Pages

வியாழன், 9 மே, 2019

அயற்சொற்களும் அகச் சொற்களும்.

காம்,  ஏம், தீம், வேம் என்ற வடிவங்களில்  தமிழ்ச் சொற்கள் உள்ளன.   ஆய், மாய், காய் என்று யகர ஒற்று வந்து முடிந்த சொற்கள் இன்னும் வழக்கில் உள்ளன.  நாய் என்பதை மறத்தல் கூடுமோ?

நாய் என்பதற்கு எதுகையாய் வரும் கூய்   ஆய் என்பன  பெயர்ச் சொற்களாய் இல்லாமல் எச்ச வினைகளாய் உள்ளன.  எனினும் கவி எழுதுங்கால் கருத்தோட்டத்தினாலும் பொருட்புனைவினாலும் இவற்றை எதுகையாம் படி அமைத்துக்கொள்வதில் மெத்தக் கடினமொன்றும் தென்படுவதில்லை. ஆய் என்ற வள்ளலின் பெயர் பெயர்ச்சொல் என்றாலும் இச்சொல்லை அவ்வாறு பெயர்ச்சொல்லாகக் கவியினுள் பதிய ஆய் ஆண்டிரனையும்  இழுத்துப் போடவேண்டும். இப்படித் திறமையாகச் செய்யப்பட்ட கவிதை அல்லது பாடலே:   " கரிகாலன் கட்டிவைத்தான் கல்லணை" என்ற பாடலாகும்  ." கண்களுக்குள் என் கண்ணனைக் கட்டிவைத்தேன் " என்ற அடுத்த அடியோ ஒப்பீட்டு முறையில் இணைக்கப்பட்டதாகும்.  இன்றேல் கரிகால் மன்னற்கும் காதலிக்கும் உள்ள தொடர்பு,  அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் உள்ள தொடர்பைப் போன்றதே. செயலுவமையால் பொருள் ஒன்றின.

சொல்லாய்வில் றகர ரகர வேறுபாட்டினைக் கருத்தில் வைத்து அதற்குத் தேவைக்கு மேம்பட்ட முன்மை வழங்கி  உண்மை உணராது  இழிதல் காத்துக்கொள்ளுதல் வேண்டும்.  மொழியில் சொற்கள் பல்கிப் பெருகிய ஞான்று பொருட் குழப்பம் தவிர்க்க இவ்  வேறுபாடுகளின் தேவை மிகுந்தன. எனினும் உண்மை காண்டற்கு இவ்வேறு பாட்டினைக் களைந்துவிட்டு உற்றுணர்தல் என்பதே அறிவுடன் கூடிய உத்தி ஆகுமென்பதைப் புரிந்துகொளல் இன்றியமையாமை நோக்குக.

பிரச்சினை,  பிரேமை முதலிய சொற்களை ஆய்கையில் இத்தகு உத்தியே கைக்கொள்ளப் பட்டது. பிரச்சினை என்பதன் பொருண்மையில் " பிற சினை" உட்புகுந்து கலாம் விளைத்தலே கருத்தாகும். சினை என்றால் உறுப்பு,  அல்லது ஒரு பொருளமைப்பின் இயல்பான பகுதி.  இயல்பினது பொருத்தாமல் முரண்பட்டதொன்றைப் பொருத்தினால் அது பிற சினை பொருத்துதலாம். பிற சினை உட்புகவில் ஏற்படும் குழப்பமே  பிறச்சினை >  பிரச்சினை ஆனது.

மகிழுந்து ஒன்றில் பேருந்தின் உருளையைப் பொருத்திடில்  பிற சினையால் (பாகமல்லாதது  பாகமானதால் )  பிரச்சினையே. பிரச்சினை என்பதை பிரச்னை, பிரச்சனை, பிரச்சினை, பெறச்சென,  பிரஸ்னம் என்று எப்படி முகத்திரை இட்டு எழுதி மயக்கினாலும் சொல்லின் பிறப்பினில் மறப்பினையும் மறைப்பினையும் உள்ளுறுத்தல் இயல்வதில்லை. சீனியை ஜீனி எனினும் அதன் சீனத்தொடர்பினை அறுத்தல் கூடாமை போலுமே இஃதாம். சில்> சின்> சீனி என்று மாற்றுரையும் மாற்றுடையும் வழங்கி மயக்கின் அது ஓர் இருபிறப்பிச் சொல்லென அமைதி கண்டு ஒதுக்கிக்கொள்ளலாம்.  இத்தகு மாற்றுரைகளில் வரும் விளக்கவிரி ஒரு கருத்துக்குவை உருவாக்குதற்கும் நலமே செய்யும்.

ஏம் என்பது காத்தல் அல்லது காவலாய் இருத்தல் என்பதைக் குறிக்கும் ஒரு பழந்தமிழ்ச்சொல்.  இன்னொரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணினை விரும்பி அவளைத் தனக்கெனக் காத்து ஒதுக்கம் செய்ய முற்படுதலே பிற ஏமை ஆகும்.  இதுவே பின் பிரேமை ஆயிற்று.  ஒரு சொல் இயல்பில் திரிபு கொள்ளாமல் ஆவியழுத்தப் பானையில் இட்டுச் சமைத்ததுபோலச் செயற்கையில் திரிபுறுத்தப்படுதலைச் செந்தமிழ் நூலோர்  பெரிதும் விரும்பவில்லை போலும்.  மேலும் அச்சொல் முன்னரே உள்ள ஒரு பொருட்கு அல்லது கருத்துக்கு இடப்பட்ட கூடுதல் பெயரே ஆனது. காதல் காமம் போலும் சொற்கள் இருக்கையில் பிற ஏமை என்பதால் விளந்ததொரு புதுமை இலதென்று கருதினர் எனலாம். இவற்றைப் புறத்தினில் இட்டுச் செந்தமிழ் நலம் காத்தல் மேற்கொண்டோராயத் தம்மைப் பாராட்டிக் கொண்டனர் தமிழ்ப் புலவோர். பிரஞ்சு அறிஞர்  இலகோவரி ஆய்வில் இத்தகு சொற்களில் அயன்மொழியில் காணப்படும் சொற்றொகை மூன்றிலொன்றாம்.

உலகில் தமிழ்ச் சொற்கள் யாண்டும் காணக்கிடக்கின்றன.  சங்க நூல்கள் என்று நம்மிடை நிலவுவன சிலவே.  ஒரு மொழியில் எல்லாச் சொற்களையும் இவை உட்பொதிந்து இலங்குவன என்று எண்ணுதல் பேதைமையே. விடுபாட்டாலும் பிற்புனைவாலும் அவற்றுள் இலாதன மிகப்பல. ஒரு சொல் அதன் சொற்பிறப்பினால்  அல்லது சொல்வழக்கினால் தமிழென்று கண்டுகொள்ளப் படலாம்.  இத்தகு சொல்லைப் பயன்படுத்துதலும் படுத்தாமையும் புழங்குவோனின் விருப்பும் உரிமையும் ஆகும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.