Pages

சனி, 20 மார்ச், 2021

கொண்டிகளும் கொட்டிகளும். போர்க் கொள்வனை

போருக்கு முந்தின களிப்பாட்டம் 

அரசர்கள் காலத்தில் போர்கள் மிகுந்த முன்னேற்பாடுகளுடனும் பூசைபோடுதல் மாலையணிதல், கள்ளருந்துதல், உணவுகள் பரிமாறுதல், குளியல்கள், கோலாகலங்கள் ஆகியவற்றுடனும் நடைபெற்றன. போருக்குப் போய் மடியும் நிகழ்வுகளும் பல.  மீண்டுவருதல் மறுபிறவிதான்.   ஆகவே போர்மறவர்கள் எல்லா விதங்களிலும் நுகர்ந்து மகிழுமாறு அரச அதிகாரிகள் பார்த்துக்கொண்டனர். இவ்வாறில்லையாயின் படைக்கு ஆள்கிட்டுவதும் குதிரைக்கொம்பு  ஆகிவிடும்.  

இயலாமை அரசன்

போதுமான உணவு இருப்பு இல்லாத நிலையில் போர் தம்மீது சுமத்தப்பட்டுத் தவிக்கும் அரசனின் நிலை வேறு.  சவுக்கடி கொடுத்தாவது படையில் பலரையும் பணியவைத்துப் போருக்குத் துணியவைக்க வேண்டியும் அவ்வரசனின் நிலைமை கட்டாயம் ஆகிவிடும்.  இது தமிழ அரசன், சீன அரசன், யப்பானிய அரசன் , வெள்ளைக்கார அரசன் என்ற பாகுபாடின்றி யாவர்க்கும் பொதுப்பாடமாகுமன்றி ஒரு புதுப்பாடமன்று.  அவர்களை இப்போது போரில்லாக் காலத்தில் தாக்கி எழுதுவதில்  ஒரு பயனும் இல்லை.  வரலாறு மீண்டும் மீண்டும் அதே பாடத்தைப் புகட்டவல்லது என்பது ஓர் ஆங்கில அமுதமொழி. History repeats itself. (English ).

சமையல்,  ஆக்கிகள் > ஆச்சிகள்

படை நகரும்போது ஒரு சமையல்காரப் படையும் பின்னே நகரவேண்டும்.  போர் ஆயுதங்களைக் கொண்டுசெல்லும் வழிகள் எப்போதும் திறந்தே இருக்கவேண்டும்.

ஆக்கிப் போடுகிறவர்கள்  ஆக்கிகள்  அல்லது  ஆச்சிகள் எனப்பட்டனர்.  க - ச போலியாகும்.  ஆய்ச்சிகள் என்பது வேறுசொல் எனினும் அதுவும் திரிந்து ஆச்சி என்று குழப்பமுண்டாக்கலாம்.  சிறைபிடிக்கப்பட்ட கைதிகளைக் கொண்டு உணவு சமைத்துண்ணல் சற்று ஆபத்தானது.  உலகில் போர்கள் பல செய்த புகழின் உச்சியில் இன்றுமுள்ள ஒரு படைத்தலைவருக்கு நஞ்சிடப்பட்ட இறைச்சி தரப்பட்டு அவர் சின்னாட்களில் மறைந்தார். பெயர் யாதும் குறிப்பிடப் படாது.

வெற்றி பெற்ற மன்னன் பெண்டிரொடு நுகர்ச்சி:

போரில் வெற்றியடைந்த மன்னன் தோற்ற நாட்டிலிருந்து பெண்களைக் கொண்டுவந்து தக்க இடத்தில் சிறைவைப்பான். இந்தப் பெண்கள் மன்னனின் படையணிகட்குச் சமர்ப்பணம்  ஆகிவிடுவர்.  சிறந்த அழகியை அவன் வைத்துக்கொள்வான்.  இவ்வாறு அட்டிலா த ஹன் என்று வரலாறு கூறும் ஒரு ஹான் இனத்துப் போர்ப்புயலோன்  ஒரு கைதிப்பெண்ணை அணுகிய ஞான்று,  அவன் அவளால் கொல்லப்பட்டான்.  சீனாவிலிருந்து ஹங்கேரி வரை நெடுந்தொலைவு படைநடத்திய ஈடு இணையற்ற மறவன், இப்படியா மடியவேண்டும்?  இவ்வாறும் நிகழ்ந்ததுண்டு வரலாற்றில். வெற்றியடைந்த ஒவ்வொரு போரிலும் அவன்றன் நுகர்ச்சி நிறைவேற்றிய அழகிகள் அனந்தம்.


கொண்டிகள்  - கொட்டிகள்

 இவ்வாறு சிறைபிடிக்கப்பட்ட பெண்கள் " கொண்டிமகளிர்" எனறு தமிழில் கூறப்பட்டனர். இவர்களை ஆடவைத்து அரசியல் அதிகாரிகள் களிப்பதுண்டு. இவர்கள் ஆட்டத்துக்கு மேளம் கொட்டியவர்கள் " கொட்டிகள்"   எனப்பட்டனர். போர்முடிந்த நிலையில் புகுந்த இவர்களும் ஆங்காங்கு ஏனை மக்களுடன் வாழ்ந்தனர். இவர்கள் அந்நாளையச் சிறையதிகாரிகளின் அரவணைப்பில் தனிப்படுத்தப் பட்டுக் குடிகளிடைக்  குடியமர்ந்தனர். 

அயல் நாட்டுப் பெண்கள் உள்நாட்டு மக்களிடைக் கலப்பாவதற்குப் போர்களே பெரிதும் உதவின. அழகிய  நிறப் பெண்டிரை நிரவி வாழ்விக்கப் போர்கள் சிறந்த வழிமுறைகளைத் தந்தன.  தனித்தனியாகப் போய் அயல் அழகிகளைப் பெண்கேட்டால் கிட்டுமா என்ன?

அறிக மகிழ்க.


குறிப்புகள்

கொண்டவிடு ரெட்டிகள் --புவனகிரி வேளமாக்கள் என்போர் போல  இடையிடையே விஜயநகரப் பேரரசுக்கு  (கிருஷ்ணதேவராயர்) எதிராகக் கிளர்ச்சி செய்தவர்கள். .

கொள் + தி:  கொண்டி.  ( கொள்ளப்பட்டோர் -  கைது செய்யப்பட்டவர்கள்.) கொண்டவிடு:  கைது செய்து பின் விடுவிக்கப்பட்டவர்கள்.


மெய்ப்பு பின்னர்.

முகக் கவசம் அணிந்து

இடைத்தொலைவு கடைப்பிடிக்க.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.