Pages

சனி, 2 ஜனவரி, 2021

கெடுதலிலும் நன்மை காணும் நன்னம்பிக்கை - தமிழர்பண்பாடு

 சங்க காலத்திலும் அது மருவிய காலத்திலும்,  தமிழர் கெடுதல் அல்லது தீமை எள்ளளவும் கலவாத வாழ்க்கையை உன்னி வாழ்ந்தனர் என்று நம் இலக்கியங்கள் சாற்றுகின்றன. அவர்கள் ஒரு மேலான இனமாக வாழ முற்பட்டனர். இக்காலத்தில் தமிழரல்லாதார் பண்பாட்டுக் கூறுகள் யாவை என்பதைத் தமிழிலக்கியம் பெரிதும் காட்டவில்லை. பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு  ஆதலின் அவர்கள் அத்தகைய செய்திகளைத் தம் இலக்கியத்திற் பெரிதும் பதிவு செய்திட்டிலர் என்பதே சரியாகும். தம் மேலான பண்புகளைக் கூறியவிடத்தும் பிறர்தீமை சொல்லாதமைதலே சான்றாண்மை ஆகும்.


பிற தேயத்து மன்னன் ஒருவன் சாலச் சிறந்த பண்புகள் உடையனாய் இருந்தான் என்பதனால் தமிழர்கள் அவனைச் "சாலமன்" என்று அழைத்தனர்.  சாலமோன் எனினும் ஆகும்.   மன் என்பது மன்னன் என்னும் பொருளது.  மோன் என்பது மகன் என்ற சொல்லின் திரிபாகும்.  தாம் சான்றாண்மையுடன் திகழ்ந்தது மட்டுமின்றிப் பிறதேயத்தார் சிறந்த பண்புநலன்கள் உடையாராய்த் திகழ்ந்த காலையும் அவர்களை மெச்சி நலல பெயரை அவர்கட்கு வழங்கத் தமிழர்கள் பின்வாங்கியதில்லை. மேலும் வாசிக்க:-


வறுமை என்பது கொடியது.  கற்றுவல்ல  சான்றாண்மை மிக்கப் புலவர்மாட்டும் வறுமை வந்துற்று அவர்கள்தமை வாட்டியதுண்டு. யாருமற்ற ஏழையும் அவ்வாறு வாடுதல் உண்டு. இவர்கட்கு வந்துற்ற வறுமையைக் கண்டு இவர்களை ஒருபோதும் இகழாமை கடைப்பிடித்து, இவர்களை " நல்கூர்ந்தார்" என்று தமிழர் சுட்டினர். இதை நல் என்ற அடைமொழி கொடுத்துத் தமிழர் குறித்தனர். இஃது மொழியினுள்ளே அமைந்து கிடக்கும் பண்பாட்டுக் கூறு ஆகும். நல்குரவு என்ற சொல்லையும் காண்க. கெட்டுப்போன நிலையையும் நல்ல என்ற அடைகொடுத்துக் குறிப்பவன் தமிழன். கெட்டது விரைவில் நல்லதாகவே மாறிடுதல் வேண்டுமென்பது அவன் தன் இறைவனை நோக்கிய வேண்டுதல் ஆகும். 

இவ்வாறே கெட்டுபோவதை அவன் நந்தல் என்றான்.  நன்மை+ து + அல்  என்று இதன் அமைப்பினைக் கூறினும் நல்> நன் > நன் து >  நந்தல் என்று கூறினும் அதுவே ஆகும். இது நல் தல் ஆகும், நன்றல் > நந்தல் எனினுமது. நன்மையை நினைக்க; தீமை விலக்குக என்பது தமிழர் கொள்கை.  கொடிய விடப்பாம்பையும் நல்ல பாம்பு என்பான் அவன்.

கம்பனும் சீதையை " நந்தல் இல் விளக்கம் அன்ன நங்கை" என்று வருணித்துள்ளமை காண்க. பிறனிடத்து அடைபட்டு வாடியவிடத்தும் நன்மையே கூறினான் கம்பன். அவன் புலமைக்கண் சான்றாண்மை பளிச்சிடுகின்றது காண்க.

அறிக மகிழ்க.

பெய்ப்பு -  பின்பு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.