ஐ என்பது தமிழில் பண்டுதொட்டு வழங்கிவருகின்ற ஓர் ஓரெழுத்துச் சொல். தமிழில் சிறு சொற்கள் பலவுள்ளன. நீ, நான், காண், செல் என்பவெல்லாம் உருவிற் சிறியவை என்றே சொல்லலாம்.. இத்தகைய சிறியனவற்றுள் மிகக் கூடுதலாக எழுத்துக்கள் உள்ளவை, மூன்றில் முடிபவை என்று வைத்துக்கொள்ளலாம்.
ஐ என்பதன் பண்டைப் பொருள் உயர்வு, மேன்மை முதலியன எனல் சரி. இதனுடன் அன் என்னும் ஆண்பால் விகுதி சேர்ந்து ஐயன் என்ற சொல் அமைந்தது. ஐயன் என்பது மேன்மை பெறு மனிதனையும் குறிக்கும். கடவுளையும் குறிக்கும்.. எதிரில் வரும் மனிதனை மரியாதையுடன் குறிப்பது தமிழர் பண்பாட்டுக் கடைப்பிடிப்பு ஆகும்.
வந்தனை. கண்டனை. சென்றனை , நீ - இவற்றுள் வந்த ஐ உயர்வு குறிப்பது ஆகும். ஆனால் இற்றை நிலையில் இவ்வுயர்வுக் கருத்து மறைந்துவிட்டது. அது முன்னரே போய்விட்டது என்றுதான் திருத்திக்கொள்ளவேண்டும். மரியாதைக் குறிப்பு அறவே ஒழிந்துவிட்டபடியால், எப்படி அதைச் சேர்ப்பது என்று கவலை கொண்ட மக்கள், அதற்குப் பதில் ஈர் என்ற சொல்லைச் சேர்த்தனர். அது:
வந்தீர், கண்டீர், சென்றீர் என்றாயிற்று. ஏனை இவையொத்த வடிவங்களும் இவற்றுள் அடங்கும். இந்த ஈர் என்பதில் ஆடிக்கொண்டிருந்த மரியாதை அல்லது பணிவு, சிறிது காலத்தில் மறையவே, அப்புறம் "கள் " விகுதியைச் சேர்த்தனர்.. அது அப்புறம் -----
வந்தீர்கள், கண்டீர்கள், சென்றீர்கள்
என்று முற்றுக்களாய் அமைந்துவிட்டன என்றல் காண்க.
இதற்குமுன் கள் என்னும் விகுதி அஃறிணைப் பொருட்களுக்கே வழங்கிவந்தது. அது பன்மை விகுதியாய் இருந்தது. அதன் திணைக் குழப்பத்தை மறந்துவிட்டு, உயர்திணை அஃறிணை என எல்லாவற்றுக்கும் பொதுவிகுதியாய் அது புகுந்து புதுமலர்ச்சி கண்டது.
சங்க இலக்கியங்களில் இவை அருகியே பயன்பாடு கண்டன. வள்ளுவனாரிலும் அஃது குறைவே. "பூரியர்கள் ஆழும் அளறு" என்புழி (என்று முடியும் குறளிற்) காண்க. அதனால் யாம் எழுதும்போது பெரும்பாலும் கள் விகுதியை விலக்கியே எழுதுவேம். எடுத்துக்காட்டாக, ஆசிரியர்கள் என்று எழுதாமல், ஆசிரியன்மார் என்றுதான் எழுதுவோம். மாரைக்கிளவி செவிக்கினிது.
இந்த விகுதிகள் பேச்சில் மரியாதையை வளர்த்தது குறைவே ஆகும். பணிவுக் குறைவாகப் பேசுவோர், பேசிக்கொண்டுதான் திரிவர்.
பழங்காலத்தில் அள் என்ற ஒரு சொல் இருந்தது. அது அடிச்சொல். அதில் இகரம் இறுதியில் சேர்ந்து, அளி என்று ஆனது. அளி - அளித்தல். அன்பினால் பிறருக்குக் கொடுத்தல். அள் அன்பு குறித்தமையினால், வந்தனள், சென்றனள், கண்டனள் என்பவை வந்து, சென்று, கண்டு என்பவற்றுடன், அன்பு கலந்த குறிப்புகளாயின. தமிழன் விலங்குகளையும் நீர்வாழ்வனவற்றையும் அன்புகொண்டே கருதினான். மீன்+கு+அள், பறவை+கு+ அள் என்பவை மீன்கள், பறவைகள் ஆகி, பன்மை விகுதிகள் ஆயின. மொழியில் இவை போலும் சொல்லொட்டுக்கள் பிற்காலத்தவை. மலையாளம் இன்னும் சில மொழிகளில் எச்ச வினைகளே நின்று செயல் முற்றுப்பெற்றதையும் உணர்த்தும். அவன் வந்நு ( அவன் வந்தான்) என்பது காண்க. ஒருமை பன்மை, இல்லாத மொழிகள் பல. " இரு பெண்கள் வந்தார்கள் " என்பதில், இரு என்பது பன்மையைக் காட்டுகிறது. அப்புறம் பெண்கள் என்று ஏன் இன்னொரு முறை பனமையைக் காட்டுதல் வேண்டும் என்பர். அப்பால் வந்தார்கள் என்பதில் வேறு பன்மை. ஒரு தடவை பன்மை சொல்லி வாக்கியம் முடிவதற்குள் அதை மறந்துவிடுவார்களா என்ன?
இப்போது ஐ விகுதிக்குத் திரும்புவோம். வந்தனை, சென்றனை என்பவெல்லாம் தம்மில் வரும் ஐ விகுதிகளால் உயர்வு குறித்தன என்பது உணர்க.
அறிக மகிழ்க
மெய்ப்பு - பின்,
முகக் கவசம் அணியுங்கள்
இடைத்தொலைவு கடைப்பிடியுங்கள்
நோயைத் தடுத்துக்கொள்ளுங்கள்.
நலமுடன் வாழ்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.