Pages

சனி, 12 செப்டம்பர், 2020

அருணாசலம் என்பது

 இனி, இன்னொரு சொல்லைக் கண்டு தெளிவோம். இச்சொல் அருணாசலம் என்பதாகும்.

இதைச் சொல்லத் தொடங்குமுன் ஆசலம் என்ற சொல்லைப்பற்றி சில கூறல் நலம்  ஆகும். 

இடச்செலவு நிகழ்த்துவோற்குக் கடினம் தந்து ஆதரவாய் நில்லாதது என்ற பொருளிலேதான் " ஆசலம்"  என்ற சொல் உருப்பெறுகிறது. ஆசு+ அல் + அம். ஆசு எனற்பாலது பற்றுக்கோடாக நிற்பது என்று பொருள்தரும்.  "ஆசிடையிட்ட எதுகை" என்ற யாப்பியற் குறியீட்டில் ஆசு என்ற சொல் நன்றாக வந்துள்ளது.

நாள் என்ற சொல் ஆங்கிலமொழியிற்போல பகல்நேரம் என்ற பொருளும் உடையது ஆகும்.  இச்சொல் " நாளங்காடி" என்ற சொற்றொடரில் வந்துள்ளது,

இமயம் போன்ற மலைப்பகுதிகளில் நாள் அல்லது பகல் நேரம் என்பது மிக்க அருமை உடையது ஆகும். கடுங்குளிர் சற்றுக் குறைவுறும். ஆகவே அருநாள் என்பதன் பொருள் அறிந்துகொள்ள எளிதானதே.  அருநாள் என்பது அருநா என்று குறையும். அருநா + ஆசலம் என்பது  அருணாசலம் ஆகிறது. இதன்பொருள் மிக்கத் தெளிவாகவே உள்ளது.

அருணாசலம் என்பதன் ஏனைப் பொருண்மை முன் விளக்கம் கண்டுள்ளன. அவற்றையும் அறிந்துகொள்க.

உங்கள் மேல் வாசிப்புக்கு: ( உசாத்துணைக்கு)

ஆசலம் என்பது:   https://sivamaalaa.blogspot.com/2017/01/blog-post_65.html .

கடத்தற்கு அரியவையும் கடுமையானவையும் https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_2.html

அருணன் அருணாசலம் அருணோதயம்  https://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_27.html

 

 குறிப்புகள்.

[ஒருசொல்லை ஒரே பொருளில்தான் கையாள வேண்டுமென்பதில்லை. சொல்லுக்கும் சொற்றொடருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளிருக்கலாம். இதை உணர்ந்தோர் பலர் எனினும், யாம் பெரிதும் போற்றுவது வழக்கறிஞர்களைத் தாம். எடுத்துக்காட்டாக, சிங்கை வழக்கறிஞர் திரு டேவிட் மார்ஷல் அவர்கள். Trafficking in drug is not the same as "possession of the drug  for the purpose of trafficking " என்பதை விரித்து வாதிட்டு, மரண தண்டனையிலிருந்து குற்றவாளியைக் காப்பாற்றியவர். மேலும் ejuisdem generis என்ற இலத்தீன் சொற்பொருள் விளக்க நெறியைத் தம் வழக்குரையில் பயன்படுத்தி வெற்றிபெற்றவர். அண்மையில் ஒரு தாளிகைக் கட்டுரையின்மேல் நடந்த விவாதத்தில் line of actual control என்பது தற்போது யார் எவ்விடத்தில் குறித்த காலத்து ஆள்கின்றாரோ  அவ்விடம் (அந்த நிலம்) அவர்வயம்  இருக்கிறது என்று  பொருள் என்பதை எடுத்துச்சொல்ல நேர்ந்தது. இலக்கியத்தில் மட்டுமின்றி வாழ்வின் எப்பகுதியிலும் எந்நிலையிலும் பொருள்விளக்கம் என்பது முன்னிற்கும் ஒரு தேவையாய் உள்ளது.

இதை எதற்காக இங்கு சொல்கிறோம் என்றால், யாம் முன்னொரு முறை சொல்லாமல் விட்ட பொருள், ஆங்கு இல்லை என்பதாகாது என்பதற்கே ஆகும்.

சுருக்கம் கருதியும் சில பொருண்மைகள் விடுபாடு கண்டிருக்கலாம். அது ஏன் விடுபட்டது என்பது யாம் வெளியிடாத ஒன்றே ஆகும்.]


மெய்ப்பு:  பின்னர்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.