Pages

வியாழன், 18 ஜூலை, 2019

குணமென்னும் சொல்.

குணம் என்ற சொல்லின் அமைப்பையும் அது எவ்வாறு பண்பு என்னும் பொருளை அடைந்தது என்பதையும் தெரிந்துகொள்வோம்.

குணித்தல் என்பது இதற்குரிய மூல வினைச்சொல்.

குணித்தல் என்பது கணித்தல் என்பதன் வேறன்று.   கணி என்பது குணி என்றும் திரியும்.

ஒரு மனிதன் எவ்வாறான நடவடிக்கைகளை உடையவன் என்பதும் ஒவ்வொரு நிகழ்விலும் எப்படி நடந்துகொள்கிறான் என்பதும் பிறரால் கணிக்கப்படுகிறது அல்லது அளவிடப்பட்டு அறிந்துகொள்ளப்படுகிறது.

வாசலுக்கு வந்து உணவு கேட்டு இரந்து நிற்பவன் ஒருவனுக்கு வீட்டிலிருப்பவன் பரிந்து ஏதேனும் உண்ணக் கொடுக்கிறான். இதைப் பார்ப்பவர்கள் அவன் இரக்க குணம் உடையவன் என்று கணிக்கிறார்கள் அல்லது குணிக்கிறார்கள்.  (  கணி =  குணி முன்னர் கூறப்பட்டது.  )

குணி +  அம் =   குணம்.

அம் விகுதி சேர்க்க,  குணி என்பதன் ஈற்றில் நின்ற இகரம் கெட்டு,  குண் + அம் =  குணம்   ஆகின்றது.

குணி என்ற வினைச்சொல்லைத் தருவிக்காமல் குண் என்ற அடிச்சொல்லினின்றே குணம் என்னும் சொல் அமைதல் கூறினும் அதுவும்  ஏற்புடைத்ததே ஆகுமென்பதறிக.

எதையும் கணிப்பதோ குணிப்பதோ கண்களினால் அறிந்துகொள்வதே ஆகும். பின்னர்தான் மனம் அதை உருவப்படுத்துகிறது.  ( மனம் என்ற ஒன்று இல்லை என்பது அறிவியல் ).  உடல் முழுமைக்கும் இரத்தம் ( அரத்தம் )  என்னும் குருதியினை ஈர்த்து வெளிப்படுத்தி ஓடச்செய்யும் இருதயம் (  ஈர் + து + அ + அம் ) மனம் அன்று.   அது அரத்த ஓட்டம் ஏற்படுத்தும் ஓருறுப்பே ஆகும்.  இந்த இருதயம் என்ற சொல்லின் வினையடி ஈர்த்தல் என்பதே.  ஈர் என்பது இர் > இரு என்று குறுகிற்று.  தோண்டு >  தொண்டை,  சா > சவம் என்பன போலுமே ஆம்.

கண்களே  முதல் அறிகருவி ஆதலின்,   கண் > கணி > கணித்தல் என்று சொல் அமைந்தது.   கணித்தல்,  கணக்கு, கணிதம் என்னும் பல்வேறு  சொற்கள்  கண் என்பதனடிப் பிறந்தன அறிக.  கண் என்பதில் இகரமாகிய வினையாக்க விகுதி இணைந்து,  கணி என்பது அமைந்தது.   இகரம் இங்கனம் வினையை உண்டாக்குவது   அளைஇ,  நசைஇ  என்னும் பழஞ்சொற்களின் வாயிலாகவும் அறிந்தின்புறலாம்.

அகரத் தொடக்கத்தன இகர மாதலும்  பின்னது முன்னதாதலும் திரிபில் உளது  என்பதுணர்க.  எடுத்துக்காட்டு:  அண்ணாக்கு -  உண்ணாக்கு;   அம்மா> உ(ம்)மா.

குணம் என்பதுபோல் அமைந்ததே கணமென்னும் சொல்லும்.  கணம் என்பதற்குப் பல பொருளுண்டு.  எனினும் அடி கண் என்பதே.   அதைப் பின்னொரு நாளில் நுணுகி அறிவோம்.

குணமென்பது பல மொழிகளிலும் புகுந்து சேவை கண்ட சொல் ஆகும்.  இதுவும் தமிழர்க்குப் பெருமை தருவதே. 

தட்டச்சுப் பிழை தன்திருத்தப் பிழைகள் பின்னர் கவனிக்கப்படும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.