பாயசம் என்பது ஓர் இனிப்புக்கஞ்சி போன்றது. இது
பெரும்பாலும் பாசிப்பயறு வேகவைத்து, தேங்காய்ப்பால்
சர்க்கரை, சவையரிசி (ஜவ்வரிசி) என்பன சேர்த்துக்
காய்ச்சப்படுவது. இப்போது வேறு பொருள்கள்
சேர்த்தும் காய்ச்சப்படுவதுண்டு. எ-டு: பால்பாயசம்.
பாயசம் என்ற சொல்லில் இரண்டு உறுப்புகள்
உள்ளன. அவை: 1. பயறு ( பாசிப்பயறு அல்லது
பாசிப்பருப்பு. பச்சைப்பயறு என்போரும் உள்ளனர்.)
2. அசித்தல்(உண்ணுதல் ) > அசி+ அம் = .
பயறு + அச + அம் > பய + அச + அம் = பாயசம்.
பயறு என்பதில் றுகரம் கெட்டது அல்லது
வெட்டுண்டது. பய என்பதன் மூலமும் பை > பைம்மை,
என்பதே. பொருள் பச்சை.[ இதற்கு இளமை என்ற
பொருளும் உள்ளது. எடுத்துக்காட்டு: பையன்.
பாயி என்ற மலாய்ச்சொல், பாய் என்ற ஆங்கிலச்
சொல், பயல் என்ற தமிழ்ச்சொல் - எல்லாம்
ஆய்வு செய்யுங்கள். இப்போது இவற்றைத்
தவிர்ப்போம்.]
பயறு என்பதன் சொல்லமைப்புப்பொருள் -
பச்சையானது, முளைக்காதது (at the time)
என்பதுதான். பாசிப்பயறு முளைக்க
வைக்கலாம்.
பய + அச + அம் = பாயசம் என்பதில் முதனிலை
நீண்டது. பய + இ = பாசி என்பதிலும்
அங்ஙனமே நீண்டு, ய - ச என்றபடி திரிந்தது.
இளமைக்காலத்திலே பயிர்போல் வளர்வது
தான் பாசம். பச்சையான அன்பு. முதிர்ச்சியில்
நிலைக்குமா என்பது ஐயத்துக்குரியது. சில
உடன்பிறப்புகளிடை நிலைக்கும். சிலர் சண்டை
போட்டுக்கொண்டு எதிரிகளாய்விடுவர்.
அதனால்தான் பாசமலர் என்றனர். மலர்
காய்வதும் உதிர்வதும் உலக இயற்கை.
முதன்முதல் பாயசம் காய்ச்சிய மக்கள்
பெரிதும் பச்சைப்பயற்றையே பயன்படுத்தினர்
என்பது இவ்வாய்விலிருந்து தெரிகிறது. பிற்பாடு
பால்பாயசம், அரிப்பாயசம், கோதுமைப்பாயசம்,
மாவிழைப்பாயசம்( சேமியாப்பாயசம்) என்று
பொருளுக்கும் திறனுக்கும் ஏற்ப சமையல்கலை
முன்னேற்றம் கண்டது. கண்டபோதும் பாயசம்
என்ற பெயர் நிலைத்தது.
சீலை என்பது சீரை என்பதில் நின்று திரிந்தது.
சீரை என்றால் மரப்பட்டை. மனிதன் காட்டானாக
இருந்தகாலத்தில் மரப்பட்டைக் கோவணம்
அணிந்தான். பின் துணி நெய்யக் கற்றுக்கொண்ட
போதும் சீலை என்ற சொல்லையே பயன்படுத்தி,
பின் சேலை ஆக்கிக்கொண்டான். அதுபோல
பிற பல.
அறிக மகிழ்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.