Pages

செவ்வாய், 24 நவம்பர், 2020

இலக்கணமும் சொல்லாய்வும்

பகுபதத்தில் தொகுத்தல், பகாப்பதத்தில் முக்குறைகள்  என்று  இலக்கண ஆசிரியர்கள் கூறுவர். பார்த்தால் இத்தகு வேறுபாடு சொல்லாக்கக் கலையில் அல்லது சொன்மூலக் கண்டுபிடிப்பில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்திவிடுவதில்லை.  ஆகவே இடையில் எழுத்துக் குறைவுகள் அல்லது ஒலிக்குறைவுகள் ஏற்படின், எத்தகு பதமாயினும் இங்குள்ள இடுகைகளில் இடைக்குறை என்றே குறிக்கப்பட்டுள்ளன என்பதை பலகாலும் ஈண்டு வந்து சென்றோர் உணர்ந்திருக்கக் கூடும். ஒன்று சொல் குறுகிவிட்டது  அல்லது நீண்டுவிட்டது : அவ்வளவுதான்.

இலக்கண நூலார் ஒவ்வொருவரும் முக்குறைச் சொற்களுக்குப் பெரும்பாலும் எப்போதும் காட்டப்பெறும் எடுத்துக்காட்டுகளையே காட்டுவர். பாடத்திட்டங்கள் மாறும்வரை, வாத்தியார்களும் அவற்றையே சொல்லிக்கொண்டிருப்பார்கள். பல்கலைக்கழக வாத்தியார்முதல் பொடியன்களுக்குக் கற்பிப்போர்வரை எல்லாரும் அவ்வாறே.  தொழில் முறை அவ்வாறு உள்ளது. பாகவதர்கள் பாட்டுகள் போல. பாகவதர் சிலர்மட்டுமே சின்னூரில் பாடிய பாகத்தை  (பாகம் ஒன்று)  குன்னூரில் மறுபடியும் பாடாமல் இன்னொரு பாகத்தை (பாகம் 2)ப் பாடி,  3-வது ஊரில் ( முன்னூரில்) மூன்றாவது பாகத்தைப் பாடுவராம்.  அருகருகே உள்ள ஊர்களில் அதே பாகத்தைப் பாடக்கூடாது என்பதற்காக.

நாம் இங்குக் குறுக்கச் சொற்களைப் பெருவாரியாகக் காட்டியுள்ளோம்.

கிருஷ்ணன் என்ற சொல்கூட இடைக்குறையாய் வந்து முன் நிற்கிறதே.  இசையமைப்பில் புகழ்பெற்ற (சங்கர்-) ஜெய்கிஷன் பற்றி எண்ணும்போது, ~~ ஜெயக்கிருஷ்ணன் என்பதுதான் வடக்கில் இடைக்குறைந்து அவ்வாறு வழங்குகிறது என்று நாம் சொல்வோம். பகர வகரத் திரிபாயின், பன்சாடா என்பது வன்சாடா ஆகும் என்றும் பசந்த் என்பது வசந்தம் என்றும் சொல்வோம்.

நீங்கள் பின்னூட்டமிட்டு வாதிக்கப் பலவுண்டு ஈண்டு.

இரும்பினால் செய்யப்படுவதே ஆணி,  ஆனால் குந்தாணியில் ஆணி எதுவும் இல்லை. அப்புறம் எப்படி அதற்கு ஆணி என்ற பெயர் ஏற்பட்டது?   குந்துவது என்பது உட்காருவது, அமர்வது என்னலாம். உங்கள் ஊரில் உள்ள குந்தாணியில் ஆணி அடிக்கப்பட்டுள்ளதா என்பது யாம் அறியாதது.  அடித்திருந்தால் பெயர் பொருத்தம் என்று விட்டுவிடுவோம். இல்லை என்றால் மேலும் ஆய்வு செய்வோம். உள்ளதுகாறும் மென்மேலும் அறிவினை வளர்த்துக்கொள்ளுதல் நன்று,   இன்றேல் ஊதியமில்லை உயிர்க்கு.

பின்னூட்டமிடுங்கள். உங்களிடமிருந்து அறிய ஆவல்.

நாளை அல்லது பின்பு அளவளாவுவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.