Pages

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

வாதி பிரதிவாதி

இன்று வாதி பிரதிவாதி என்ற சொற்புழக்கங்களை உணர்ந்து இன்புறுவோம்.

பிரதி என்ற சொல்லைக் கண்டு மிரளவேண்டியதில்லை.

இதைப் படி என்ற சொல்லின் திரிபு என்று கூறிய அறிஞரும் உளர்.  ஒன்றுபோல் படிந்துள்ள இன்னொரு பொருள்தான் படி.  இதை ஏன் படி என்று கூறுகிறோம் என்றால் அது "படி" அமைந்துள்ளது. அதாவது எது முன் கண்டோமோ அதன் படியாகவே அல்லது படியே அமைந்துள்ளது.  நூற்படி என்றால் ஒரு நூலின் மாதிரியாகவே அமைந்துள்ள இன்னொன்று.  இதை ஆங்கிலத்தில் காப்பி என்று சொல்வார்கள். குடிக்கும் காபியை காபி என்று எழுதுவது நன்று.  அதைக் காப்பி என்று எழுதுவது அவ்வளவு பொருத்தமென்று சொல்ல மாட்டேன்.  காபி என்றொரு இராகமும் உண்டு. இனிய இந்த இராகம் நீங்கள் கேட்டிருக்கலாம்.

படி என்ற சொல்லே பிரதி என்று திரிந்தது என்பர்.   ப > ப்ர.  டி > தி  எனவே ப்ரதி > பிரதி ஆயிற்று.   ஆகவே தொலைப்படி  என்பது தொலைப்பிரதி என்று வரும்.

படி என்பது படு என்ற சொல்லினின்று திரிந்தது ஆகும்.  கொஞ்சம் மாவை எடுத்துத் தூவுங்கள். அந்த மாவு காற்றின் வேகத்துக்கு ஏற்பத் தரையில் போய்ப் படுத்துக்கொள்ளும். மாவு தரையில் படும், அப்புறம் படுக்கும்:  படுத்துக் கொள்ளும்.   படு > படுதல்;  படு> படுத்தல்.  தன்வினை பிறவினை வடிவங்கள். இவ்வாறு மனிதன் தரையுடன் ஒட்டிக்கிடப்பதுபோல் மாவும் ஒட்டிக் கிடத்தலால் படு > படி > படிதல் ஆனது. படி > படிவு > படிவம்.   படிந்தபடியே அமைவது படிவம்.  இது திரிந்து வடிவம் என்றும் ஆவதானது பகர வகரப் போலி என்பது இலக்கணமாகும்.  படம் என்பது படியாக ஒன்றன் படியே அமைந்தது  என்று உணர்க.

ஒன்று இன்னொன்றில் போய்ப் பட்டுக்கொண்டது என்றால் மாட்டிக் கொண்டது என்று பொருள்.  படை என்ற சொல்லும் ஒரு சார்பு வீரர்கள் இன்னொரு சார்பு வீரர்களுடன் போய் அடித்துக்கொள்ளும் செயலில் மாட்டிக் கொண்டவர்களைக் குறிப்பது என்பதை எளிதின் உணரலாம்.   படு > படை ஆகும்.  படு என்பது பலபொருள் ஒருசொல்.   அதாவது பல அர்த்தங்களைத் தரும் ஒற்றைச் சொல் ஆகும். இனிப் படுதா என்பது ஒரு பொருளை மூட இன்னொன்று அதன்மேல் முழுதும் படும்படியாக போர்த்தபடுவதற்குப் பயன்படும் இரட்டுவகை .  இரட்டு என்பது ஒற்றை இழையாக இல்லாமல் இரட்டை இழையாக நூற்கப்பட்ட கடினவகைப் போர்வை.  போர்வை என்பது மனிதன்மேல் போர்த்துவதற்கும் ஏனைப் பொருள்கள் மேல் போர்த்துவதற்கும் பயன்படுவது. தரையில் விரிப்பதும் தரையைப் போர்த்துவதே ஆகும். ஒன்றில் படும்படியாகத் தரப்படும் கடிய நெயவு வகையே படுதா.  படும்படி தா என்பதே இதன் அமைப்பு,   வாய்தா என்பதும் இப்படி அமைந்ததே.  வருவாயில் ஒருபகுதி தா என்பது வாய்தா ஆனது.  இதில் வரு என்பது தொகுந்து நிற்கின்றது.  முதற்குறைச் சொல். தா என்ற ஏவல் வினை இங்கு முதனிலைத் தொழிற்பெயராய் நிற்கின்றது.   ஆனால் மாதா என்ற சொல் இப்படி அமையவில்லை.  மா:  அம்மா என்பதன் முதற்குறை.  தா என்பது தாய் என்ற சொல்லின் கடைக்குறை. இது மா+ தா >  மாதா ஆனது. இது ஒரு பகவொட்டுச் சொல். ( போர்ட்மென்டோ)  ஆகும்.

வாதி என்பது உண்மையில் வகுந்து அல்லது பகுந்து அல்லது பிரிந்து நிற்பவன்.  வகு >வகுதி > வாதி.   இது  பகுதி > பாதி என்பதுபோலும் சொல் அமைப்பு ஆகும். வாதம் செய்தலின் வாதி என்பதும் பொருந்துவதால் இது ஓர் இருபிறப்பி ஆகும்.  பிரதிவாதி என்பவன் அவனின் பிரிந்துநின்று வேறாகப் பேசுவோன் ஆகும். பிரிதுவாதி என்ற பதத்தை எளிதில் புரிந்துகொள்வதானால் அதைப் பிரிந்து வாதி என்று சொல்லிப் பார்த்து உணரலாம். இது படி என்ற பிரதி அன்று.  பிரிதல் அடிப்படையில் பிரி.> பிரிது > பிரிதுவாதி > பிரதிவாதி என்று மருவியதை உணர்க. பிரிது என்பது பிரிந்து என்பதன் இடைக்குறை என்று இலக்கணம் கூறுக.  பிறிது என்பது பிரிது என்று மாற்றி எழுதப்பெற்றது என்று கொள்ளினும் ஆகும்.  பிரி, பிற, பிறிது என்பவெல்லால் பில் என்ற ஒரே அடியில் பிறந்த பல்வேறு வடிவங்கள் ஆதலின் இவற்றுள் யான் காணும் ஓர் வேறுபாடு இலதாதல் உணர்க. பிறத்தல் என்ற சொல்லும் ஒன்று ( தாய்) இன்னொன்று ( பிள்ளை) -  பிற (பிறிது )  ஒன்று ஆவதே ஆகுமென்பதையும் காண்பீர். (பிற என்பது பெயராம்போது பன்மை வடிவம்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.