நிலைமொழியும் வருமொழியும் இணைகின்ற போது, சொற்கள் எவ்வாறு மாறும் என்பதற்குப் புணரியல் ( சொற்புணர்ச்சி இலக்கணம்) சில விதிகளைத் தருகிறது. ஆயினும் இதிற்சொல்லப்படும் இலக்கணம், ஒரு வாக்கியத்தில் அல்லது கவிதை வரியில் இரண்டு முழுச்சொற்கள் இணைதற்கான இலக்கணமே ஆகும். ஒரு சொல்லை அமைக்கும்போது அதில் நிலைமொழி - வருமொழிகள் இல்லை. எடுத்துக்காட்டாக, என்று என்பது என்+து என்ற இரண்டும் சேர்ந்தமைந்த சொல்லாகும். இவற்றுள் என் என்பது நிலைமொழியும் அன்று; து என்பது வருமொழியும் அன்று. எனவே சொல்லமைப்பில் வேறுபட்டு இணைதல் நிகழும். எடுத்துக்காட்டாக:
என் + து = என்று ( தமிழில்)
என் + து = எந்து ( மலையாளம்).
தமிழிலும் இவ்வாறு சொற்கள் அமையும். உதாரணமாக:
முன் + தி = முந்தி
பின் + தி = பிந்தி.
ஆசிரியர் சிலர் இவற்றையும் காட்டுவர்:
மன் + திரம் = மந்திரம்.
தன் + திரம் = தந்திரம்.
இங்குத் திரம் என்பது திறம் என்பதன் திரிபு. இது விகுதியாய்ப் பயன்பட்டது. இறைவன்முன் வைக்கப்படும் ஒரு வேண்டுதலை ஓதுவதன் மூலம் நிலைபெறுவித்தலே மந்திரம் என்பது. மன்னுதல் - நிலைபெறுவித்தல். தன் சொந்தத் திறமே தந்திரம் என்பது. மந்திரம் என்ற சொல்லை அமைக்கக் காரணமாகியது ஓதுவோன் அதனை வேட்போன் ஆகியோரின் நம்பிக்கையாகும்.
மன் என்ற அடியிலிருந்தே மனிதன் ( மன்+ இது + அன் ). மாந்தன் ( மன்> மான்; மான்+ து +அன்), மன்+ தி > மந்தி முதலிய சொற்களும் அமைந்தன. மாந்தன், மந்தி முதலியவை, மான்றன், மன்றி என்று அமையவில்லை. மாறாக, பல்> பன் > பன்றி (பன்+தி) என்று அமைந்தாலும், பல் > பன் > பன்னி என்ற சொல்லும் வழக்கில் உள்ளது. வென்றி என்ற சொல், வெல் > வென்> வென்றி, வெல்+தி : வெற்றி என்று இருவகையில் வருமெனினும் வெந்தி என்று வரவில்லை.
இனிச் சாமந்தன் என்ற சொல் காண்போம்.
சாமந்தன் என்போன் சார்பாக ஓரிடத்தை ஆள்பவன். இது:
சா : சார்பாய்,
மன் - ஒரு மன்னனின் கீழ்
தன் - தன் ஆளுகையை மேற்கொள்பவன். அல்லது சார்பு மன்னன்.
இங்கு, சார்மன்னன் என்று சிந்தித்து சாமன்னன் என்று அமைத்திருக்கலாம். அப்படியானால் செத்துப்போகும் மன்னன் என்று அமங்கலப் பொருள் தோன்றுமாகலின், அதை மாற்ற ஒரு து இடையில் வந்தது.
சார் + மன் + து + அன் , இதில் ர் என்பதை விலக்க, சாமந்தன் என்று அமைந்தது புனைந்தோன் திறனே.
இது சாமன்றன் என்று அமையவில்லை.
இடைநிற்கும் ரகர ஒற்று மறைதற்கு எ-டு: சேர்+ மி > சேமித்தல்.
(சேர் + ம் + இ ).
இவ்வாறு ஓர் உத்தியைக் கையாண்டுள்ளனர்.
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.