Pages

செவ்வாய், 2 மார்ச், 2021

தமிழ் ஆங்கில இலக்கியங்கள் ஒப்பீடு

 தமிழிலக்கியம் ஆங்கில இலக்கியத்தினின்று சற்று வேறுபட்டதென்பதைத் தமிழறிஞர்கள் நன்கு உணர்ந்து எழுதியுள்ளனர். இரண்டு இணையற்ற பேராசிரியர்கள் இதைத் தங்கள் முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு வரைவுகள் சமர்ப்பித்தனர். இவர்களுள் தனிநாயக அடிகளார் மேலை மொழிகள் பலவும் கற்று அறிந்த பெரும்புலவர். தம் வாழ்க்கைத் தொழிலில் இலத்தீன் முதலிய  மேலை மொழிகளைத் தினமும் பயன்படுத்தும் வசதிகளை உடையவராய் இருந்தார்.

இவர்கள் கூறினார்கள் என்பதற்காக அன்றி,  நாமே ஆங்கில இலக்கிய வகுப்பில் சென்று படிக்கும்போது,  இயற்கையைத் தனிப் பாடுபொருளாக வைத்துப் பாடிய பல கவிஞர்களைக் காண்கின்றோம். அத்தகைய கவிதைகளைத் தமிழில் அண்மைக் காலத்துத் தமிழிலக்கியங்களிலன்றிக் காண முடிவதில்லை. ஆற்று வெள்ளம் என்று எடுத்துக்கொண்டால்,  "ஆற்று வெள்ளம்போல் பாயும் உன்பால் எனக்குள்ள காதல்" என்று தமிழ்க்கவி பாடுவான்.  இது அப்பொருளை ஓர் உவமையின் பொருட்டுப் பயன்படுத்திக் கொண்டதே அன்றி வேறில்லை.  ஷெல்லி முதலியோர்  சருகுகள் இலைகள் முதலியவை காற்றில் புரள்வதைத் தனிப்பொருளாய்ப் பாடினர். இயற்கையை இவ்வாறு தனிமேடையில் வைத்துப் பொருட் கலப்பின்றிப் பாடிய கவிதைகள் தமிழில் தேடிப்பிடிக்கவேண்டும்.  ஆகவே இயற்கை தனிப் பாடுபொருளாய் அமைதல் அருகி நிற்பதால் அதை ஓர் இலக்கியப் பண்பாடாய்க் கருத  இயலவில்லை.   

இயற்கையுடன் மனிதன் என்றும் சமமாக நிற்க இயலாது.   மகுடமுகி (கொரனா )  நோயில் பலர் மடிந்துவிட்டனர்.  ஆனால் அதனால் இயற்கைக்கு ஒன்றுமில்லை.  எப்போதும்போல் காலைக் கதிரவன் செவ்வொளியைச் செலுத்திக் கடற்பரப்பில் எழுகின்ற காட்சியில் எந்த மாற்றமும் இல்லை. மனிதன் இயற்கையின் ஒரு பகுதிதான்.  அதை ஆள்வதாக அவன் நினைத்துக் கொண்டாலும்  இயற்கைக்கு உட்பட்டு அவன் மாய்பவன் தான்.  அவன் செய்யும் காதல் உட்பட்ட எந்தத் தொழிலும்  அவன் இயற்கையின் கொத்தடிமை என்பதையே மெய்ப்பித்துக் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.

நோயினின்று காத்துக்கொள்ளுங்கள்.

ஒரு தட்டச்சுப் பிழை திருத்தப்பட்டது.

எழுத்து பிழைகளைச் சுட்டிக்காட்டி உதவுங்கள்.

நன்றி.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.