Pages

செவ்வாய், 29 டிசம்பர், 2020

இன்று செவ்வாயா வெள்ளியா?

 செவ்வாயெது  வெள்ளியெது  தெரிய வில்லை

சேவைகளை  வீட்டினின்று  புரிவ தாலோ?

ஓளவைசொலும் இடும்பைகூர் வயிறுண் டேனும்

அதற்காவிச் சூட்டுணவு அகத்துள் கிட்ட,

எவ்வகையில் நோக்கிடினும் இடரொன் றில்லை!

இன்றுநேற்று  நாளையெலாம் கையின் பேசி

செவ்வையாகச் சொல்லுவதால் குழப்பம் இல்லை!

செந்தமிழால் என்றுமினி இணைய வாரீர்.


அரும்பொருள்:

செவ்வாய் எது -  எது செவ்வாய்க் கிழமை?

வெள்ளி எது -  எது வெள்ளிக்கிழமை?

தெரியவில்லை -  தான் தெரிந்துகொள்ள முடியவில்லை

சேவைகளை  வீட்டினின்று  புரிவ தாலோ? -  கோவிட் என்னும்

மகுடமுகி நோயின் காரணமாக நாம் இப்போது வீட்டிலிருந்து

அலுவலக வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறோமே,

அதனால் தானோ? 

ஓளவைசொலும் இடும்பைகூர் வயிறுண் டேனும் =  நமக்கு ஒளவைப்பாட்டி உணர்த்திய  பசி என்னும் துன்பத்தை ஏற்படுத்துகின்ற ஊணடை பை இருந்தபோதிலும்

அதற்காவிச் சூட்டுணவு அகத்துள் கிட்ட  - அந்த வயிற்றுக்கு  ஆவி பரியும் சூடான உணவு வீட்டினுள்ளே கிடைப்பதால்;

எவ்வகையில் நோக்கிடினும் இடரொன் றில்லை! -  எப்படி ஆய்ந்தாலும் நமக்குத் துன்பம் ஒன்றுமில்லை;

இன்றுநேற்று  நாளையெலாம் -  இன்று என்ன கிழமை , நேற்று  என்ன கிழமை, நாளை என்ன கிழமை,  மற்றும் தேதி மாதம் என்பவெல்லாம்;

 கையின் பேசி  -  நமது கையின் அகலாத கருவியாய் உள்ள கைப்பேசி,

[கைக்குள் நிரந்தர இடம் பிடித்துவிட்டது என்பது தோன்ற கையின் பேசி என விரிக்கப்பட்டது;]

செவ்வையாகச் சொல்லுவதால் -  தவறாமலும் தடுமாறாமலும் சொல்லுவதனால்,

குழப்பம் இல்லை! -(  அதிலிணையும் வரை குழப்பமே அன்றி)  அப்புறம் ஒரு குழப்பமும் இருத்தலில்லை;

செந்தமிழால் என்றுமினி இணைய வாரீர். -  என்றுமே நல்ல தமிழில் இணைந்திருங்கள்,  ஆங்கிலத்திலோ பிறமொழியிலோ சொல்லாமல் தமிழாலே நாட்களைச் சொல்லுங்கள். -  வீட்டிலிருக்கையில்.

இன்று செவ்வாய் Tuesday   அப்புறம் இரண்டு நாள் செல்ல வெள்ளி Friday என்று கைப்பேசியே மொழி ஆசிரியர் ஆகிவிடுகிறது.

கிழமை எது என்று தெரியாவிட்டாலும் கிழமை என்ன என்று தெரியாவிட்டாலும் இருக்கவே இருக்கிறது கைப்பேசி. தினக்குழப்பம் மொழிக்குழப்பம் எல்லாம் தீர்த்துவைக்கும்.

என்றவாறு.


 











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.