறக்கட்டு"  என்பர். பிற என்பது பிர என்றானது என்று கோடலும் கூடுமாயினும் அஃது  " வேறு பல"  என்று பொருள்தருவதால் யாம் அதை உகக்கவில்லை. அப்பொருள்தான் பொருத்தம் என்று நீங்கள் கருதினால்  அவ்வாறே  கொள்வதில் பெரிய முரண்பாடு ஒன்றுமில்லை என்று முடிப்போம்.

அறிக மகிழ்க.

மெய்ப்புபின்.

இந்த இடுகையில் இட்டபின் சில மாற்றங்கள்

காணப்பட்டன. அவை இப்போது திருத்தம் பெற்றுள்ளன.

மீண்டும்  இது  கண்காணிக்கப்படும்.

Editor's note:  Original restored.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.