Pages

புதன், 18 நவம்பர், 2020

தருமம்--- சொல்லில் திரிபுகள்

 சொல்லாய்வு மேற்கொள்ளவோ அவ்வாய்வுகளை நன்கு அறிந்துகொள்ளவோ அதுபற்றிய எதிருரைகளை மேற்கொள்ளவோ எண்ணும் ஒருவர்,  பலவேறுவகைத் திரிபுகளை அறிந்து அவற்றை மனத்துள் ஆழப்பதிந்துகொள்ளுதல் இன்றியமையாதது ஆகும். இதைப்பற்றிய பதிவுகளை மனத்துள் அமைத்துக்கொள்ளாதவர்,  ஓர் ஆய்வினை ஏற்கவோ மறுக்கவோ இயலாதவராகிறார் என்பது சொல்லவேண்டாமலே புரிந்துகொள்ளவேண்டிய ஒன்றாகும். வேறுவகைப் படிப்பறிவு பெற்றிருந்தாலும் இது கற்காமல் புரியக்கூடியதன்று.

ஆகவே இங்கு கூறப்படுபவை கவனத்தில் கொள்ளத்தக்கவை,  கொள்ளவேண்டியவை என்பதறிக.

ஆழ்ந்துசெல்லும் நோக்கமற்றவர்,  அறிந்து இன்புற்றுப் பின் அதை மறந்துவிடலாம். 

இப்போது சில திரிபுகளைத் தெரிந்துகொள்வோம்.

தர்ம என்ற சங்கதச் சொல்லின் பொருள் சற்று விரிவானது ஆகும்,  ஆனால் தமிழ்ச்சொல் " தருமம்",  பிறருக்கு விலைக்கின்றித் தருதல் என்பதையே பொருளாய்க் கொண்டது. இவற்றின் பொருள்வேறுபாடுகளை அறிந்துகொள்க.

சங்கதத் தருமம்,   "  மனு தர்மம் " என்ற சொற்றொடரிற்போல,  விதிமுறைகள், வரையறவுகள், விளக்கங்கள், கட்டுப்பாடுகள்  என பலவற்றையும் குறிக்கக் கூடியது.

தமிழில் தருமம் என்பது ஈதலைக் குறிப்பது.  "தருமத்தை ஒருநாளும் மறக்கவேண்டாம்" எனில் ஈதலை மறத்தலாகாது என்பதுதான்.  ஆனால் தருமம் என்பதற்குச் சமத்கிருதத்தில் உள்ள பொருளும் தமிழில் வருவிக்கப்பட்டு இதற்குப் பொருள்கூறுவர். இப்படிக் கூறின் இதன் பொருள் விரியும் என்றறிக.

தருதல் வினைச்சொல்

தரு+ ம் + அம் = தரும.  தருதலாகிய ஈதல்.

கொடுத்தல், தருதல், ஈதல் என்ற மூவேறு சொற்களின் பொருள் வேறுபாடு  இந்தச் சொல்லில்  பிற்காலத்திற் பின்பற்றப்படவில்லை 

தமிழில் தோன்றிய தருமம் என்ற என்ற சொல், பின் வழக்கு விரிந்து அயலில் பயன்பாடு கண்டு பொருண்மை விரிந்தது. தருமம் என்பதன் சொல்லமைப்புப் பொருள் அச்சொல்லில் சிறிதே இப்போது உள்ளது.  தருமத்துக்குக் கொடுப்பது என்றால், பேச்சு வழக்கில் விலையின்றிக் கொடுப்பது என்பதே பொருள்.

தருமம் என்பது நன்னெறிச் செல்கை என்பது,  பின்னர்ப் பொருள்விரி ஆகும்.

ஆயினும் கொடுத்தல் என்பது சிறப்புத் தருமென்பதால், இப்பொருள் நாளடைவில் ஏற்படுதல் இயல்பு.

நன்னெறிச் செல்லாமை, அதருமம் எனப்பட்டது.  இது அதர்மம் என்று எழுதப்பட்டது.  உகரம் கெட்ட சொல். அதர்மமாக நடப்பவன் அதர்மன்.  இது அதமன் என்று இடைக்குறைந்தது,  ரகர வீழ்ச்சி இடைக்குறை.  பிற சொற்கள் பலவற்றில் ரகர ஒற்று வீழும்.  எ-டு:

சேர்மி >  சேமி.> சேமிப்பு.

ரகர ஒற்றுக்குப் பதிலாக ஒரு 0னகர ஒற்றும் தோன்றுவதுண்டு:

அதர்மம் > அதன்மம்.

இன்னொரு திரிபு இது போல்வது:  கர்மம் > கன்மம். ர் -- 0ன்.

சிறு மையம் என்பது சின்மயம் ஆனதோ.  பின்னொரு நாள் பேசுவோம்.  று>ன்

பாலி மொழியில் தர்ம  என்பது டம்மா (தம்மா)  என்று திரிந்தது.

டம்மா (தம்மா) என்பது இப்போது ஆசியா எங்கும் வழங்குகிறது.

Derma (atau sumbangan ) என்று மலாய் மொழியில் வழங்கும்.   நரகம் என்பது neraka என்று வழங்குவது போலத்தான்.

முகக் கவசம் அணிந்து பிறருக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு காப்புத் தொலைவு கடைப்பிடியுங்கள். நன்றி.  

மெய்ப்பு - பின்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.