Pages

திங்கள், 8 மார்ச், 2021

சுழுமுனை நாடி

 யோகம் என்பது முந்துவடிவில் ஓகம் என்றிருந்தது. இது வெள்ளப் பெருக்கையும் மக்கட் பெருக்கத்தையும்  குறித்தது.  பழைய தமிழ்நூல்களிலும் வந்துள்ளது. உள்ள நலமும் உடல் நலமும் பெருக்கம் அடைதற்கான ஈடுபாடுகளையும் குறிக்கும்.  இறைவனுக்கும் பற்றனுக்கும் உள்ள தொடர்பின் பெருக்கத்தையும் குறிக்கும்.  அடிப்படைக் கருத்து "பெருக்கம்" என்பதுதான். 

இந்தச் சொல்லுக்கான அடிச்சொல் ஓங்கு என்ற வினைச்சொல்.  இதுவும் பெருகுதல், மிகுதல் என்று வருவதுதான்.  ஓங்கு என்ற வினைச்சொல்லில் கு என்பது வினையாக்க விகுதி. இதை விலக்கிவிட்டால் மிச்சமிருப்பது ஓ - ஓம் என்பதுதான்.  இங்கு ஓ+ கு > ஓங்கு என்று விளக்கி,  இடையில் ஒரு மெய் தோன்றியது எனினும்  ஓம்+கு > ஓங்கு என்று நிறுத்தி இறுதி மகர ஒற்று ம்>ங் எனத் திரிந்தது எனினும் ஒன்றுதான்.  எவ்வாறும் விளக்கலாம்.  ஒ ஓ முதலியவை ஓசை, ஒலி என்பவற்றின் மூலச்சொல் ஆகும்.

  அகர வருக்கத்   தொடக்கத்துச் சொற்கள்  யகர வருக்கங்களாகவும் மாறும்.  எடுத்துக்காட்டு:  ஆனை >  யானை.  ஆண்டு >  யாண்டு.  இவ்வாறே  ஓகமென்பது யோகமாயிற்று.  ஓசனை > யோசனை என்பதும் காண்க.


பதஞ்சலி யோகம்

சிதம்பரத்தில் வாழ்ந்து யோகசூத்திரம் செய்த பதஞ்சலி முனிவர்,  மாமூலரின் மாணவர் என்று அறியப்படுகிறது.  மாமூலரிடமிருந்து தாம் அறிந்த யோகமுறைகளைப் பற்றிய நூலை இவர் இயற்றினார்.  ஆன்மாவைக் கூடுவிட்டுக் கூடுபாய்தல் என்று சொல்லப்பெறும் இடமாற்றம் செய்யும் உள்ளடிகளை மாமூலர்  முற்றறிந்து செயல்படுத்தி நெடுநாள் உயிரொடு உலவினார். இவர் அளித்த உயர் செல்வங்களாகிய ஆன்மிக அறிவை பதஞ்சலி உள்ளிட்ட இவர் மாணாக்கர்கள் பரப்பினர்.  மாமுலரின் பாடல்கள் திருமந்திரம் என்ற நூலில் உள்ளன.  

உடலைப் பற்றிய பல மறைதிறவுகளைத் தமிழர்கள் நெடுநாட்களாக அறிந்திருந்தனர். இதைக்கூறிய பல நூல்கள் மறைந்துவிட்டன.  சிலவே இன்னும் கிடைக்கின்றன. சிவஞான  போதமுதலியவை இன்னும் நிலவுதலால் அவற்றை அறிந்துகொண்டு விளக்கம் பெற முயற்சி செய்தல் நம் கடனாகும்.


சுழுமுனை 

சுழுமுனை நாடி பற்றிய உண்மையைத் தமிழர்கள் எக்காலத்திலிருந்து அறிந்திருந்தனர் என்பது தெரியவில்லை.  மிகப்பழங்காலச் செய்திகள் தொன்ம வடிவிலிருப்பன,  அதனால் இத்தகு ஆன்மிக அறிவு நம் நினைவுகட்கு அப்பாற்பட்ட தொல்பழங்காலத்திலிருந்தே வந்துகொண்டிருக்கிறது என்று நாம் முடிபு கொள்ளலாம்.

சுழுமுனை என்ற சொல்லுக்குப் பிற வடிவங்களும் உள்ளன. இவற்றை ஈண்டு விரித்துக் கூறலியலாமை உன்னுக.  தொகுப்பு இதுவே.  அவற்றுள் சுழிமுனை என்பதுமொன்று.  சுழுமுனை என்ற சொல் சுழுனை>  சுழுனா என்று திரியும்.  இதில் மு கெட்டு னை என்பது னா என்று நீண்டது.   இதற்கு நடுநாடி என்ற பெயரும் உள்ளது.   இடகலை,  பிங்கலை இரண்டிற்கும் நடுவில் இருப்பதால் இது இப்பெயர் பெற்றது.  பெரியபுராணம் இதைப் பிரம்மநாடி என்றே குறிக்கிறது.   பெருமம் அல்லது பெரிதான நாடியும் பெருமான் உறையும் நாடியும்  ஆகும்.   பிரம்மம் -  இறைமை.  திருமந்திரம் இதனை மூலநாடி என்று குறிக்கிறது.  இடப்புறத்திருப்பதால்  இடகலை,  இடை என்றும் வரும். நடுவைகிய சுழுமுனைக்குப் பின் எண்ணப்படுவதால்,  பின் கலை > பிங்கலை ஆயிற்று.  இங்கு  னகர ஒற்று  ஙகர ஒற்றானது சந்தித் திரிபு.   பின்பு + அம் =  பிம்பம் என்பது  இத்தகு ஒலித்திரிபே. பின்>பிந்தி என்பதும் அறிக.


சுழுமுனை என்றால் பிற நாடிகளால் சூழப்பெற்று அவற்றுள் முன் நிற்பது  சுழு -  முன் - ஐ..  ஐ என்பது விகுதியாதலோடு,  மேன்மையும் குறிக்கும். பழங்காலத்தில் " உயர்வுப் பொருள்" குறித்த ஐ விகுதி உள்ளபடியால் வெறுமனே விகுதியாதல் அன்றி உயர்வுடையது என்று பொருள்தருதலுமாம்.

சூழ் வினைச்சொல்.  சூழ் + அல் = சுழல். சூழ்ந்து வீசும் காற்று. முதலெழுத்து குறுகி விகுதி பெற்றுப் பெயர்ச்சொல் ஆனது. இலக்கணத்தில் தொழிற்பெயர் ஆனது.  அதாவது ஒரு வினையிலிருந்து அமைந்த பெயர்.  இதில் வினை - சூழ்(தல்).

சுழுமுனை என்பதில் முன்+ஐ என்று இறுதிப்பாதியை விளக்காமல், முனை (தல்)  - முன் நின்றிடுதல் என்று கொண்டு விளக்கினும் அது.

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்,  தமிழ் என்பதற்கு 100 பொருள் கூறிப் பாட,  பாரதிதாசன் எழுந்துபோய் அவரை அணைத்துக்கொண்டாராம். புலமைப்பேறு உடையோர் இங்ஙனம் விளக்கலாம்.  யாம் தருவது சுருக்க விளக்கம், தமிழில் மகிழவே.


கலை:

கலை என்பது இந்நாடிகள் உடலில் கலந்து உள்ளவை என்பதைத் தெரிவிக்கிறது..  கல + ஐ  என்பது  வகர உடம்படு மெய் பெற்று கலவை என்றும்  கல + ஐ > கல் + அ + ஐ > கல்+ ஐ என்று அகரம் கெட்டு லகர ஒற்றுடன் ஐ புணர்ந்து கலை என்றும் வரும். இதன் மூலச்சொல் குல் என்பது.   கலந்திருத்தலாவது இணைந்து இருத்தல். ஓரிடத்திருத்தல். குல் > குலவு: ஓரிடத்திருந்து தொடர்பு பழகுதல். குல் > குலை :  வாழைக்குலை.   திராட்சைக் குலை.  குல் என்பதன் பொருளும் இணைந்திருத்தலே  ஆகும்.  குல் >கல். கல்லும் பாறையும் இணைந்து திரண்டு, மணல்போல் சிதறலாக இல்லாமல் கிடைக்கிறது. இவ்ற்றின் உதவியால் கலை என்ற சொல்லின் திறமறிக. 

இந்தக் "கலை" வேறு.  கல்வியுடன் தொடர்புடைய கலை ( இசைக்கலை,  நடனக் கலை) போல்வன வேறு .  ஒன்று சேராமல் கலைத்து விடும் "கலை" என்ற வினைச்சொல் வேறு.   இவை அமைந்த விதமும் பொருண்மையும் வெவ்வேறாம்.


நாடி:

நாடிகள் பத்து என்ப.  ஆகவே  " பதின்மநாடிகள்"  "தசநாடிகள்"  என்று கூறுதலும் அமையும்.

நாடி என்பது உடலில் நடப்பட்டது போலும் இணைந்திருப்பது.  நடு(தல்) + இ > நாடி,  முதனிலை நீண்டு திரிந்த தொழிற்பெயர்.  தொழிற்பெயர் என்பது ஒரு வினைச்சொல்லிலிருந்து அமைந்த பெயர்ச்சொல்.  தொழில் என்பது செய்கை அல்லது வினையைக் குறிக்கிறது. நாடி என்பதில் இ விகுதி. படி+ஆம் = பாடம் என்று அம் விகுதி பெற்று முதல் நீண்டு அமைதல். 

மாடி என்ற சொல்லும் காண்க.  மடுத்தல் என்பது வினை.  ஒவ்வொரு மாடிக்கும் அல்லது நிலைக்கும் மேல்தரைகள் பக்கச்சுவர்களுடன் சேர்ந்து இருக்கும்.  இச்சேர்வின் காரணமாக,  மடு> மடு+ இ > மாடி என்று முதலெழுத்து நீட்சி பெற்று இகர விகுதியும் பெற்று  "  மாடி" என்ற சொல் அமைந்தது. இது நாடி போல்வதான சொல்லமைப்பு.  தரை அல்லது நிற்கும் பரப்பு,  மடித்து மடித்து மேலெழுப்பியது போலுமிருப்பதால்,  மடி> மாடி என்றும் விளக்கலாம். அப்போதும் அது முதலெழுத்து நீண்டு விகுதி பெற்ற சொல்லே. 

இதுகாறும் கூறியவற்றால் சுழுமுனைக்குப் பெயர் அமைந்த விதம் அறிந்தீர்.

அறிக.மகிழ்க.

மெய்ப்பு  பின்பு.

முகக் கவசம் அணிந்து

இடைவெளி கடைப்பிடிக்க.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.