Pages

செவ்வாய், 22 ஜனவரி, 2019

இல்லமொழி தமிழ்


வீதம் என்ற சொல்லைச் சிந்திப்போம்.

தமிழ் அதன் தொடக்க காலத்தில் பல குழுக்களால்பேசப்பட்டு வந்த மொழி என்றே ஒரு வரலாற்றாசிரியன் முடிவுக்கு வரவேண்டும். அந்த முடிவுக்கு அவன் வராமல் ஏதேனும் கூறுவானாகில் அவன் தேர்வில் பட்டங்கள் பெற்றிருக்கலாம்வேறுமொழிகளைக் கற்றிருக்கலாம், அவனுக்குத் தமிழ் வரலாறு  சரியாகத் தெரியவில்லை என்றுதான் பொருள்.

தமிழ் மொழியில் திரிபுச் சொற்கள் மிக்கிருந்தன என்பதே உண்மை. இதனாலன்றோ தொல்காப்பியனார் தம் சொல்லதிகாரத்தில் இயற்சொற்களுக்கு அடுத்தபடியாகத் திரிசொற்களைச் சொல்லுகிறார். அதற்கடுத்த நிலையையே வடசொல் என்று தமிழ் நாட்டு மரத்தடிகளில் வழங்கிய சொற்களைக் கூறுகிறார். வடம் என்பதற்கு உள்ள அர்த்தங்களைக் காணின் இது தெற்றெனப் புலப்படும். தொடார்பற்று வடக்குத் திசையில் வாழ்ந்த மக்களை அவர் குறிப்பிட்டார் என்று சொல்வதற்கில்லை.

தமிழ் என்பதற்குப் பற்பல சொல்மூலங்களை அறிஞர்கள் கூறியுள்ளனர். ஒரு நூற்றுக்கு மேற்பட்டவை கிட்டலாம். தமிழ் என்பது தனித்து நிற்கும் மொழி என்று கூறுவதும் உண்டு. இதற்குக் காரணம் : தமி என்பது தனி என்ற பொருளுடையதாக இருப்பதுதான். தன் என்பதிற் பிறந்த தனி என்று சிந்திப்பதைவிட தம் என்ற பன்மை வடிவிற் பிறந்த தமி என்றுதான் சிந்திக்கவேண்டும். தமி என்று எடுத்துக்கொண்டால் பன்மை வடிவானமையால் பல குழுக்களால் பேசப்பட்டு வந்த மொழி என்று கொள்ளுதல் வேண்டும். அதுவும் இக்குழுக்கள் தங்கள் இல்லத்தில் பேசிய மொழியாதல் வேண்டும். இப்படிச் சிந்தித்த கமில் சுவலபெல்லும் தேவநேயப் பாவாணரும் இதைத் தம் இல் மொழி என்று கூறினார்கள். தமில் ( தம் + இல் ) என்பதே தமிழ் என்று திருத்தமுற்றது என்'கின்றனர். இது உண்மையானால் இல்ல மொழியுடன் இல்லத்துக்கு வெளியில் வேறு மொழியும் வழங்கி வந்ததென்று பெறப்படும். அது அல்லது அவை எந்த மொழி(கள் ) என்று தெரியவில்லை, தம் என்று பன்மை வடிவிலிருந்து சொல் தோன்றியிருப்பதால் பல குழுக்களின் மொழி என்பது தானே பெறப்படுவதுடன், அவற்றுள் திரிபுகள் இருந்தன என்பதும் பெறப்படும். ஆகவே தொல்காப்பியர் திரிசொற்களை அடுத்துக் கூறியது ஏனென்பதுவும் பெறப்படும். இல்ல மொழி என்றாலே வேறுமொழிகளும் நடமாடின என்று பொருள்கொள்ள வழிவந்துவிடும்.

இதனாற்றான் விழுக்காடு குறிக்கும் வீதம் என்ற சொல் பலவாறு திரிந்தும் ஓர்முடிபு கொள்கின்றது என்பது நம் சிந்தனைக்குள் வருவதை அகற்ற முடியவில்லை. இன்னும் எண்ணிறந்த சொற்களும் இப்படியே ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.