Pages

சனி, 24 அக்டோபர், 2020

விமரிசை

வில் என்பதன் அடிக்கருத்து யாதெனின் அஃது நீங்குதல் என்பதே.இதனால்தான் வில் என்னும் கருவியைக் குறிக்கும் சொல்லும் அப்பெயர் பெற்றது. வில் என்ற அடிச்சொல்லே வில் என்ற முழுச்சொல்லாகவும் வந்து கருவிக்குப் பெயரானது.

விற்றல் அல்லது ஒரு பொருளை விலைக்குப் பிறனிடத்துப் போக்குதல் என்பதும் நீங்குதற் கருத்தே.  விற்போனை நீங்கிப் பொருள் வாங்குவோனிடத்துச் செல்கிறது.

வில் > வில்+தல் > விற்றல்.  (விலைக்குக் கொடுத்தல்.)

வில் > வில்+ ஐ > விலை.  (  பொருள் பிறன்பால் நீங்குதற்குப் பெறுவோனிடத்து நீக்குவோன் பெறும் பணம் அல்லது ஈட்டுத் தொகை)

வில் > விற்பு ( பு விகுதி )  > விற்பு+ அன் + ஐ =  விற்பனை.  இதில் பு, அன் என இரண்டு இடைநிலைகளாக வந்தன.  ஐ என்பதே சொல்லின் இறுதிநிலை அல்லது விகுதி. ஏனை இரண்டும் ஈண்டு சொல்லை முடிக்கவில்லையாதலின் அவற்றை விகுதிகள் என்பதினும் இடைநிலைகள் என்பதே பொருத்தமானது. இவண் ஐ எனற்பாலதை விகுதி மேல் விகுதி மேல் விகுதி எனினும் அதுவும் இச்சொல்லை உணர்ந்துகொள்ள வருமொரு விளக்கமென ஏற்றல் தகுதியானதே.. பானை செய்யும்போது அதை வனைந்து பயன்பாட்டுக்கு விடுதலே பணிமுடிவு ஆகும். ஏனைப் பெயர்களெல்லாம் சொல்லமைப்பை உணர்விக்கும் கருவிகளே.  ஆதலின் அடிப்படை உணர்ந்தார்க்குப் பெயர் என்பது ஒரு பொருட்டன்று. ஆயினும் ஒவ்வொரு கலையிலும் அறிவியலிலும் ஒன்றைத் துல்லியமாக அறிந்துகொள்ளுதல் இன்றியமையாதது ஆகும்.   

வீங்குதல் என்பதிலும் நீங்குதல் கருத்து உள்ளது. ஒரு சுவருக்கும் இன்னொரு சுவருக்கும் இடைவெளி பெரிதாகும்போது நீங்கி எழுந்த சுவரே இடைவெளியை உண்டாக்குகிறது. இடைவெளியில் காற்றோ நீரோ வீக்கத்திற்குக் காரணமாகலாம். ஆனால் நீக்கம் ஏற்பட்டுவிட்டதென்று உணர்க. இங்கு சுவரென்றது சதைச் சுவர், தோற்சுவர் என்று அறிக.

வீங்கு என்பதில் கு என்பது வினையாக்க விகுதி.  மூழ்கு என்பதில் கு  போலவேயாம். வீ என்பதே அடிச்சொல்.  இதை உணரவே,  வி,  என்பதும் வில் என்பதும் அடிச்சொற்களே என்றும் அறியவேண்டும்.  இவற்றைப் பெருள்தொடர்பு பட்ட அடிவடிவங்கள் என்றும் உணர்க.  விலகு என்ற சொல்லிலும் வி என்பதே அடிச்சொல். இதனை வில் அடிச்சொல் எனினும் அதுவேயாகும். விலகு என்னுங்கால்  வில் அடியென்பது விளக்கத்திற்கு எளிதானதாய் இருக்கும்.  வில்+அ + கு என்று காட்டி, விலகு என்று சொல்லமைப்பைக் காட்டிவிடலாம்.  அடிப்படை வேறுபாடு ஒன்றுமில்லை. விளக்க எளிமையே அது. இன்றேல் வி + கு என்று நிறுத்தி இடையில் வரும் ல் என்ற ஒலிக்கு விளக்கத்தினை வருவித்துரைக்கவேண்டும். எனினும் வி என்பது மூலமென்றும் வில் என்பதன் அதன் வளர்ச்சி என்று ஏற்புழிக் கூறினும் அடிப்படை வேறுபாடு ஒன்றுமில்லை. இது மொழிக்கு மொழி வேறுபடும். தமிழில் வி, வீ என்றும் ஆங்கிலமொழியில் அதே பொருளில் வீர் அல்லது வியர் என்றும் (veer)  என்றும் வருகிறது பார்த்தீர்களா.  பொருள் அணுக்கம், ஒலி அணுக்கம் இரண்டுமிருக்கிநன்றனவே!. இப்படி உலக மொழிகளை ஒப்பாய்வு செய்கையில் எந்த எந்த வடிவங்கள் விளக்க எளிமை தருவன என்று தெரிவுசெய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். மக என்பது தமிழுக்கு நல்ல அடிவடிவம்;  Mac  என்பது ஆங்கிலத்துக்கு நல்ல அடிவடிவம் ( MacDonald - son of Donald). ஒரே மொழிக்குள்ளும் அடிவடிவங்கள் மாறிமாறிக் காணப்படும். சீனமொழிக்கு தா என்பது நல்ல அடிச்சொல்; தமிழுக்கு தாக்கு என்பது நல்ல வினையடிச்சொல்.  வி, வீ, வில், விய், விய எல்லாம் தொடர்பின.  விய > வியனுலகு என்னும்போது, ஓர் எல்லை இன்னோர் எல்லையினின்றும் நீங்கி அதன்பின் விரிந்து சென்ற காரணத்தினால் விரிவு உண்டாகிறது.  எமக்கு அவற்றின் ஒற்றுமை மகிழ்விக்கிறது. உங்கட்கு அவற்றுள் வேற்றுமை உறுத்தலாம். ஒவ்வொருவருக்கும் உண்மையறிவு வேறுபடும்.  நுண்ணிய நூல்பல கற்பினும் தம் உண்மையறிவே மிகுமன்றோ?

விர்> விய் > விய > வியா > வியாபி > வியாபித்தல்.  எல்லையினின்று எல்லை விலகுதலே நீங்குதல், விரிதல் எல்லாம்.

விர் > விரி.

வி > விம் > விம்மு > விம்முதல். எல்லை விரிவும் பெருக்கமும்.

வி > விம்மு > ...

விம் + மரு(வு) > விம்மரு+ இயை > விம்மரிசை > விமரிசை.

விம்முதல் என்பது நீங்கி விரிதல். 

மருவுதல் என்பது நெருக்கமாகுதல்.

இயைதல் எனல் ஒன்றுபடுதல்

ஒரு விழா விமரிசையாக நடைபெற்றது என்றால் கூடியிருப்போர் விரிந்து பெருகி, நெருங்கி மருவி மனமோ பிறவற்றாலோ இயைந்து அவ்விழா நடைபெற்றது என்று பொருள். சொல்லில்தான் என்னே அழகு. இயை என்பதும் இசை என்பதும் ஒன்றே.  ய - ச திரிபு.

நீங்களே விரித்து அறிந்துகொள்ளுங்கள்.


எழுத்துத் திருத்தம் பின்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.