Pages

வியாழன், 3 ஜனவரி, 2019

அவசரம் ஒரு விளக்கம்

இப்போது அவசரம் என்ற சொல்லைப் புரிந்துகொள்வோம்.
இச்சொல்லில் அவம்  எனற்பால தொரு சொல்லும் சரம் எனற்பாலதொரு சொல்லும் இணைந்துள்ளன.  ஆகவே இதைக் கூட்டுச் சொல் என்று கூறலாம். அதாவது இருசொல்லொட்டுக் கிளவி ஆகும்.  ( ஆங்கிலம்:   compound word             ).

அவம் என்ற சொல்லை நுணித்துப்  பார்க்கின்  ( focus செய்யின்)  அதன் பகுதி  அவி என்பது புரியும்.

அவி + அம்   =   அவம்.

சில சமயங்களில் நெருப்பில் இடாமலே சில இலைகள், கீரைகள் காய்கறிகள் வெம்மையினால் அவிந்து விடுதல் காணலாம்.   அவிதலின் பின் பயன்பாட்டுக்கு ஒத்துவராதனவாகிவிடும்.   ஆகவே  நாம் வைத்திருந்தவை அவமாகிவிட்டன.

அவி அம் > அவம் என்பதில் அவி என்பதன் இகரம் கெட்டது அல்லது தொலைந்தது.    அதனால் அது அவ் என்ற தற்காலிக உருவைஅடைகிறது.  வ்+ அ =  வ ஆதலால் அ (வ் + அ ) ம் =  அவம்   ஆகிறது.

அவல் (  அவி + அல் ) என்பதும் இத்தகு அமைப்பினதே.   அவியல் என்ற சொல் இகரம் கெடாது நின்று இன்னொரு சொல்லைத் தந்தது அறிக.

மனோன்மணீயம் சுந்தரனார் ஒரு வெண்பாவில்:

" நாடகமே செய்தற் கிசைந்தாய்  அதற்கிசைய
ஆடுவம்வா நாணம் அவம் "  என்பார்.

இதற்கு நாணம் கெடுதல் தரும்,   வேண்டா என்று பொருள்.

இனிச்  சரம் என்பதென்ன?

ஒரு மலையிலிருந்து நீர் சரிந்து விழுந்து அருவியாகிறது.  நீர் சரமாக ஒழுகுகின்றது.   சரம் என்பது சரி+ அம். இதுவும் ரிகரத்தில் நின்ற இகரம் கெட்டு அம் என்னும் விகுதி பெற்று அமைந்த சொல்லே ஆகும்.  திருமண வீட்டில் சரமாக அலங்கார விளக்குகள் ஒளிர்கின்றன.   வரிசையாக இருத்தலால்   சரம் என்று சொல்கிறோம்.  சரஞ்சரமாய்க் கோத்து வைத்தேன் என்று பேசுவதைக் கேட்டிருக்கலாம்.  நீர் போன்றவை சரமாகவே ஒழுகும் ( சரியும்). இதனாலே சரம் என்பது வரிசை என்ற பொருண்மை பெற்றது.

அவசரம் அல்லது விரைவில் சரம் கெட்டுப்போகிறது.  வரிசை ஒழுங்கு இல்லையாகிறது. இதன் காரணம் விரைதல் அல்லது வேகமாதல்தான்.

விரைவும் அதன் காரணமாகிய வரிசைக் கேட்டிலும்  இது வரிசைக்கேடு என்ற சொல்லமைப்புப் பொருளைக் கொண்டு, அதைக் குறிக்காமல் அதன் காரணத்தைக் குறித்துப்    பொருள்தாவல் மேவிய சொல்.

இதன் அமைப்புப் பொருளில் இது இல்லையாதலின் இது திரிசொல் ஆகும்.
தொடர்புடைய வேறுபொருள் மேய நிகழ்வினால் என்றுணர்க.

இப்படி அமைப்புப் பொருளில் விலகி நின்று தொடர்புடைய வேறுபொருள் சுட்டிய சொற்கள் மொழியில் மிகப்பல.  அவ்வப்போது வந்துழிக் காண்க.

மறுபார்வை பின்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.