Pages

புதன், 27 மே, 2020

இன்று ஐந்நூற்று முப்பத்து மூன்று.

சிங்கப்பூர் நிலையை உன்னிப்
பாடிய எண்சீர் விருத்தம்.




இன்றுமட்டும் ஐந்நூற்று முப்பத்து மூன்றாம்
இணையற்ற நல்லோர்க்கு முடியுருவித் தொற்று.

என்றுமுற்றும்  பின்மீண்டிங் கில்லையென வாகும்
இனிதான நன்னிலையாம் தனியின்ப முற்று.

கொன்றுகுவித் துப்புவியின் மக்கள்பெரு வாழ்வைக்
கூழாக்கி மாய்த்திட்ட பாழான கொல்லி

என்றுமிருந்  திட்டதிலை என்பேனே வேண்டாம்
எளியோர்க்கே இதுதந்த எய்த்துழல்வை உள்ளி.




பதப்பொருள்

சொல்லில்தான் பொருளானது பதிந்துள்ளது.
அதனால் அது பதமெனப் பட்டது.

பதி  + அம் = பதம்.
தி  என்பதில் உள்ள இகரம் கெட்டது ( மறைந்தது).
அம் என்பது அமைவு, அமைப்பு என்பன குறிக்கும் விகுதி.
மிகுந்து பொருள்கூட்டுவது விகுதி.  மிகுதி> விகுதி.
மிஞ்சு > விஞ்சு என்பது போலும் திரிபு.

முடியுருவி( னி ) -  முடியின் உருவில் அமைந்த கொரனா
(கோவிட்19) நோய்நுண்மி, (வைரஸ்)

முற்றும் -  தீரும்.

பின்மீண்டிங்கு - இனிமேல் இங்கு

கூழாக்கி - திடத்தன்மை நீக்கிக் குழைவு  ஆக்கி

கொல்லி -  கொன்றிடுதலை நோக்கமாகக் கொண்டது.

என்றுமிருந்  திட்டதிலை - முன் அறியாத ஒன்று.

எய்த்துழல்வு -  துன்பநிலை.


நோயிலிருந்து தப்பும் வழிகளை விடாப்பிடியாகப்
பின்பற்றுங்கள். அரசு ஓரளவுதான் உதவமுடியும்.

இதோ இன்னொரு கவி உங்களுக்கு:

விடுதிகள் தங்குவோர் விட்டிலர் தாம்தமக்குள்
இடைவெளி  அன்னதால் இத்துணை நோய்ச்சீற்றம்
படுதுயர் கேட்டவர் பாகினைப்  போலுருகக்
கடினமே நாட்டிலிக் காலம் செயலறியோம்.


இது அடிதோறும் வெண்டளையாகவும் அல்லாதவிடத்து
வேற்றுத்தளையாலும்  அளவடிகளால்  புனையப்பெற்ற பாடல்.


பதப்பொருள்

விட்டிலர் - விடவில்லை.
அன்னதால் - அதனைப்போல் காரணங்களால்
படுதுயர் - படும்துயர்.
செயலறியோம் - என்ன செய்யலாம் என்று தெரியவில்லை.
கடினமே - கடுமையான நிலையே.

தட்டச்சுப் பிறழ்ச்சிகள் பின் சரிசெய்யப்படும்
இப்போது எதுவும் காணப்படவில்லை.
இன்று இடுகை புதுமுகத்துடன் வருகிறது
என்று அறிகிறோம். மென்பொருட் பின்னடைவுகள்
இருந்தால் பின்னூட்டம் இடுக, அல்லது
மின்னஞ்சல் அனுப்புக.

நன்றி. வணக்கம்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.