Pages

திங்கள், 8 ஏப்ரல், 2019

அகிலமும் கைலாசமும்

தமிழ்மொழியை முற்றுமறிதல் என்பது முடியாத வேலை என்று  சொல்லலாம். எங்கெங்கு சென்று கற்றாலும் எல்லாமறிதல் இயலாமையினால். நாலுபேர் கூடி நன்மொழிகள் பேசிவிட்டுக் கலைந்து போவது வேறு.  மொழியறிதல் என்பது வேறு.

இல்லென்ற சொல்லொன்று உள்ளதே அது எங்கெங்கெல்லாம் உள்ளதென்பதை இப்போது கண்டு மகிழ முனைவோம்.  ஆயினும் எத்துணை முயன்றாலும் நாம் ஒன்றிரண்டை அறிந்துகொண்டால் அதுவே பேருவகை தருவதென்றுணர்வீராக.

அகிலம் என்ற சொல்லின் இடையில் இல் உள்ளது.

இல் என்பது இடம் என்று பொருள்படுவது.  இஃது இகரச் சுட்டடிச் சொல்.   இ என்பதிலிருந்து இல் தோன்றியது.   இல் எனின் இங்குள்ளது என்பது பொருள். இங்குள்ளது இடம்.  அதுதான் இங்கிருபதனைத்துக்கும் அடிப்படை. இடம் இல்லாமல் பொருளில்லை.

கண்ணில் இருப்பதென்ன என்ற வாக்கியத்தில் இல் என்பது இடப்பொருள் சுட்டும் உருபாக வருகிறது.   இடம் என்பதே இதன் அர்த்தம் என்பது விரிக்க வேண்டாதது.

அகிலம் என்ற சொல்லில்:

அ + கு + இல் + அம்  என்ற துண்டுகள் உள்ளன.  சொல்லின் இடையில் இல் இருப்பதை உணரலாம். 

அ =  அங்கு.
கு =  சேர்விடம் குறிக்கும் சிறுசொல். இது உருபாகவும் வரும்.  அவளுக்கு இவளுக்கு என்று சொல்லி அறிக.
இல் = இடம்.
அம் = விகுதி.   இந்த விகுதி அமைவு என்ற சொல்லின் அடிச்சொல் ஆகும்.

இதை இப்போது வாக்கியமாக மாற்றினால்:

" (இங்கிருந்து  )  அங்கு சென்று சேர்ந்தால் அதனில் உள்ள இட அமைப்பு"

என்றாகும்.  அங்கு என்பது தொடுவானாக இருக்கலாம்.  இது எல்லாம்
"அகிலம்."

அகிலம் என்ற சொல்லை அமைத்த அந்த இருண்ட காலத்துத் தமிழன் வானூர்தியிலோ துணைக்கோளத்திலோ பறந்து  பார்த்தானில்லை. இவையெல்லாம் அவனுக்குத் தெரியாதவை. அவனறிந்த மாத்திரத்தில் அவன்
சொல்லை அமைத்து விட்டுப் போயிருக்கிறான். சுழியனைப் பிட்டுப் பார்த்து உள்ளே சருக்கரையும் பயறும் இருப்பன கண்டு அறிந்ததுபோலுமே இச்சொல்லை நாமறிந்து கொள்கிறோம்.

அகலம் என்ற சொல்லும் இதுபோல் அமைந்ததே.  அ+ கு+  அல் + அம் = அகலம்.  அங்குபோய்ச் சேர்வது மட்டுமின்றி அவ்வெல்லையும் அல்லாத விரிவுடையது  என்று சொல்லிமுடித்து அமைந்ததே இச்சொல்.

உலகம் விரிந்தது ஆதலின் விரிவு குறிக்கும் அகலமென்னும் சொல்லினின்று அகிலம் என்னும் சொல் அரும்பியிருத்தல் கூடுமாதலின் இஃது  ( அகிலம் ) இருபிறப்பி ஆகும்.  அகலக் கருத்தே அகிலச் சொல்லுக்கு ஆக்கம் தந்திருக்கலாம்.  அல் என்பது இல் ஆனது. ஒன்றைப் பார்த்து இன்னொன்று அமைத்தல்.

இல் என்பதையும்   (  இடம் )   அல் என்பதையும்  ( அல்லாதது )  கொண்டு இவ்வளவு திறம்படச்  சொற்களை அமைத்துள்ளான் பண்டைத் தமிழன்.  காட்டிலும் மலைகளிலும் அருவி அருகினிலும் கடல் அருகினிலும் சுற்றித் திரிந்து  சிறுசிறு சொற்களைக் கொண்டு உரையாடிய அந்தக் காலத்துத் தமிழன் அவன். அவனையும் அவனமைத்த சொற்களையும் அறிய நீங்கள் உங்கள் இற்றை  நாகரிகத் துணைகளைக் களைந்துவிட்டு வெகுதொலைவு  காலச் சாலையில் பின்னோக்கிப் பயணிக்க வேண்டுமென்பதை மறவாதீர்.

அகல்+தல் = அகலுதல் என்ற வினையும் அதிலிருந்து அமைந்தது.  அகல்+ தல் = அகறல் என்று வருதலும் அமையும்.

தீவு என்பது நாற்புறம் நீர் சூழ்ந்து நிலத்தொடர்பு முற்றத் தீர்ந்த நிலத்துண்டு. தீர்வு> தீவு என்பதை அறிவுறுத்தினோம்.  தீராத தொடர்பு நிலம்  தீவு+ அகம் + அல் + -பு + அம் என்ற பல துண்டுகள் கூடிய சொல்லே தீபகற்பம்.   தீவக அற்பம் > தீபகற்பம்.  வகர பகரப் போலி.  இதில் அல் என்ற அன்மைச் சொல் பயன்பாடு கண்டுள்ளமை காண்க. தீவு என்ற சொல் தீவகம் என்றும் வரும்.  நிலத்துண்டின் அகத்தே தொடர்பு ஏதுமின்றி  அமைந்தது என்று பொருள். அகம் என்ற சொல் புனைந்து அதனால் வந்த சொல்லூதியம் சொற்பமே ஆகும். பெரிய பொருள்மாற்ற மெதுவும் ஏற்பட்டுவிடவில்லை. தீவற்பம் என்று அமைத்திருக்கலாம். தீபகற்பம் என்பது சற்று இனிதாய் உள்ளது.

கைலாசம் என்ற சொல்லிலும் கை + இல் + ஆய + அம் என்று இல் என்ற இடப்பொருள் வந்திருப்பது காண்க.  பக்கத்தில் சிவனாருக்கு இல்லாமாக அமைந்தவிடம் என்று பொருள்.  கை=  பக்கம்;  இல் = இடம்;  ஆய்  = ஆகிய. அம் = அமைப்பு, அல்லது விகுதி.   அந்தக்கையில் இந்தக்கையில் என்ற தொடர்களில் கை என்பது பக்கப்  பொருளை உணர்த்தும்.  ஆய > ஆச.

இனி இல் என்ற இடப்பொருள் அமைந்த சொற்கள் எங்கெங்கு விரவியுள்ளன என்பதைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.