எதிர்காலம் முற்றறிந்த இப்புவியோர் யாவருள்ளார்
எதிர்காலம் அறிவாரே ஆமாகில் கடவுளவர்
அதனாலே மணவாழ்விற் புகுமுன்னே கணித்தறிவார்
மதியுரையால் எதிர்வரவை முதலறிந்து மணம்புகுவீர்.
அறிமுன்னம் இல்வாழ்வின் நெறிபுகுந்தால் மரணமுதல்
வருதுன்பம் அளவிறந்த பெருந்தொகையே அறிந்திடுக!
சிறுதிரையின் நடிமகளாம் சித்திரையின் நொடிமறைவை
அறிந்தபலர் இருந்துதிகழ் அணியுலகு இதில்வாழ்ந்தீர்.
கொலையென்பார் இலையென்பார் கொலைதனைத்தான் எனச்சொல்வார்
நிலைகாணின் தலைகடந்த அலைகள்பல எழுந்துளவே!
உளசொலவு நிலைத்திடவும் பிறசொலவு விலக்கிடுக;
நிலவுலகில் வருவனவே அறியுறைவார் நிகருளரோ?
பொருளுரை:
எதிர்காலம் முற்றறிந்த இப்புவியோர் யாவருள்ளார் - இந்தப்
நில உலகில் எதிர்காலம் முழுவதும் அறிந்த மனிதர்கள்
யாருமில்லை;
எதிர்காலம் அறிவாரே ஆமாகில் கடவுளவர் - எதிர்காலம்
அறிந்துவிட்டால் அவர் கடவுள் என்னலாம்;
அதனாலே மணவாழ்விற் புகுமுன்னே கணித்தறிவார் - இதன்
காரணமாகத்தான் திருமணத்துக்கு முன் சோதிடம்
பார்க்கிறார்கள் (பொருத்தம் முதலியவை).
மதியுரையால் எதிர்வரவை முதலறிந்து மணம்புகுவீர்.- சோதிடர்
அறிவுரையைப் பெற்று எதிர்கால வரவுகளை முதலில்
அறிந்துகொண்டு திருமணவாழ்வில் புகவேண்டும்; ( இதனால்
நீங்கள் இழப்பது சோதிடருக்குத் தரும் கூலி மட்டுமே; இது
பெரிய இழப்பு அன்று.)
அறிமுன்னம் இல்வாழ்வின் நெறிபுகுந்தால் மரணமுதல்-
இதனை அறிந்துகொள்ளும் முன்பே கல்யாணம் செய்துகொண்டு
குடும்ப வாழ்க்கை நடத்தினால் (துன்பம் ஏற்படக்கூடும், அதைத்
தவிர்க்க ) மரணயோகம் இருக்கிறதா,
என்பது தொடங்கி;
வருதுன்பம் அளவிறந்த பெருந்தொகையே அறிந்திடுக!---
வாழ்க்கையில் காணப்போகும் இன்னல்கள் பற்பல, அவற்றை
அறிந்துகொள்ளாவிட்டால் எவ்வாறு, தெரிந்துகொள்ளுங்கள்.
சிறுதிரையின் நடிமகளாம் சித்திரையின் நொடிமறைவை -
சின்னத்திரை நடிகை சித்திரா விரைந்து மரணம் எய்தியதை;
அறிந்தபலர் இருந்துதிகழ் அணியுலகு இதில்வாழ்ந்தீர். ---
தெரிந்துகொண்டு இவ்வழகிய உலகில் இருந்து நல்லபடி
வாழ்கின்றீர்கள். ( இந்த உயிரிழப்புக்கு உங்களால் செய்ய
முடிந்தது ஒன்றுமில்லையே!) அதாவது சோதிடமாவது அதை
மற்றியிருக்குமே! ஒருவேளை அதைக் கண்டறிய முடிந்திருந்தால்.
கொலையென்பார் இலையென்பார் கொலைதனைத்தான்
எனச்சொல்வார்---அது கொலை என்றும், இல்லை என்றும்,
தற்கொலை என்றும் (பலவாறு ) சொல்வர்;
நிலைகாணின் தலைகடந்த அலைகள்பல எழுந்துளவே! --
நிலவரத்தைப் பார்த்தால் தலைக்குமேல் அலைகள் தோன்றியுள்ளன;
உளசொலவு நிலைத்திடவும் பிறசொலவு விலக்கிடுக; - உண்மை
சொல்லுதலை நிலைநிறுத்துங்கள்; பிறவற்றைச் சொல்வதை
விலக்குவதே நன்று;
நிலவுலகில் வருவனவே அறியுறைவார் நிகருளரோ? - இந்தப்
புவியில் வருவதை அறிந்து வாழ்பவர்கட்கு நிகரானவர் யார்
உள்ளனர், யாருமில்லையே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.