அன் என்ற அடிச்சொல் இருவேறு சொற்களின் அமைப்புக்கு நிலைக்களனாய் மிக்க அழகாகப் படைக்கப்பட்டுள்ள தன்மையைக் கண்டு தமிழன் மகிழாமல் இருக்கமுடியாது. இதை அறிந்தபின் இதே புனைவுத் தந்திரத்தை இன்னொரு சொல்லமைப்பின்போது கையாண்டு திறனைப் பெருக்கிக்கொள்ளலாகாதா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளத் தோன்றுமே.
சுட்டடிச் சொல் வளர்ச்சியில் அன் இன்றியமையாத சொல். அ, இ, உ என்பவற்றில் அ என்பது அங்குள்ள பொருளை அல்லது மனிதனைக் குறிக்கவருகின்றது. அங்கிருத்தலாவது இலக்கணத்திற் படர்க்கை என்று சொல்லப்படுவதாகும். மிகு எளிய சொல்லாகிய அவன் என்பதில் இக்கருத்து இலங்குகிறது. அவன் என்பது அ+ அன் என்று பொருந்தி, இடையில் ஒரு வகர உடம்படுமெய் (வ்) இடைப்புகுந்து, அ+ வ் + அன் = அவன் ஆயிற்று. அ என்ற சுட்டுமட்டும் இருமுறை வருகின்றது. அ, அன் என்ற இரண்டு. அ என்பது இடம்; அன் என்பது இங்கு மனிதனைக் குறித்தது. இதை வாக்கியமாக்க வேண்டின், அவ்விடத்து அம்மனிதன் என்று கூறி முடிக்கலாம்.
இப்போது உள்ள காலம் இன்று என்று அமைத்தனர். அ அன் அவன் என்று இனிதாய் அமைத்த தன்மைபோலவே, இந்நாளைக் குறிக்க, இ என்ற சுட்டிலிருந்து இன்+ து > இன்று என்று அமைத்தனர். பேச்சு வழக்கில் இன்று என்பதில் அமைந்த தகர ஒற்றை நீக்கிவிட்டு, இன்+ உ > இன்னு என்றனர். இதை வாக்கியப்படுத்தினால் இந்த நாள், ( இன் ) நம் முன் உள்ளது ( உ ) என்றவாறு அழகாக வருகிறது.
இப்போது உள்ள காலம் இன்று ஆதலால் அப்போது உள்ள காலம் அன்று ஆகவேண்டுமே. அங்குள்ள என்பதற்கு அன் என்றும் து விகுதியை இறுதியில் வைத்தும் அன் + து > அன்று என்ற சொல்லை உருவாக்கினர். பேச்சுவழக்கில் இன்னு என வந்தமை போலவே அன்று என்பது அன் + உ > அன்னு என்று வந்தது. எழுத்து மொழி "திருந்திய மொழி" என்று கருதிக்கொண்டு அக்கால மனிதர்களால் அமைக்கப்பட்டது. ஒலிகளால் அமைந்த மொழி எம்மொழியாயினும் திருத்தம் பெற்ற மொழி என்பது ஒரு கருத்தமைவு அல்லது அபிப்பிராயமே ஆகும். இயற்கையாய்க் கருதுவதானால், திருந்தியது என்று ஒன்றுமில்லை. இன்னு என்பது இன்று ஆகினால் ----அப்போது உள்ளவர்கள் "இன்று" எனச் சொன்னால்----- கேட்க நன்றாக உள்ளது என்று எண்ணினர். அவ்வளவுதான். மரபின் காரணமாக நாமும் அதைத் திருத்தமான சொல். என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். சொல்லில் திருத்தம் என்று ஒன்று இல்லை. கருத்தமைவில் ஏற்புடையதாய்ப் பெறப்பட்டது என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். Many a time, it is an opinion; there is nothing factual about it.
சென்ற நாளைக் குறிக்க " அன்று " என்னும் அழகிய சொல்லைப் புனைந்த மனிதன், அது ஒரு நீண்ட கால ஓட்டத்தில் முடிந்துவிட்ட காலத்தைக் குறித்தது என்று உணர்ந்திருந்தான். ஆயின் இன்று உள்ள நேர நிலையின் விளிம்பு என்பதைக் குறிக்க ஒரு சொல் தேவைப்பட்டதை உணர்ந்தான். மீண்டும் அன் என்ற சொல்லை எடுத்தான். து என்ற விகுதியை மீண்டும் எடுத்து அன் + து என்று பூட்டினான். ஆனால் அது மீண்டும் அன்று என்று முடிந்த நாளையே குறிந்த்தது. அந்தக் குறையைப் போக்க, இன்றைய நாள் என்று வருவித்துக்கொள்ள, இ என்ற சுட்டினை இணைத்துக்கொண்டான். அது அன்+ து + இ = அந்தி ஆகிவிட்டது. மீண்டுமோர் அழகிய சொல் கிடைத்தது.
ஒரு நாள் முடியும் நேரத்துக்கு, முடிதல்தான் அந்தி. இந்தப் பொருள் ஊட்டப்பட்ட பொருண்மையாகும். ஊட்டப்பட்டதால் அது அருத்தம் ( அருந்து + அம் = அருந்தம் அருத்தம் அர்த்தம்).. சொல்லின் உள்ளுறு பகுப்பில் அந்தப் பொருள் இல்லை. நாளின் முற்றுநிலையைக் கருதிக்கொண்டு சொல்லை அமைத்தபடியால் அது அந்த நாள்முடிவைக் குறிக்கலாயிற்று. காரணக் காலப் பெயராய் அது மலர்ந்தது. அன் + து + தல் > அன்றுதல் என்பது முடிதலைக் குறிக்க வழக்குப் பெற்றது. தாள் முதலியவற்றைக் கடித்து அதைக் கெடுக்கும் பூச்சிக்கு " அந்து" என்ற பெயரும் வந்தது. அன்றுதல் என்ற முடிதல் குறிக்கும் "திருந்திய" சொல் அமைந்துவிட்டதால், " அந்துதல்" என்ற பேச்சுமொழி இணை ஏற்படவில்லை. ஆனால் அந்து + அம் = அந்தம் என்ற சொல் அமைந்து ஒருவாறு சமநிலையைக் காத்தது. அன்+ து + அம் = என்பது இன்னொரு வகைப் புணர்ச்சி விதிப்படி அமைந்து சொற்பெருக்கத்தினை விளைத்தது.
அந்தி என்பதும் அழகிய தமிழ்ச்சொல் ஆயிற்று.
"அந்தி சாயுற சேரம், வந்தாரைத் தேடி ஓரம் " -- என்றான் ஒரு கவி.
"ஏடி ஒளி முகத்தாளே அந்தி " என்றான் இன்னொரு கவி.
"அந்திப் பெண்ணாள்" என்றான் இன்னொருவன்.
அன்+ து = அன்று.
அன் + து = அந்து.
அடியும் விகுதியும் ஒன்றுதான். இருவேறு வடிவங்கள் வந்து மொழியின் வளம் ஆர்ந்தது.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.