Pages

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

நரி - பெயர் அமைவு. அடிச்சொல்: நரு இன்னும்...

 நரி என்னும் சொல் நாய் போலும் ஒரு விலங்கைக் குறிப்பது. இது காட்டுவிலங்காகும்.  இதை விலங்கு காட்சி சாலைகளிலும் வைத்திருக்கிறார்கள். அன்றி வீடுகளில் யாராலும் வளர்க்கப்படுவதில்லை என்று தெரிகிறது.

நரிகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கிக் கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை. இதற்குத் தமிழில் ஏற்பட்ட பெயரும் இதன் காரணமாகவே ஏற்பட்டுள்ளது. இது தந்திரமுள்ள விலங்கு என்பர். கதைகள் பலவற்றில் நரி தவறாமல் வந்து சிறு பிள்ளைகளை மகிழ்விக்கிறது.

நரி என்ற சொல்லின் அடிச்சொல் நரு என்பது.   நெருங்கு என்ற சொல்லில் உள்ள நெரு என்ற அடிச்சொல்லும் நரு என்பதும் தொடர்புள்ளவை.

நரு >< நெரு.

நருள்  -  மக்கள்நெருக்கம் .  " நருள் பெருத்த ஊர்".

நரு >  நரி :  அதுபோலும் விலங்குடன் நெருக்கமாக (கூட்டமாக) வாழும் விலங்கு.

நரு >  நரன்:  மனிதன்.  ( மனிதனும் தன் போலும் பிறருடன் நெருங்கி வாழ்பவன் தான். அதனால்தான் நரன் என்னும் இப்பெயரைப் பெற்றான்)

gregarious  என்னும் ஆங்கிலச் சொல் இதை விளக்கவல்லது.

Man is a gregarious animal. 

நரு + இ =  நாரி.  ( பெண் மனிதர்).  முதனிலை (முதலெழுத்து நீண்டு அமைந்த சொல்..  இவ்வாறு நீண்ட சொற்களைப் பழைய இடுகைகளில் காண்க).இங்கு நரு என்னும் அடிச்சொல் மாற்றுப்பாலானுடன் நெருங்கி வாழ்தலைக் குறிக்கும்.  

பரு + இய > பாரிய  என்ற சொல்லிலும் இங்ஙனம் சொல் நீண்டது.

பரு > பார் ( உலகம் )  இதுவும் நீண்டமைந்த சொல்லே.  பர > பார் எனினுமாம்.

பரு > பருவதம் > பார்வதி  -  நல்ல எடுத்துக்காட்டு.

---  என்று சில காண்க.

ஒன்றை நெருங்கி இன்னொன்று நிற்றல் " நிர >  நிரை" எனப்படும்.

நிர >  நிரை:  ( நிரையசை -  யாப்பிலக்கணம்).

நிர >  நீர்  ( இதன் அடிப்படைப்பொருள் இடையில் விலகல் எதுவுமின்றி ஒன்றாகி நிற்கும் பொருள் என்பதுதான். அதனாலேதான் இப்பெயர் இதற்கு.

இக்குறளை நினைவிலிருந்து சொல்கிறேன். சரியாகச் சொல்கிறேனா என்று நீங்கள்

பார்த்தறிக.  

நிரைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின் நீர பேதையார் நட்பு.

இது இணையத்தில் கிடைத்த மணக்குடவர் உரை:

பிறை நிறையும் நீர்மைபோல, ஒருநாளைக் கொருநாள் வளரும் அறிவுடையார் கொண்ட நட்பு; மதியின் பின்னீர்மை போல ஒருநாளைக்கொருநாள் தேயும், பேதையார் கொண்ட நட்பு என்றவாறு.

இஃது அறிவுடையார் நட்பு வளரும் என்றும் அறிவில்லாதார் நட்புத் தேயும் என்றும் கூறிற்று.

நான் எழுதிய குறள் சரி என்று பார்த்துக்கொண்டேன். நன்றி.

அழகான குறள். பொருளும் மலைபோல் சிறந்தது.

நிரத்தல் என்ற வினையின் பொருளும் அறிந்துகொள்ளுக.

உணவை நிரந்து பரிமாறு,  நிகழ்ச்சி நிரல் என்ற வழக்குகளை நோக்குக.

நுல் அடிச்சொல்.  நுல் > நில்.  இடம் நீங்காமை குறிக்கும்.  நுல் > நூல். ( நீங்காமல் செறிவுமாறு திரிக்கப்பட்டது ).

நுல் > நுர் > நுரை:  நீங்காமல் (ஓட்டி)  காற்றுப்புகுந்து அடைவுடன் தோன்றி நெருங்கி நிற்பது.

நரு > நரல்: இது வினைச்சொல்லாக "நரலுதல் "  என்று வரும்,  இது ஒலித்தல் என்று பொருள்பட்டாலும்,  பல ஒலிகளின் கலப்பையே சிறப்பாகக் குறிப்பது. இதற்கு எடுத்துக்காட்டு  தேனீக்கள் என்பர். நரிகள் ஒன்றாகக் கூட்டமாகச் செல்பவை என்றாலும் ஒலியும் ஒன்றாகச் சேர்ந்து எழுப்புவனவே ஆகும். இக்காரணமும் இதற்குப் பெயர் உண்டாகப் பொருந்தும் காரணமே ஆகும்.

நரல்வு என்ற சொல்லும் உள்ளோசை எழுதல் குறிக்கும். ( இசைக்கருவி) 

மனிதனும் ஒலிசெய்யும் திறனுள்ளோனே யானாலும், கூடிவாழ்வோன் என்ற பொருள்கூட்டுதலே சிறப்பு என்று கருதலாம். ஆயினும் இங்கு தரப்பட்ட சொற்பொருள் ஆய்ந்து நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள். எனக்கு இரண்டும் ஏற்கத்தக்கனவாகவே தோன்றுகிறது.  எதை ஏற்றாலும் இனிமையே.

மனிதனைப் பலியிட்டுச் செய்யும் யாகம் முன் காலங்களில் நடைபெற்றன. இன்றும் சொந்தப் பிள்ளைகளை நரபலி கொடுத்த நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.  இது நரமேதம் எனப்படும்.

கடல் எப்போதும் அலைகளால் ஒலிசெய்வதால் அதற்கு " நரலை " என்ற பெயரும் உண்டு.

நரவரி என்பது நரசிங்கம் என்று பொருள்தரும்.   நர + அரி.  இதுபின் நரகரி என்று திரிந்தது.  வ> க திரிபு,

இவண் அதிகமிருப்பதால் தளர்ச்சி உண்டாக்காமல் இத்துடன் நிறுத்திப் பின்னொருநாள் தொடர்வோம். (பின்னூட்டம் மூலம் கேட்டுக்கொண்டாலன்றி,  ஒரே தொடர் சலிப்பை ஏற்படுத்தக்கூடுமாதலால் சில காலம் சென்றபின்பே அதை மீண்டும் மேற்கொள்வோம் ).

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்



 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.