Pages

வியாழன், 30 ஏப்ரல், 2020

ஸ்தாபித்தல் அடிச்சொல் எது?

இப்போது நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள்? அல்லது இருக்கின்றீர்கள்? அந்த இடத்தில் நீங்கள் உங்களையும் உங்கள் நடவடிக்கைகளையும் நன்றாகவே நிறுவிக்கொண்டிருப்பீர்கள். நிரந்தரவாழ்நராக இல்லாவிட்டாலும்கூட, தற்காலிகமாக ஓரளவு நிறுவிக்கொண்டுதான் அங்கு இருக்கின்றீர்கள். நீங்கள் உங்களை நிலைப்படுத்திக்கொள்வதென்பது இடத்துக்கும் காலத்துக்கும் நடவடிக்கைகளுக்கும் ஏற்ப வேறுபடுமென்பது சொல்லாமலே புரியக்கூடியதாகும்.

அந்த இடத்திலிருந்து நீங்கள் இன்னோர் இடத்துக்குச் செல்வதானால், நீங்கள் உங்களை ஆங்கு மறுநிறுவுதல் செய்துகொள்ளவேண்டும். வேறுவிதமாகச் சொல்வதானால், தாவிச் சென்ற புதிய இடத்தில் உங்களை நீங்கள் தாவித்துக்கொள்ள வேண்டும்.

தாவுதல் என்ற சொல்லிலிருந்து தாவித்தல் என்பதும்,  அதிலிருந்து தாபித்தல் என்பதும் தோன்றின..  வகரம் பகரமாய்த் திரியும்.  இந்த ப-வ திரிபென்பது தமிழில் மட்டுமின்றிப் பிற மொழிகளிலும் காணப்படுவதாகும். தாவிய நிலையில் எங்கு பறந்துவிட்டாலும் கூட ஓரிடத்தில் இறங்கிக் காலூன்றவே வேண்டும்.  அந்தக் காலூன்றுதலையும் உள்ளடக்கித்தான் தாபித்தல் - ஸ்தாபித்தல் என்று மொழியில் சொல் ஏற்பட்டுள்ளது.

தாவுதல் என்பது வன்மையுடன் தாவுதலையும்,  மென்மையாகத் தாவுதலையும் முயன்று தாவுதலையும்  முயற்சி வெளியில் அறியப்படாமல் தாவுதலையும் -  ஆக பலவகைத் தாவுதல்களையும் குறிக்கும் என்பதை அறிக.   ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு ஓர் உறுப்பினர் தாண்டும் போது அந்தத் தாவுதலில் வன்மை தென்படுவதில்லை. மாறாக மென்மையும் தந்திரமும் காணப்படலாம்.  ஆகவே தாவுதல் என்னும்போதும் தாபித்தல் என்னும் காலையும் எப்போதும்  வன்மை இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அதை இப்போது மாற்றிக்கொள்ளுங்கள்.

தா என்பது அடிச்சொல். அது பெயர்ச்சிக் கருத்தை அடிப்படையாக உடையது ஆகும். பெயர்ச்சி என்றால் ஓரிடத்திலிருந்து இன்லொரு தலத்துக்கு மாறுதல். அது கண்காண் பொருளாகவும் இருக்கலாம். காணாப் பொருளாகவும் இருக்கலாம்.  அன்பைத் தா என்றால், அன்பு திடப்பொருளில்லை, இருப்பினும் மக்கள் அப்படியும் சொல்லை வழங்குகிறார்கள். பறப்பது என்ற சொல்லும், இவ்வாறு மனவுணர்வைக் குறிக்கக்கூடும்.  "கற்பனையில் பறந்துவிட்டாய்"  என்றால், கற்பனை என்பதும் திடப்பொருளன்று,  பறப்பது என்பதும் நடப்பதன்று. நாம் பேசும் எந்த மொழியும் இத்தகு  வன்மை - மென்மை, காட்சியுண்மை, காட்சியின்மை என்னும் எதையும் வெளிக்கொணர வல்லது ஆகும். இதில் பேசுவோனே ஊர்தி செலுத்துவோன் ஆவன்.

இப்போது பெயர்ச்சிக் கருத்து மேலும் வளர்கிறது.  தா என்பதினின்றே ----

தா -  தாண்டு;
தா - தாவு

என்று தமிழ்ச்சொற்கள் அமைவுறல் காணலாம்.  தாவுமுன் ஓரிடத்தில் நின்றுகொண்டுதான் இருப்பான்.  அவனும் தன்னைத்:

தான்

என்றுதான் கூறுகிறான்.

தா என்பது (கொடு)  குறுகித் தரு என்று ஆகிறது.  தருதல் என்ற வினை அங்கு உருவாகிறது.  குகையிலும் காட்டிலும் வாழ்ந்த பண்டைக் கால மனிதன், முதலில்

தா என்றானா?  தரு  என்றானா? தார் என்றானா?  எதுவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

தரு > தரை  ( தரு+ ஐ)  :  பல வளங்களையும் பலன் களையும் தருவதாகிய மண்.

தரு > தரு. (பொருள்விரி).  பழம், காய், இலை என இன்ன பிறவும் தருவதான மரம்.

தரு > தார் >  தார்+ அணி =  தாரணி.   எல்லாம் தரும் அழகுடைய இப்பூமி.

தரு + அணி = தரணி.

இந்த வினைச்சொற்களைக் கவனியுங்கள்:

அதைத் தா.
அதைத் தரு-கிறார்.
அதைத் தாரார்.

ஒருவன் வேடம் தரித்தால், அவன் ஒரு காட்சியைத் தருகிறான்.  அவன் வேடதாரி.   தரு> தரி > தாரி.

எடையை அறியத் தருவது  தரு+ ஆசு = தாராசு.  ஆசு என்றால் ஆக்கம், பற்றிக்கொள்ளத் தருவது.

அறிக மகிழ்க.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.